Friday Dec 27, 2024

அருள்மிகு சுக்ரீஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்

முகவரி

அருள்மிகு சுக்ரீஸ்வரர் (மிளகேஸ்வரர்) திருக்கோயில் … பெரியபாளையம், திருப்பூர்- 641 607. போன்: +91 94423 73455.

இறைவன்

இறைவன்: சுக்ரீஸ்வரர்

அறிமுகம்

இவ்வூர் சர்க்கார் பெரிய பாளையம் என்றும் வழங்கப்படுகிறது. சுருக்கமாக எஸ். பெரியபாளையம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூர் திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் திருப்பூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் படைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது

புராண முக்கியத்துவம்

சுக்ரீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள லிங்கமானது, இராமாயண காலத்தில் இராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டவர் என்றும், இதன் காரணமாகவே மூலவர் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் எனப்படுகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. கருவறையில் உள்ள மூலவர் சுக்ரீசுவரர் என்ற பெயரிலும் இறைவி ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். கோயில் குறித்து நிலவும் இன்னொரு கதையின்படி, முன்னொரு காலத்தில் ஒரு வணிகர், இந்த கோயிலிலின் வழியாக மாடுகள் மீது மிளகு மூட்டைகளை ஏற்றி சென்றார். அங்கு வந்த ஒருவர், ‘மூட்டையில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டுள்ளார். மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, வணிகர் பாசிப்பயிறு இருப்பதாக பொய்யுரைத்தார். பின்னர் அங்கிருந்து சந்தைக்குச் சென்று, மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, அதில் பாசிப்பயிறுதான் இருந்துள்ளன. கோயிலின் முன்பாக வைத்து பொய்யுரைத்ததற்கு இறைவன் அளித்த தண்டனையை எண்ணி, வருந்திய அந்த வணிகர், இறைவனை மனமுருக வேண்டினார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது. ‘உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து என்னை வணங்கு, உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்’ என்றது குரல். வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கினார். இதையடுத்து பாசிப்பயிராக இருந்த மூட்டைகள், மிளகு மூட்டைகளாக மாறின. இப்பகுதி மக்கள், இத்தல இறைவனை ‘மிளகு ஈஸ்வரர்’ என்றே அழைக்கிறார்கள். அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை நிலவுகிறது.

நம்பிக்கைகள்

இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் என்னும், குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் கருவறைக்கு வலது புறம் ஆவுடைநாயகி என்ற பெயரில் அம்மன், தனிச் சன்னிதியில் உள்ளார். கோயிலில் மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது. திருச்சுற்றில் விநாயகர், மயில்வாகனம், மூன்று லிங்கத்திருமேனிகள், பைரவர், துர்க்கை, சூரியன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. மேலும் கோயில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கும், பஞ்ச லிங்கங்கள் இருக்கின்றன. மூலவரே அக்னி லிங்கமாக பார்க்கப்படுகிறார். வில்வ மரத்தின் கீழ், ஆகாச லிங்கம் அமைந்துள்ளது. மற்ற மூன்று லிங்கங்களும் கோவிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன

சிறப்பு அம்சங்கள்

1) ஆவுடைநாயகி அம்மனுக்கென தனி கோவிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது. அம்மனுக்கான தனி கோவில், வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது. 2) உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் – வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது. 3) கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது. 4) ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில். இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது.) 5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது. 6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் “தீப ஸ்தம்பம்” இந்த கோயிலில் கிடையாது.கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது. 7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு “சிற்ப ஸ்தலங்களில்” இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று. 8) வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி. 9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை “குரக்குதை நாயனார்” என்று வழிபட்டுள்ளனர். 10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரியபாளையம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top