Friday Dec 27, 2024

ஸ்ரீகாகபுஜண்டரின் சித்தவாசம் இருக்கும் இடங்கள்

மதுரை திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி ஒரு விநாயகர் சன்னதிக்கு கீழே அமைந்திருக்கிறது; இந்த விநாயகரை ஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் பல யுகங்களாக வழிபட்டு வந்திருக்கிறார். 

மதுரையைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு சில இடங்களில் ஸ்ரீகாகபுஜண்டரின் சித்தவாசம் இருந்திருக்கிறது. அந்த இடங்களிலும் இதே போல முயற்சி செய்து பார்க்கலாம்:

1. சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் வட்டத்தில் இருக்கும் ஆச்சாள்புரம். இங்கே திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்திருக்கிறது. இங்கே இன்னும் ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.

2.  சிதம்பரத்திலிருந்து  கடலூர் சாலையில்  அமைந்திருக்கும் ஆலப்பாக்கத்தில் ஸ்ரீபுஜண்டலிங்கேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கே புஜண்டர் பலருக்கு ஞான உபதேசம் அளித்திருக்கிறார்.

3. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கல் கூட்ரோட்டிலிருந்து புதுப்பாளையம் செல்லும் பாதையில் சோதியம்பாக்கம் இருக்கிறது.இங்கே சிவாகமவிதிப்படி ஸ்ரீகாகபுஜண்டரின் ஆலயம் அமைந்திருக்கிறது.

4. விழுப்புரம் அருகில் சின்னச்சேலம் அருகில் இருக்கும் ஊர் தென்பொன்பரப்பி. இங்கு காகபுஜண்டர் கோவில் இருக்கிறது.ஜீவசமாதி அடையாத ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர்தான்!!!

5. நாகப்பட்டிணம் மாநகரத்திலிருந்து சுனாமிப் பாலம் வழியாகச் சென்றால் வருவது கோரக்க சித்தரின் ஜீவசமாதி ஆகும். இங்கிருந்து வேளாண்கன்னிக்குச் செல்லும் பாதையில் சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்குப் பயணித்தால் சாலையின் மேற்கே ரயில்வே கேட் தாண்டித் தெரிவது ஸ்ரீபால்மொழி அம்மன்கோவில் ஆகும்.இங்கே ஸ்ரீகாகபுஜண்டர் பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக (யுகங்களாக) தவம் செய்திருக்கிறார். இங்கே தான் உலகம், உயிர்கள், பிரபஞ்சம் என்று அனைத்தையும் படைத்த ஆதி பரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி என்ற வாலைப்பெண்ணைத் தரிசித்தார் ஸ்ரீகாகபுஜண்டர்.

6. ராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது திருவழுக்குப்பாறை ஆகும். வனத்துறை அனுமதியோடு மலை மேலே பத்து கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும். இங்கே அமுதகலசத்துடன் வாலைத் தெய்வம் அருள்புரிந்து வருகிறார். இங்கேயும் ஸ்ரீகாகபுஜண்டர் பல காலமாக தவம் செய்திருக்கிறார்.

7. திருப்பரங்குன்றம் மலைக்குப் பெயரே புசுண்டர் மலையே. இங்கே ஏராளமான சித்தர்கள்/துறவிகளின் ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன. இங்கேயும் பல காலமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.

8. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இங்கே மனிதகாலடித் தடம் படாத இடங்கள் இருக்கின்றன. இந்த வனத்தினுள் காகபுஜண்டர் குகை இருக்கிறது

9. இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் உத்திரகோசமங்கையில் அமைந்திருக்கும் சிவாலயத்தில் ஸ்ரீகாகபுஜண்டர் பலகாலம் தவமிருந்து ஜோதி வடிவாக சிவனுடன் ஐக்கியமாகியிருக்கிறார்.

10. புதுவை மாநிலம் காரைக்கால் அருகில் இருக்கும் திருமலைராயன் பட்டிணத்தில் இருக்கும் ஆயிரங்காளியம்மன் கோவிலில் பல யுகங்களாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.

11. சிவகெங்கை மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூர். இவ்வூருக்கு அருகில் இருக்கும் வைரவன்பட்டி. பூமி படைக்கப்பட்டதிலிருந்து ஸ்ரீகாலபைரவர் இங்கே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவராக அருள்பாலித்து வருகிறார். இங்கே தவம் செய்யாத சித்தர்களே கிடையாது. ஸ்ரீகாகபுஜண்டரின் தவ ஆற்றல் இன்னும் இங்கே பரவிக்கிடக்கிறது.

12. அண்ணாமலைக்கு அருகில் காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) செல்லும் வழியில் 13 வது கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது காகா ஆஸ்ரமம். ஸ்ரீகொல்லிமலைச் சித்தர் காகபுஜண்டரின் சீடர் தருமலிங்கசுவாமிகளின் ஆசிரமம் இது.இங்கே காகபுஜண்டரின் ஆலயம் மிக அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது.

13. கோயம்புத்தூரில் இருக்கும் மாஸ்திக்கவுண்டன்பதி என்ற ஊரில் பாலரிஷி ஆஸ்ரமம் அமைந்திருக்கிறது. இங்கே ஸ்ரீகாகபுஜண்டரை உபாசனை செய்யும் பெண் சித்தர் ஸ்ரீவிஸ்வசிராஸினி ஒரு நாளுக்கு 20 மணி நேரம் ஜெபதவத்தில் ஈடுபட்டு வருகிறார். இங்கே சென்று சிவமந்திரம் ஜபித்து வர, ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.

14. கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி மலையில் தகுந்த குருவின் துணையோடு தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து சிவமந்திரம் ஜபிக்க, வெகு விரைவாகவே ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.

15. சீர்காழி சட்டநாதர் திருக்கோவிலில் அஷ்ட பைரவர்கள் வாழ்ந்து வருகிறார்.இங்கே இன்னமும் சூட்சுமமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.

https://t.me/siddharneri

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top