Sunday Dec 22, 2024

மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருமணஞ்சேரி-609 813. எதிர்கொள்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364-235 487.

இறைவன்

இறைவன்: ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர் இறைவி: சுகந்தகுந்தளாம்பிகை

அறிமுகம்

எதிர்கொள்பாடி மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 24வது சிவத்தலமாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது. நடைமுறையில் “மேலக் கோயில்” என்றே வழங்கப்படுகின்றது நுழைவாயில் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் காணப்படுகின்றன. கோயில் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. உள்ளே செல்லும்போது அடுத்தடுத்து ஒரே நேர்கோட்டில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாலசரஸ்வதி சன்னதிகள் அமைந்துள்ளன. உள்ளே கோயிலின் வலப்புறம் மலர்குழல்நாயகி சன்னதி உள்ளது. மூலவர் சன்னதி கோஷ்டத்தில் ஜெயதுர்க்கை, குருபகவான் எனப்படுகின்ற தட்சிணாமூர்த்தி உள்ளனர். கருவறை திருச்சுற்றில் சொர்ண பைரவர், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. அதை அடுத்து இரு பானங்களும், ஒரு லிங்கத்திருமேனியும் காணப்படுகின்றன. அடுத்து விநாயகர் உள்ளார். திருச்சுற்றில் நடராஜர் சன்னதி உள்ளது. அருகே ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்,சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

புராண முக்கியத்துவம்

திருவேள்விக்குடியில் பரத முனிவர் சிவபார்வதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணம் முடிந்ததும் தான் குடியிருக்கும் மேல திருமணஞ்சேரிக்கு வர இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இறைவனும் ஒப்புக் கொண்டார். இறைவனும், அம்மையும் வருகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும். பிரமாதமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார். மணக்கோலத்தில் வந்த தெய்வத்தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் “எதிர்கொள்பாடி’ என அழைக்கப்பட்டது. தற்போது “மேலக்கோயில்’ என்று அழைக்கிறார்கள். பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் அடைந்த போது, சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மகரிஷி. சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது நம் கலாசாரம். பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவனை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற சிவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் தலத்திற்கு எதிர்கொள்பாடி என்றும், சுவாமிக்கு திருஎதிர் கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.

நம்பிக்கைகள்

பொருளை பறி கொடுத்தவர்கள், பதவி பறி போனவர்கள் இங்கு வழிபட்டால் மிகவும் சிறப்பு. திருமணம் நடைபெறாமல் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால், இந்திரன், ஐராவதத்தின் சாபம் நீக்கியது போல் இவர்களையும் காத்து அருள்புரிவான். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது மிகவும் சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்

சிவனுக்கு அணிவிக்கப்பட்ட தாமரை மலரை கைகளில் ஏந்தியபடி தேவலோகத்தில் துர்வாச முனிவர் வந்தார். அசுரர்களை வென்ற இந்திரனுக்கு பரிசாக அளித்தார். இந்திரன் அதை அலட்சியப்படுத்தினான். இதனால் கோபம் கொண்ட முனிவர் பாண்டிய மன்னன் எறியும் கைவளையால் இந்திரனின் முடி சிதறுமாறு சாபமிட்டார். பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க, இந்திரனின் தலைக்கு வருவது முடியோடு கழியும் என்று சாபவிமோசனம் தந்தார். தாமரை மலரை புறக்கணித்ததில் இந்திரனின் ஐராவத யானைக்கும் பங்குண்டு. துர்வாசரால் சபிக்கப்பட்ட யானை பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தது. பல தலங்களில் பூஜையும் செய்தது. கடைசியாக இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து துயரம் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் “ஐராவதேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். அம்மனின் திருநாமம் “சுகந்த குந்தளாம்பிகை’ என்ற “மலர் குழல் நாயகி’. இந்திரனும் இழந்த பொன், பொருள், பதவியை பெற்றான். வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே’ என்று பாடி அனைவரையும் சுந்தரர் இந்த கோயிலுக்கு அழைக்கிறார். அந்த அழைப்பை நாம் ஏற்றால் தோழனின் மகிழ்ச்சியை காணும் சிவன் நமது குறைகளை போக்கி அருள்புரிவார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், ஐராவதம் யானை வழிபட்டதால் இங்குள்ள கர்ப்பக்கிரகம் யானை சுற்றும் அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது. திருமண வரவேற்பை இத்தலத்தில் நடத்தினால், தம்பதியர் நலம் பலபெற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

சித்திரையில் இந்திர விழா, கார்த்திகை சோமவாரம், மார்கழியில் திருவாதிரை.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குத்தாலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

குத்தாலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top