Sunday Dec 22, 2024

அருள்மிகு முருகன் திருக்கோவில், சாளுவன்குப்பம்

முகவரி

அருள்மிகு முருகன் திருக்கோவில், சாளுவன்குப்பம், மாமல்லபுரம், காஞ்சிபுரம் – 603 104

இறைவன்

இறைவன்: முருகன்

அறிமுகம்

மாமல்லபுரத்துக்கு அருகில் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான முருகன் கோயில் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டு கல்லினால் ஆன வேல் உடைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் கடவுள் முருகன். முருகனின் கோயில் தமிழகம் முழுவதும் அதிகம் காணப்படுகிறது. ஆனால், முருகன்கோயில் சங்க காலத்தில் எப்படி இருந்ததோ, அப்படியே அதன் அமைப்பு மாறாமல் மாமல்லபுரத்துக்கு அருகில் சாலவன்குப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது. சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள செங்கல் கட்டுமானத்துக்கு ஆதாரமாக இருந்த கோயில் ‘சாலவன் குப்ப முருகன் கோயில்’ மட்டுமே. இக்கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் சேதம் அடைந்துள்ளது. ஏற்கெனவே காற்று, மழை என்று இயற்கைக் காரணிகளால் சேதமடைந்திருந்த கோயிலில் சங்ககால கட்டுமானத்துக்குஅடையாளமாக அதன் அடித்தளம் மற்றும் முற்கால பல்லவர் காலத்தில் நடப்பட்டிருந்த கல்லினால் வேல் மட்டுமே எஞ்சி இருந்தது. கோயிலுக்கு முன் நடப்பட்டிருந்த கல் வேலும் இப்போது பிடுங்கி உடைக்கப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

புராண முக்கியத்துவம்

மாமல்லபுரத்துக்கு அருகில் இருக்கிறது சாலவன் குப்பம் கிராமம். இங்குப் பல்லவர் கால புலிக்குகை மற்றும் அதிரணசண்டேசுவரம் எனும் பல்லவர் கால குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன. இவற்றுக்கு அருகில் இருக்கிறது முருகன்கோயில். இக்கோயில் 2004 -ம் ஆண்டு வரை மண்ணுக்குள் புதைந்திருந்தது. சுனாமியில் ஏற்பட்ட மண் அரிப்பில் வெளிப்பட்டது இக்கோயில். இதற்கு முன்பே அப்பகுதியில் 1972 -ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று ‘முருகன் கோயிலுக்கு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கொடுத்த நிவந்தம்’ பற்றித் தெரிவிக்கிறது. அக்காலம் முதலே தேடப்பட்ட முருகன் கோயில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் வெளிப்பட்டது. இங்கிருக்கும் பாறையில் மூன்று வரிக்கொண்ட கல்வெட்டு அரிய செய்திகளை வெளியிடுகிறது. புலிக்குகையின் அருகில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும், புதிதாய் வெளிப்பட்டுள்ள மூன்றாம் இராஷ்டிரகூட கிருஷ்ணனின் கல்வெட்டும் அங்கிருந்த சுப்பிரமணியன் கோவிலை பற்றி குறிப்புகள் தருகின்றன. ஆனால் முருகன் கோவில் அருகில் இல்லாததால், சுற்றுவட்டார இடங்களை ஆராய்ச்சி செய்கின்றனர். அருகில் ஒரு பாறையும் ,சோழர் கால காசும், சில செங்கற்களும் கிடைத்தன. மேலும் இந்த இடம் பிற இடங்களை விட மேடாக இருந்துள்ளது. அதன் காரணமாக இங்கு அகழ்வாய்வு செய்யப்பட்டு கோவிலின் அடித்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட அகழ்வாய்வில் மண்டபமும், இரண்டாம் ஆய்வில் முன்மண்டபமும் வெளிக்கொண்டுவரப்பட்டது. இங்கு மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டிற்கு பிறகு எந்த கல்வெட்டும் காணப்படவில்லை. அதனால் அந்த காலத்திற்கு பிறகு கோவில் அழிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிக பழமையான கோவில் இது. இவ்வூர் கல்வெட்டுகளில் திருவிளிச்சில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இக்கோவில் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்கள் நடந்துள்ளதால் இதன் வளர்ச்சி சரியாக அறியப்படவில்லை. இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் ஒரு வேல் கண்டறியப்பட்டது. இது கல்லால் ஆனது. கோவிலில் கொடிமரம் இருக்கும் இடத்தில் காணப்படுகிறது. இது இக்கோவிலின் அரிய கண்டுபிடிப்பாக உள்ளது. பாதுகக்கபட்ட சின்னமாக இருந்தாலும், சம்ஸ்கிருத கிரந்தக் கல்வெட்டுகள் கொண்ட பல்லவர்கள் குகைக் கோவில்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு, அதன் அருகிலேயே இருந்த தமிழ் கல்வெட்டுகளைக் கொண்ட இச்சங்ககால கோவிலுக்கு வழங்கப்படவில்லை. தமிழ் கல்வெட்டுகள் கொண்ட தூண்களும் சிதறிக் கிடக்கின்றன. சங்ககால கோயில் கட்டுமானம் எப்படி இருக்கும் என்பதற்கு ஆதாரமாக இருந்தது அக்கோயிலும், கல் வடிவ வேலும். ஆனால், இப்போது அந்த வேலும் துண்டாக உடைக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் தற்போதைய நிலையைப் பற்றி விசாரிக்கையில் தொல்லியல் துறையினர் கோயிலைப் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். விரைவில் உடைக்கப்பட்ட வேலினை ஒன்று சேர்த்து ஒட்டி விடுவதாகக் கூறியிருக்கிறார்கள். சங்ககால முருகன் வேலினை பழையபடி ஒன்று சேர்த்து மீண்டும் நடப்பட வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்திலேயே பழமையான கோவில்களில் ஒன்றாகக் கருதப்படும் இக்கோவிலுக்கு ஏற்பட்டுள்ள சேதத்திற்குக் காரணம், மத்திய தொல்லியல் துறையின் அலட்சியப் போக்கே என வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

முருகனின் கோயில் தமிழகம் முழுவதும் அதிகம் காணப்படுகிறது. ஆனால், முருகன்கோயில் சங்க காலத்தில் எப்படி இருந்ததோ, அப்படியே அதன் அமைப்பு மாறாமல் மாமல்லபுரத்துக்கு அருகில் சாலவன்குப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது. சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள செங்கல் கட்டுமானத்துக்கு ஆதாரமாக இருந்த கோயில் ‘சாலவன் குப்ப முருகன் கோயில்’ மட்டுமே. இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் ஒரு வேல் கண்டறியப்பட்டது. இது கல்லால் ஆனது. கோவிலில் கொடிமரம் இருக்கும் இடத்தில் காணப்படுகிறது.

காலம்

2000 to 3000

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மாமல்லபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top