Friday Jan 03, 2025

பெரியகொத்தூர் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

பெரியகொத்தூர் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்,

பெரியகொத்தூர், மன்னார்குடி வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 610206.

இறைவன்:

சுந்தரேஸ்வரர்

இறைவி:

செளந்தரநாயகி

அறிமுகம்:

திருவாரூா் நகரிலிருந்து மாவூரின் வழி 15 கி.மீ. தூரத்தில் உள்ளது வடபாதிமங்கலம். இங்கிருந்து தெற்கே 3 கி.மீ. காரியமங்கலம் சாலையில் சென்று கிழக்கில் திரும்பினால் பெரியகொத்தூா் கிராமத்தை அடையலாம். கொற்றவன் ஊர் கொற்றூர் ஆகி, கொத்தூர் என இப்போது உள்ளது. தற்போது பெரியகொத்தூர், சிறியகொத்தூர் என உள்ளது. சோழா்களின் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு பெருங்கற்கோயில் “பெரியகொத்தூா்” என்னும் கிராமத்தில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் பல ஆண்டுகாலமாக இருந்தது. ஈசன் இத்தலத்தில் சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் சுயம்பு மூா்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் கொற்றூா் திருவிடைக்காடுடையாள் கோயில்” என்றும், ஈசன் “திருவிடைக்காடுடைய நாயனார் என்றும் “திருவிடைக்காட்டு பிரான்” என்றும் குறிக்கப்பட்டுள்ளன.

இறைவன் சுந்தரேஸ்வரர் இறைவி – செளந்தரநாயகி பல சிறப்புக்கள் கொண்ட இக்கோயில் சோழர் காலத்தில் இரு பெரும் பிரகாரங்களை கொண்டதாக விளங்கியது காலப்போக்கில் கவனிப்பாரின்றி சிதைந்த இக்கோயிலை ஊர் மக்கள் சேர்ந்து பெரும் பொருள் செலவில் புனரமைத்து உள்ளனர். 3.6.2018 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பெரிய குளம் ஒன்றின் கரையில் கிழக்கு நோக்கியதாக உள்ளார் இறைவன், அகன்ற சதுரமான வடிவில் கருவறை அதற்கு முன்னம் அர்த்தமண்டபம், மகாமண்டபம் என சோழகட்டுமானம் உள்ளது, மகாமண்டபத்தின் வெளியில் நந்தி மண்டபம் பலிபீடம் உள்ளது. அம்பிகைக்கு புதிய கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

இறைவனின் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தக்ஷணமூர்த்தி, லிங்கோத்பவர், இதுவரை பழமையான மூர்த்திகள், அம்பிகை சமீபத்தில் உருவாக்கப்பட்டதாகலாம். பிரகார சிற்றாலயங்கள் விநாயகர் முருகனுக்கு கட்டப்பட்டுள்ளன. வடகிழக்கில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். இக்கோயிலில் ஐந்து விநாயகர்கள் உளள்னர். பஞ்சவிநாயகர் வழிபாடு செய்ய ஏற்ற தலம். இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வேண்டுவோருக்கு அயல் நாட்டில் வேலை கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

புராண முக்கியத்துவம் :

சோழர்காலத்தில் கொற்றூரில் அரசன் வந்து தங்கி அலுவல் பணிகளை கவனிக்கும் நிர்வாக தலைமையிடமாக இருந்துள்ளது. இக்கோயிலில் 18 கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டுள்ளது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் கல்வெட்டு கருவறை, அா்த்தமண்டபம் மற்றும் மகா மண்டபத்துடன் இத்தலம் கற்றளியாக புனரமைக்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கின்றது. மூன்றாம் இராஜராஜன் கால கல்வெட்டு ஈசனுக்கு அமுது படைக்கவும் விளக்கு எரிப்பதற்கும் அளிக்கப்பட்ட நிவந்தங்களை பற்றிக் குறிப்பிடுகின்றது. குலோத்துங்கச்சோழ பேரிளமையார்‌ என்ற வணிகக்‌ குழுவினர்‌ தாங்கள்‌ பலரிடமும்‌ கோயில்‌ கட்டுவதற்கு பெற்ற பொருளுதவி கொண்டும்‌, தங்கள்‌ குழுவின்‌ கருவூலத்தில்‌ உள்ள மிகுதியான பணத்தைக்‌ கொண்டும்‌ அக்குழுவின்‌ வேளைக்காரர்கள்‌ கருவறை அர்த்தமண்டபம்‌, திருமண்டபம்‌ ஆகியவற்றுடன்‌ கூடிய இத்திருக்‌ கற்றளியைச்‌ செய்த நிகழ்ச்சியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கல்வெட்டு மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ காலத்தைச்‌ சேர்ந்ததாக இருக்கலாம்‌. அடுத்த கல்வெட்டு மூன்றாம்‌ இராஜராஜசோழன்‌ அல்லது மூன்றாம்‌ இராஜேந்திர சோழன்‌ காலத்தைச்‌ சேர்ந்ததாக இருக்கலாம்‌, கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. இறைவனுக்கு அரிசி அமுது, அன்னக்கறி அமுது, விஞ்சனம்‌ உள்ளிட்டவை படைப்பதற்கும்‌, சந்திவிளக்கு எரிப்பதற்கும்‌ குறிப்பிட்ட இருவர்‌ ஏற்பாடு செய்திருக்‌ கின்றனர்‌. மூன்றாம் இராஜராஜன் காலத்தில் நம்பிக்கை துரோகம் செய்து எதிராளியின் பக்கம் சோ்ந்த குடிமக்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்து தண்டனை அளிக்கப்பட்டது குறித்தான மகாசபையோரின் ஆணை கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.வருத்தம் தவிர்த்த சோழச்சருப்பேதி மங்கலத்து ஊா்க்காரியம் செய்கின்ற மகாசபையோரின் ஆணை இது என இக்கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. இக்கல்வெட்டு சுந்தரேஸ்வரா் கோயில் மகாமண்டப வடக்குப் புறச்சுவரில் காணப்படுகின்றது. பாண்டிய மன்னன் “மாறவா்மன் சுந்தர பாண்டியன்” சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தபோது நடைபெற்ற நிகழ்வின் வெளிப்பாடாக இக்கல்வெட்டு இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

“கந்தமங்கலமுடையான் புற்றிடங்கொண்டான் உடைய பிள்ளையான திருநாவுக்கரசு” என்பவா் பலரிடமும் பிச்சை பெற்று கொற்றூரில் உள்ள திருவிடைக்காடுடையார் கோயிலைக் கற்றளியாகத் திருப்பணி செய்தது குறித்து மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் பத்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. மேலும் தேவாரம் பாடிய அப்பா், சுந்தரா் மற்றும் திருஞானசம்பந்தருக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது குறித்தும் இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. இக்கோயிலுக்குத் தானமாக அளிக்கப்பட்ட நூறு கலம் நெல்லை 30 வட்டத்து சிவ பிராமணா்களான முத்தோடு சிவபட்டா், தாமோதர பட்டா், சுந்தரவாகு பட்டா் ,சிவதாணு பட்டா், கேசவ பட்டா், திருவரங்க பட்டா், யக்ஷேத்திரபட்டா் மற்றும் தேவதேவ பட்டா் போன்ற சிவ பிராமணா்களுக்கு நிர்வாக உரிமை அளித்த செய்தியை மூன்றாம் குலோத்துங்க மன்னனின் 11ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1189) குறிப்பிடுகின்றது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரியகொத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மன்னார்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top