Tuesday Oct 15, 2024

குடவாசல் கோனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல் – 612 601. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 94439 59839.

இறைவன்

இறைவன்: கோணேஸ்வரர், இறைவி: பெரியநாயகி

அறிமுகம்

குடவாசல் கோணேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 94ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உலக பிரளய காலத்தில் இறைவன் உயிர்கள் அனைத்தையும் அமிர்த குடம் ஒன்றிலிட்டு அக்குடத்தின் வாயிலில் சிவலிங்கமாக இருந்து காத்த தலம் என்பது தொன்நம்பிக்கை.இத்திருக்கோயில் பெயர் குடவாயிற் கோட்டம் என்பதாகும். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடது புறத்தில் அனுமதி விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. வலது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் இடும்பன், தண்டபாணி, கலைமகள், கஜலட்சுமி, குடவாயிற்குமரன், பைரவர், சந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், சூத முனிவர், சனி பகவான் சப்தமாதர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பரவை நாச்சியார் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இடது புறம் நடராஜர் சன்னதி உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உள்ளார். மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயிலின் மேல் தளத்தில் மூலவர் சன்னதிக்கு முன்பாக பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் லிங்கத் திருமேனியாக உள்ளார். மூலவர் சன்னதியில் இடது புறம் தான்தோன்றிநாதர் உள்ளார். கோயிலின் முன்பு குளம் உள்ளது.

புராண முக்கியத்துவம்

பிரளயகாலத்தில் படைப்புக்குரிய வேதங்களை பிரம்மா, ஒரு அமுத குடத்தில் இட்டார். அந்தக் குடம் வெள்ளப்பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. மீண்டும் உயிர்களைப் படைக்க சிவன், வேடன் வடிவில் சென்று குடத்தின் மீது அம்பு எய்தார். அமுத குடத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். குடத்தின் வாய் பாகம் இத்தலத்தில் விழுந்தது. சிவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தார். காலவெள்ளத்தில் இந்த லிங்கம் புற்றால் மூடப்பட்டது. பிற்காலத்தில் கருடனின் தாய் விநதை, சத்ரு என்பவளின் சூழ்ச்சியால் அவளிடம் அடிமையாக இருந்தாள். தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்க, கருடன் தேவலோகம் சென்று அமுதக்குடம் எடுத்து வந்தார். வழியில் இத்தலத்தில் இறங்கினார். அப்போது அசுரன் ஒருவன், கருடனிடம் இருந்து அமுதக்குடத்தை பறிக்க முயன்றான். கருடன் அக்குடத்தை இங்கிருந்த புற்றின் மீது வைத்துவிட்டு, சண்டையிட்டார். அவனை வென்று அமுதக்குடத்தை எடுக்க வந்தபோது, குடம் புற்றுக்குள் புதைந்திருந்தது. எனவே தனது அலகால் கீறவே, அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். கருடன் தனது தாயின் நிலையைக்கூறினார். அவரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அருளினார் சிவன். அதன்பின்பு கருடனே இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினார்.

நம்பிக்கைகள்

தாயின் ஆசைகளை நிறைவேற்றி வைக்காமல் வருந்துபவர்கள் இங்கு சிவனை வேண்டி, மன அமைதி பெறுகிறார்கள். புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். திருமணதோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சையில் நெய் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

தை மாதத்தில் 3 நாட்கள் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய இத்தலத்தை திருப்பணி செய்த கோச்செங்கட்சோழ மன்னன், மாடக்கோயிலாக கட்டினார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 157 வது தேவாரத்தலம் ஆகும். பெரிய துர்க்கை: சிவன் சதுர பீடத்துடன், சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சுவாமியின் மேனியில் கருடனின் அலகு பட்ட தழும்பு இருக்கிறது. பெரியநாயகி அம்பாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவள் துர்க்கையின் அம்சத்துடன் காட்சி தருவதாக ஐதீகம். எனவே இவளை “பெரிய துர்க்கை’ (பிருஹத்துர்க்காம்பிகை) என்றும் அழைக்கின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் துர்க்கை இல்லை. மேற்கு நோக்கிய இத்தலத்தை திருப்பணி செய்த கோச்செங்கட்சோழ மன்னன், மாடக்கோயிலாக கட்டினார். இதனை திருஞானசம்பந்தர், “எழில்கொள் மாடக்கோயில்’ என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். உயரமான இடத்தில் இருந்து சிவன் காட்சி தருவதால், இத்தலத்தை “சிறிய கைலாயம்’ என்றும் சொல்கிறார்கள். கோணேஸ்வரர்: சூதமகரிஷி, பிருகு மற்றும் தாலப்பியர் ஆகியோர் இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளனர். உயிர்களை (கோ) நேசித்து, அவர்களை மீண்டும் படைக்க அருளியவர் என்பதால் இவருக்கு, “கோணேஸ்வரர்’ என்று பெயர் ஏற்பட்டது. அமுதக்குடத்தின் வாயில் விழுந்த தலமென்பதால் தலம் “குடவாயில்’ என்றழைக்கப்பட்டு, “குடவாசல்’ என மருவியது. சுவாமிக்கு அமுதலிங்கேஸ்வரர் என்றும், புற்றிற்குள் இருந்ததால் “வன்மீகநாதர்’ என்றும் பெயர்கள் உண்டு. கோயில் நுழைவு வாசல் எதிரே காசி விஸ்வநாதர் காட்சி தருகிறார். தை மாதத்தில் 3 நாட்கள் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. அருகே நடராஜர், சிவகாமியம்பாளுடன் இருக்கிறார். விதவிதமான விநாயகர்: அமுத தீர்த்தக்கரையில் ஆதிகஜாநநர் என்னும் விநாயகர் இருக்கிறார். இக்கோயிலுக்குள் நுழைந்ததும் வலது புறத்தில் “அனுமதி விநாயகர்’ சன்னதி இருக்கிறது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பிறகே சிவனை வழிபடச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். எனவே இவருக்கு இப்பெயர். இதுதவிர பிரகாரத்தில் “மாலை வழிபாட்டு விநாயகர்’ என்ற விநாயகரும் இருக்கிறார். சாயரட்ச பூஜையில் இவருக்கே முதல் பூஜை செய்யப்படுவதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இதுதவிர, இரட்டை விநாயகர் சன்னதியும் உள்ளது.

திருவிழாக்கள்

மாசிமகத்தில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருவாதிரை, பங்குனி உத்திரம்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குடவாசல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top