Monday Dec 23, 2024

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம்
கிராமத்தில் கூத்தாண்டவர் சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 18 நாள் சித்திரை
திருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தினந்தோறும்
மகாபாரத சொற்பொழிவுகளும், சாமி வீதிஉலா நிகழ்ச்சிகளும் நடந்தது. சித்திரை
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று மாலை
நடந்தது. இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் வந்த
ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோவில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டனர். 
பின்னர் கூத்தாண்டவருக்கு தேங்காய் உடைத்தும்,
கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். கூத்தாண்டவரின் பெருமைகளை கூறி கும்மியடித்து
ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.  கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
இதில் ஏராளமான திருநங்கைகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றனர்.

தேர் அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாக சென்று தெய்வநாயக
செட்டியார் பந்தலடியை அடைந்தது. நேற்று தாலிகட்டிக்கொண்ட திருநங்கைகள் இந்து முறை
சாசனபடி கணவர் இறந்துவிட்டால் ஒரு பெண்ணுக்கு என்னென்ன சடங்குகள் செய்வார்களோ
அதன்படி செய்து தங்களது நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து, வளையல்களை உடைத்து
கும்மியடித்து அழுதனர்.
பின்னர் அருகில் உள்ள கிணற்றில் நீராடிவிட்டு
வெள்ளை நிற புடவை உடுத்தி திருநங்கைகள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
இறந்துபோன கூத்தாண்டவர் சாமியை காளிகோவிலுக்கு தூக்கிக்சென்று படையல்போட்டு,
கிடாவெட்டி வருகிற 22-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தேரோட்டத்தையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.
பாண்டியன் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்
செல்வகுமார் தலைமையில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் சுமார்
1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top