Tuesday Oct 15, 2024

சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு அமிர்தகலசநாதர்(அமிர்தகடேஸ்வரர்) திருக்கோயில் சாக்கோட்டை (திருக்கலயநல்லூர்) – 612 401. கும்பகோணம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-2414 453, 98653 06840,9788202923

இறைவன்

இறைவன்: அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர் இறைவி: அமிர்தவல்லி

அறிமுகம்

திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம். தேவாரப்பாடல் தலங்களில் இது 131வது திருக்கோயில் ஆகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 68ஆவது சிவத்தலமாகும். கோட்டை சிவன் கோயில் என்பது நடைமுறைப் பெயர். திருத்தலப்பாடல் : சுந்தரர் அருளியது. ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலசம் இங்கு தங்கியதால் கலசநல்லூர் என அழைக்கப்படுகிறது. சாக்கியர் (பௌத்தர்கள்) இங்கு அதிகம் வாழ்ந்ததாலும், சாக்கிய நாயனாரால் வழிபடப்பட்ட தலம் என்பதாலும் சாக்கியர் கோட்டை என அழைக்கப்பட்டு அதுவே பின் மருவி சாக்கோட்டை என ஆனது என்பர்.

புராண முக்கியத்துவம்

காஞ்சிபுரம் அருகே சங்கமங்கையில் மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார். எப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்றார். வழியில் ஒரு லிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக்கண்டு மனம் வருந்தினார். லிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் எதுவும் இல்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து “நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்து லிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், வீசிய கல்லை மலராக ஏற்றுக்கொண்டார். இதே போல் தினமும் லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என நினைப்பார்கள். ஆனால் சிவன் ஒருவருக்கு மட்டும்தான் அன்பால் செய்கிறார் என்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கியநாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று கல் எறிந்து சிவபூஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது. கிழக்கு நோக்கிய சன்னதி, முன்புறம் மதிலும் வாயிலும் உள்ளன. அடுத்து மூன்றுநிலை கோபுரம், நாய்க்கர் காலச் செங்கல் மண்டபம் உள்ளது. இதன் வடக்கு பகுதியில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. மகாமண்டப வாயிலில் வடபால் சிறிய தண்டபாணியும் தென்பால் நர்த்தன விநாயகரும் உள்ளனர். முன் மண்டபத்தில் நந்தி பலி பீடம் உள்ளது.

நம்பிக்கைகள்

வேண்டியதை எல்லாம் கொடுக்கும் இறைவன். சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் ஆகியன செய்து கொள்ள இத்தலம் ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலை சுற்றி கோட்டையின் இடிபாடுகள் உள்ளன. முற்காலத்தில் சோழர்களது முக்கிய இடம். சமணர்கள் சம்பந்தம் இவ்விடத்தில் சாக்கியர் (சாக்கோட்டை என்பதிலிருந்து அறிய வருகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 131 வது தேவாரத்தலம் ஆகும். உலகம் அழியும் காலத்தில் உயிர்கள் அடங்கிய கலசம் இங்கு தங்கியது என்றும், அதனால் இத்தலம் கலயநல்லூர் ஆனது என்றும் தலபுராணம் கூறுகிறது. பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். அம்மனின் தவத்தை மெச்சிய இறைவன், அவளுக்கு வரம் கொடுத்து திருமணம் செய்து கொண்ட தலம். அம்மன் தவம் செய்யும் காட்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது. விசேஷமான தெட்சிணாமூர்த்தி உள்ளார். லிங்கோத்பவர் பச்சைக்கல்லால் ஆனவர். அர்த்தநாரீஸ்வரர் தன் வலது காலை ஓய்வாக நிறுத்தியுள்ளார். அம்மன் அமிர்தவல்லி இறைவனை நோக்கி நின்று திரும்பியுள்ள காட்சி சிறப்பு.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top