Sunday Dec 22, 2024

சிதம்பரம் கபிலேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு கபிலேஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001.

இறைவன்

இறைவன்: கபிலேஸ்வரர்

அறிமுகம்

பசுவாகப் பிறந்த கபில மகரிஷி தில்லைக்கு வருகை தந்து தில்லை பெருங்கோயிலின் தென்கிழக்கு பகுதியில் லிங்கம் அமைத்து வழிபட்ட இடம் தான் இந்த கபிலேஸ்வரர் திருக்கோயில். இன்றைய கோயில் பாலமான் மீதுள்ள மேம்பாலம் ஆரம்பிக்கும் இடத்தின் வலது புறம் உள்ள சிறிய தெருவின் முகப்பில் ஒரு அரச மரத்தின் கீழ் கிழக்கு நோக்கியவாறு ஒரு தகர கொட்டகையில் உள்ளது. இக்கோயிலின் எதிரில் பொது கழிப்பறை உள்ளது என தட்டச்சு செய்யவே எனக்கு கை கூசுகிறது. காலமும் நேரமும் வந்து கழிவறை அகற்றப்பட்டு, இக்கோயில் கருவறை கொண்டு விளங்கட்டும். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து நடைதூரத்தில் உள்ள காந்திசிலை அருகில் இக்கோயில் உள்ளது, அதனால் பேருந்து நிலையம் வருவோர் அவசியம் தரிசனம் செய்வீர்.

புராண முக்கியத்துவம்

அயோத்தி நாட்டரசர் இசுவாகு குலத்து சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனிடம் வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும், மற்றொரு மனைவி கேசினிக்கு ஒரே ஒரு குழந்தையும் பிறந்தன. பின்னர், அசுவமேத யாகம் செய்வதற்காக சகரர் அனுப்பிய குதிரை காணாமல் போயிற்று. 60 ஆயிரம் மகன்களும் குதிரையைத் தேடி வருகையில் கபில முனிவர் குகை வாயிலில் குதிரை நிற்பதைக் கண்டு கபிலரே குதிரையைப் பிடித்து வைத்திருப்பதாகக் கருதி சண்டைக்குப் போனதால் கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள். இதனால் வருத்தமுற்ற சகரனின் குலத்தில் வந்த பகீரதன், வசிஷ்ட முனிவரின் ஆலோசனைப்படி கங்கை நதியை பூமிக்குக் கொண்டு வந்து பூஜித்து முன்னோர்களின் சாபத்தில் இருந்து விமோசனம் தேடிக்கொண்டான். தமது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருத்தமுற்ற கபிலர், அதற்குப் பிராயச்சித்தமாக சிவ பூஜை செய்தார். ஒரு லிங்கத்தை தமது இடது கையில் வைத்துக்கொண்டு, வலது கையால் மலர் தூவி அர்ச்சித்தார். அவருக்குக் காட்சி தந்த சிவபெருமான், தம்மை கையில் வைத்து பூஜிக்கக் காரணம் என்னவென்று கேட்டார். அதற்கு கபிலர், ‘தரையில் வைத்து தங்களை பூஜிக்க மனமில்லை. அதனால்தான் எனது கைகளிலேயே வைத்து பூஜித்தேன்” என்று கூறினார். கையில் லிங்கத்தை வைத்து பூஜித்தது சரியான முறையல்ல. இதற்குப் பிராயச்சித்தமாக நீ பசுவாகப் பிறக்கக் கடவது” என்று கூறினார் ஈசன். அதன்படி பசுவாகப் பிறந்த கபில மகரிஷி தில்லைக்கு வருகிறார். தில்லை பெருங்கோயிலின் தென்கிழக்கு பகுதியில் லிங்கம் அமைத்து வழிபட்ட இடம் தான் இந்த கபிலேஸ்வரர் திருக்கோயில். #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிதம்பரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிதம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top