Friday Dec 27, 2024

கிளியனூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கிளியனூர், திண்டிவனம்- 604001. விழுப்புரம் மாவட்டம். போன்: +91 – 94427 86709

இறைவன்

இறைவன் – அகஸ்தீஸ்வரர் ( அக்ஞீரம் உடையார் ) இறைவி – அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்

திண்டிவனம் – பாண்டி சாலையில் திண்டிவனத்தில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலம். சம்பந்தர் காலத்தில் செங்கல் தளியாக இருந்த கோயில் இடைப்பட்ட சோழர்கள் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. அகத்தியர் சிவனாரை வழிபட்டு அருள்பெற்ற தலம். ராகு-கேது கிரகங்கள் சிவனாரை வழிபட்டு அருள்பெற்ற தலம். காலவமுனிவரின் மகள்களின் தீராதபிணி சிவனாரின் அருளால் நீங்கிய தலம். சுகப்பிரம்ம முனிவர் வழிபட்டு அருள்பெற்ற தலமாதலால் சுக(கிளி)புரி. இவரது வயிற்றுவலி இத்தலத்தில் வழிபாடு செய்ததால் நீங்கியதாக சொல்லப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

இன்று சிற்றூராகக் காட்சி அளிக்கும் கிளியனூர் கி.பி.6-ம் மற்றும் 7-ம் நூற்றாண்டில் சிறப்புற்ற ஊராக இருந்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். கிள்ளி என்பது பழங்காளச் சோழர்களின் பொதுப் பெயர். உதாரணமாக -நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னர் பெயர்கள் நம் பழைய சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. சோழர் காலத்தில் தோன்றிய கிள்ளியநல்லூர் என்ற ஊர்ப்பெயர் நாளடைவில் கிளியனூர் என்று மருவியிருக்கலாம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் இவ்வூர் திருக்கிளியன்னவூர் என்று வழங்கி வந்துள்ளதை இவர் பாடி அருளியுள்ள தேவாரத் திருப்பதிகம் மூலம் நாம் அறிய முடிகின்றது. திருஞானசம்பந்தர் காலத்தில் செங்கற்கோயிலாக இருந்திருக்கக்கூடிய இத்திருக்கோயில் இடைக்காலத்துச் சோழநாட்டையாண்ட மன்னர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் இக்கற்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தல பெருமான் அகத்திய முனிவருக்கு அருள்பாலித்தவர். ராகு, கேது என்ற கிரகங்களுக்கும் அருள்பாலித்தவர். இக்கோயில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. கல்வெட்டுச் செய்திகள் ஆதாரம் : சிதம்பரம் தொல்லியல் அலுவலர் அறிக்கை. அகஸ்தீஸ்வரர் கோயில் தென்புறக் கருவறைச் சுவர் கல்வெட்டு – சோழ மன்னன் பெயர் சிதைவடைந்துள்ளது. தங்கள் அம்பலவன் கண்டராதித்தன் என்ற குவாலம் – கங்கரைசர் தானம் செய்துள்ள விவரம் போன்றவை தெரியவருகின்றன. தெற்கு வடகிழக்கு சுவர் கல்வெட்டு – இராசேந்திர சோழன் கல்வெட்டு முழுமையில்லை. 13ம் ஆட்சி ஆண்டு கிளியனூர் என்ற கேரளாந்தக சதுர்வேதி மங்கலம் இடம் பெறுகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாட்டு பிரம்மதேயத்தில் இந்த ஊர் இருக்கிறது. கிழக்குச் சுவர் கல்வெட்டு – பரகேசரி 10-ம் ஆட்சியாண்டு ஆறுங்களத்தைச் சேர்ந்த தீயன், சாத்தன் ஆகிய பராசரன் என்பவன் அக்னீஸ்வரமுடையார் கோயிலுக்கு அமாவாசை மற்றும் சங்கராந்தி நாட்களில் வழிபாட்டுக்கு உதவியுள்ளார். இராசேந்திரன் 3ம் ஆட்சியாண்டு பிராமணப் பெண் விளக்கு வைத்த 90 ஆடுகள் அளித்துள்ளாள். கல்வெட்டு சேதமாக உள்ளது. வடபுறச் சுவர் கல்வெட்டு – விக்ரமசோழ தேவன் 10ம் ஆட்சியாண்டு. கல்வெட்டு முழுமை பெறவில்லை. பூமாதுரை தொடக்கம் காண்கிறோம். திருவக்னீஸ்வரமுடைய மகாதேவர் பூஜைக்காக கிளியனூர் என்ற உலகுய்ய கொண்ட சோழ சதுர்வேதி மங்கல ஊரவர் நிலத்தானம் செய்துள்ளனர். ஒய்மா நாடு விஜயராஜேந்திரன் வளநாடு எனவும் வழங்கப்பட்டுள்ளது. முன்மண்டபம் வடக்கு கிழக்கு கல்வெட்டு : இராஜாதி ராஜன் 28ம் ஆட்சியாண்டு கல்வெட்டு திங்களேர்தரு என்று தொடங்குகிறது. கேரளாந்தக சதுர்வேதி மங்கல ஊரவர் திருவக்னீஸ்வரமுடைய பெருமானுக்கு திருவமுது நிலம் விற்ற விபரம் அறிகிறோம். இராஜாதி ராஜன் 29ம் ஆட்சியாண்டு வேறொரு நிலம் கோயில் திருவமுதுக்காக விற்ற விபரம் தெரிகிறது. கிழக்குச் சுவர் கல்வெட்டு – குலோத்துங்கச் சோழன் 3ம் ஆட்சியாண்டு உலகுய்ய வந்த சோழ சதுர்வேதி மங்கலமாகிய கிளியனூர் சபை சில நிலங்களுக்காக வரி விலக்கு அளித்தது. கருவூலத்தில் விடப்பட்ட முதலுக்குரிய வட்டி திருவக்னீஸ்வரத்தைச் சேர்ந்த பிச்சதேவர் கோயில் போன்ற விபரம் காண்கிறோம். கோயில் தணிக்கல் கல்வெட்டு : மடைப்பள்ளியில் உள்ளது. மல்லிகார்ச்சுவராயர் சக 1372 பிரமோதூத சித்திரை 15 சேதம் விருப்பராய காங்கேயன் மகன் விஜய.. ராய காங்கேயன் மதகு கட்டியது. புயலின்போது சிதலமடைந்த ஏரியைப் புதுப்பித்தது. கிளிவளநல்லூர் என ஊர்ப் பெயர் உள்ளது. மேலும் புதிதாகக் கிடைத்துள்ளது 276 திருக்கிளியன்னவூர்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து அதை சாப்பிட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

காளவ மகரிஷி தனது இரு பெண் குழந்தைகளின் தீராத மிக கொடிய நோய் நீங்க இத்தலம் வந்து பல ஆண்டுகள் வழிபாடு செய்தார். சிவனின் திருவருளால் அவரது குழந்தைகளின் நோய் நீங்கியது. சுகப்பிரம்ம மகரிஷி இத்தல சிவனை வழிபட்டு தனது வயிற்று வலி நோய் நீங்கப்பெற்றார். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரத் திருப்பதிகத்தில் கிளியன்னவூர் பெருமானுடைய திருவடிகளை வழிபடும் அடியவர்கள் தீங்குகளிலிருந்து விடுபட்டுப் புகழுடன் வாழ்வர். வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே, தன்மை இல்லவர் சார்பு இருந்தாலும், புன்மைக் கன்னியர் பூசல் உற்றாலுமே, நன்மை உற்ற கிளியன்னவூரனே மிகக்கடினமான வறுமை, இயல்பற்றவர்களின் தொடர்பு, மகளிரால் ஏற்படும் பூசல் இவற்றிலிருந்து விடுபடுவர். கொடியவர் நெஞ்சில் ஒருபோதும் தங்காத இறைவன் அடியவர் துயரைப் போக்கி அவர் வேண்டியதை அருள்பவன். அடியவர்கள் இவ்வுலகில் மறுபிறப்பு எடுப்பினும் முழுச் செல்வத்துடன் நல்வாழ்வு அளிப்பவர். இத்தல தேவாரப் பதிகத்தை ஓதுபவர்கள் இவ்வுலகக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு ஒரு குறையும் இல்லாது நல்வாழ்வு வாழ்வர். மதுரை கொண்ட பரகேசரி வர்மனாகிய முதல் பராந்தகன் காலத்திலேயே இவ்வூர்க்கோயில் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. (ஆதாரம் : இம்மன்னனுடைய 10 -ம் ஆண்டு கல்வெட்டு) இவ்வூர் ஒய்மா நாட்டுப் பிரம்மதேயமான கிளிஞனூர் எனவும், இங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமான் திரு அக்ஞீசரம் உடையவர் எனவும் கல்வெட்டில் காணப்படுகின்றது. கல்வெட்டுகளில் பராந்தகனுடைய ஆட்சியில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் அமாவாசை, மாதப் பிறப்பு தினங்களில் சிறப்பான நிவேதனங்களுக்கு மான்யம் வழங்கியதாக செய்தி உள்ளது. (ஏ.ஆர்.இ.1919, நெ.148) முதல் குலோத்துங்கன் ஆட்சியில் இக்கோயில் கருவறையின் மேற்குப்புறம் வெளிச்சுற்றில் பிச்சாண்டவருக்காக பூஜைக்கு மான்யம் வழங்கியுள்ள செய்தி (ஏ.ஆர்.இ1919, நெ.153)யும், நந்தா விளக்கு தொடர்ச்சியாக எரியவிட மான்யம், கோயில் பூஜைகள் தினந்தோறும் நடக்கவும், கோயில் திருப்பணிக்கும் பல மான்யங்கள் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நன்மக்கள் பலரால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட செய்திகள் என தெரிய வருகிறது. 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் அடியவர்களுக்கு அருள்பாலித்துவரும் இக்கோயிலைப் போற்றிப் பாதுகாப்பதும், கோயில் வழிபாட்டை நாளும் தவறாமல் கடமையாகக் கொண்டு வாழ்வதும் நன் மக்கள் கடமையாகும்.

திருவிழாக்கள்

மகாசிவராத்திரி , ஐப்பசி அன்னாபிஷேகம் , மார்கழி திருவாதிரை முதலான உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பிரம்மதேசம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திண்டிவனம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top