Monday Dec 30, 2024

அன்னியூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர் அஞ்சல் வழி கோனேரிராஜபுரம் குடவாசல் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN – 612201 PH:0435-2449578

இறைவன்

இறைவர்: அக்கினிபுரீசுவரர், அக்கினீஸ்வரர், இறைவி: கவுரி பார்வதி.

அறிமுகம்

திருவன்னியூர் அன்னியூர் அக்கினீசுவரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 62ஆவது சிவத்தலமாகும். காத்யாயணி மகளாக அம்பாள் தோன்றி இறைவனை மணக்கத் தவம் புரிந்து அவ்வெண்ணம் ஈடேறப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இச்சிவாலயம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அன்னியூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன. அதில் இத்தலம் காவிரி தென்கரைத் தலம் மற்றொன்று காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் பொன்னூர். இச்சிவாலயத்தின் மூலவர் அக்னிபுரீஸ்வரர். இறைவி கவுரி பார்வதி.

புராண முக்கியத்துவம்

சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாட தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், இத்தலம் வந்து லிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து சாபம் நீங்க பெற்றான். வன்னி என்றால் அக்னி என்று பொருள். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் அன்னியூர் ஆனது. இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது.

நம்பிக்கைகள்

திருமணத்தில் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து, திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 125 வது தேவாரத்தலம் ஆகும். பார்வதி தேவி காத்தயாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். றைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நைவேத்யம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும். கட்டடம் கட்டுதவதில் தாமதம் ஏற்பட்டால், 7 செங்கல் கொண்டு வந்து இங்கு வைத்து வழிபட்டு தொடங்கினால் தடையின்றி கட்டலாம் என்பது ஐதீகம். இங்குள்ள பஞ்சமூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி மிகவும் அழகானது.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம், மாசி மகம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கச்சனம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top