Sunday Dec 22, 2024

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு -600 077, சென்னை. திருவள்ளூர் மாவட்டம். போன்: +91-44-2680 0430, 2680 0487, 2680 1686.

இறைவன்

இறைவி: தேவி கருமாரியம்மன்

அறிமுகம்

திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும். சென்னையில் உள்ள அம்மன் தலங்களில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் தலம் என்ற சிறப்பைப் பெற்ற தலம் திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயம். திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. இதனால் அந்த பகுதியை வேலக்காடு என்று அழைத்தனர். அந்த வேலங்காட்டில் ஒரு பாம்புப்புற்று இருந்தது. பாம்பு வடிவில் அந்தப் புற்றில் கருமாரி இருந்து வருகிறாள் என்பது தெரிய வந்தது. திருவேற்காடு தேவாரம் என்ற பாடலில் திருஞானசம்பந்தர் வேற்காட்டுத் தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு. இங்கு தேவி கருமாரி அம்மன் சுயம்புவாக, நாகப்புற்றுள் எழுந்தருளியுள்ளார். மேலும் ”மரச்சிலை அம்மன்” என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு. 1. மூலவர்: தேவி கருமாரி அம்மன் 2. பெருமை : சுயம்பு 3. சிறப்பம்சம் : நாகபுற்று 4. வழிபாடு : விளக்குபூஜை 5. தலமரம் : வெள்வேலம் 6. தீர்த்தம் : புஷ்கரணி 7. பதிகம் : சம்பந்தர் தேவாரம் 8. புராணபெயர் : வேலங்காடு

புராண முக்கியத்துவம்

தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது. எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது. பிரகாரத்தில் உற்சவ அம்பாள் ஊஞ்சலில் காட்சி தருகிறாள். கோயில் முகப்பில் அரசமரத்தின் அடியில் விநாயகர் இருக்கிறார். பால பிரத்யங்கிராவுக்கு சன்னதி இருக்கிறது. இங்கு அம்பிகை பால ரூபத்தில், சிம்ம வாகனத்துடன் நின்றிருக்கிறாள். அமாவாசையில் இவளுக்கு மிளகாய் வத்தல் யாகம் நடக்கிறது. நவக்கிரகம், வள்ளி, தெய்வானையுடன் முருகன், சீனிவாசர் பத்மாவதி, ஆஞ்சநேயர் சன்னதிகளும் உள்ளது. வைகாசி விசாகத்தன்று சீனிவாசர் கருட சேவை சாதிக்கிறார். தெட்சிணாமூர்த்தி, அங்காள பரமேஸ்வரி, உச்சிஷ்ட கணபதி, காயத்ரி, மகாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, சாவித்திரி, துர்க்கை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

நம்பிக்கைகள்

• அன்னையின் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்குத் திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி ஆகியவற்றைத் தருகிறது. • தீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி, சூன்யம், மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர். ராகு கேது கிரக தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன. • பௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை செய்யப்படுகின்றது.இந்தப் பூஜையைச் செய்பவர்கள் அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப பலன்களை அடைந்து வாழ்வில் உயர் நிலை பெறுகின்றனர். • புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு. • இவை தவிர முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிசேகம், மாலை சாத்துதல், சங்காபிசேகம், கலசாபிசேகம், கல்யாண உற்சவம், பொங்கல் வைத்தல், அங்கப்பிரதட்சணம் , கண்ணடக்கம் ஆகியவை முக்கிய நேர்த்திக் கடன்களாகப் பக்தர்களால் அம்மனுக்குச் செலுத்தப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

சுயம்பு அம்பாள்: கருமாரியம்மன், மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின் கீழ் இருக்கிறாள். இவளுக்கு பின்புறம் அம்பாள் சிலை ஒன்றுள்ளது. இந்த அம்பிகை அக்னி ஜுவாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி அமர்ந்திருக்கிறாள். காலையில் கோபூஜை நடக்கிறது. தினமும் மாலை பிரதோஷ வேளையில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. அம்பாள் சன்னதியில் விளக்கு ஒன்று உள்ளது. இதனை “பதி விளக்கு’ என்கின்றனர். இந்த விளக்கைச் சுற்றி விநாயகர், முருகன், எதிரெதிரே சூரியன், சந்திரன் ஆகியோர் இருப்பது விசேஷமான அமைப்பு. மயில், நாகம் மற்றும் சிம்ம வாகனங்களும் இருக்கிறது. இதில் சிம்மத்தின் மீது அம்பிகை அமர்ந்திருக்கிறாள். இந்த விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது. பக்தர்கள் அம்பிகையையும், இந்த விளக்கையும் தரிசித்தால் குடும்பத்தில் என்றும் குறையில்லாத நிலை இருக்கும் என்பது நம்பிக்கை. புற்று சன்னதி: கோயிலுக்கு வெளியில் “திருச்சாம்பல் பொய்கை’ தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி எதிரில் கொடிமரம் உள்ளது. பெரும்பாலான அம்பாள் தலங்களில் திருவிழாவின்போது, காப்புக்கட்டித்தான் விழா நடத்துவர். இங்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. பசு சாணத்தில் செய்த சாம்பலையே இக்கோயிலில் பிரசாதமாக தருகின்றனர். புற்றிற்கு அருகில் விநாயகர், நாகர் இருக்கின்றனர். பொதுவாக விநாயகர் வலது கையில் தந்தமும், இடக்கையில் மோதகமும் வைத்திருப்பார். இவர் வலது கையால் ஆசிர்வதித்து, இடது கையை அபய முத்திரையாக வைத்திருப்பது வித்தியாசமான அம்சம். தேவி கருமாரியம்மனை வழிபடுபவர்கள் இங்கும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம். பூட்டு நேர்த்திக்கடன்: கைலாயத்தில் சிவன் திருமணம் நடைபெற்றபோது, தென்திசை வந்த அகத்தியருக்கு, இத்தலத்தில் சிவன் திருமணக்காட்சி கொடுத்தார். இவர், கருமாரியம்மன் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். அகத்தியருக்கு காட்சி தந்த வேற்கன்னி அம்பாள் இக்கோயிலில் தனிச்சன்னதியில் காட்சி தருகிறாள். அருகில் அகத்தியர் வணங்கியபடி இருக்கிறார்.

திருவிழாக்கள்

கருமாரியம்மனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஆடி மாதத்தில் இங்கு நடக்கும் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோயில்களில் திருவிழா அதிகபட்சம் 15 நாட்கள் நடக்கும். அரிதாக சில அம்பாள் கோயில்களில் 48 நாட்கள் வரையில் விழா நடத்துவர். ஆனால், இக்கோயிலில் ஆடி முதல் வாரத்தில் துவங்கும் விழா புரட்டாசி மாதம் வரையில் மொத்தம் 12 வாரங்கள் நடக்கிறது. இதில் ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பிகைக்கு 108 குட அபிஷேகம் நடந்து வீதி வீ யுலா செல்கிறாள். 9ம் ஞாயிற்றுக்கிழமையன்று அம்பாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடாகிறாள். மாசி மகத்தன்று அம்பாள் வங்காள விரிகுடா கடலுக்குச் சென்று தீர்த்த நீராடுகிறாள். தை மாதம் பிரம்மோற்ஸவம், சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி, புரட்டாசியில் பெரிய திருவிழா, நவராத்திரி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம்.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவேற்காடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

அம்பத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top