Tuesday Dec 24, 2024

மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், மேலையூர் போஸ்ட் – 609107 (திருவலம்புரம்), தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 200 890, 200 685.

இறைவன்

இறைவன்: வலம்புரநாதர் இறைவி: வடுவகிர்க்கண்ணி

அறிமுகம்

மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் (திருவலம்புரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 44ஆவது சிவத்தலமாகும். காவிரியாற்றின் வலப்பக்கம் அமைந்துள்ளதால் திருவலம்புரம் எனப்பெயர் பெற்றது.மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறத்தில் வடுவகிர்க்கண்ணி அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. கருவறையில் மூலவர் வலம்புர நாதர் உள்ளார். மூலவர் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஏரண்டமுனிவர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி, விநாயகர், சேதுபரமேஸ்வரர், அப்பர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், தட்சிணமகாராஜா, ராணி, தாருகாவனத்தில் ராமர் பூசை செய்த ராமநாதர், தாருகாவனத்தில் லட்சுமணர் பூசை செய்த விசுவநாதர்,வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். இத்தலத்தின் மரம் பனை மரம் ஆகும். தல விருட்சம்:ஆண்பனை, குட தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், கயா தீர்த்தம் ஆகமம்/பூஜை :சிவாகமம்

புராண முக்கியத்துவம்

காசி மன்னன் ஒருவன் தன் மனைவி கற்புடையவளா என்பதை சோதிக்க நினைத்தான். ஒரு முறை மன்னனும் அமைச்சர்களும் காட்டிற்கு வேட்டையாட சென்றனர். அப்போது மன்னன், தன் அமைச்சரிடம்,””மன்னர் காட்டிற்கு வேட்டையாட சென்ற போது புலி அடித்து இறந்து விட்டார்,”என்ற பொய்யை அரசியிடம் கூறும்படி உத்தரவிட்டார். அமைச்சரும் அதன் படி கூற, அரசி இச்செய்தி கேட்டவுடனேயே உயிரை விட்டாள். இந்த பொய் செய்தி கூறியதால் மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க மன்னன் சான்றோர்களிடம் விவாதித்தான். அதற்கு அவர்கள்,””மன்னா! திருவலம்புர திருத்தலத்தில் தினமும் 1000 அந்தணர்களுக்கு அன்னதானம் வழங்கினால் தோஷம் விலகும்,”என்றனர். மன்னனும் அதன்படி செய்து வந்தான். ஒரு முறை அன்னதானம் நடந்து கொண்டிருந்த போது, அசரீரி தோன்றி,””அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி, தானே ஒலிக்கும். அப்போது மன்னனின் தோஷம் விலகும்”என கூறியது. அன்னதானம் தொடர்ந்து நடந்து வந்தது. பட்டினத்தார் ஒரு முறை இக்கோயிலுக்கு அன்னதானம் நடக்கும் நேரம் வந்தார். பசியோடு இருந்த அவர், மடப்பள்ளியில் இருந்தவரிடம் தனக்கு உணவு தருமாறு கேட்டார். அவர் உணவு தர மறுக்கவே, மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்து பசியாறியதாகவும், உடனே இதுநாள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்க வில்லை, அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்து போய் பார்த்தபோது அங்கே பட்டினத்தடிகளை அனைவரும் தரிசித்தனர். உடனே மன்னனின் தோஷம் விலகியது. இதற்கான திருவிழா இப்போதும் சிறப்பாக நடைபெறுகிறது.

நம்பிக்கைகள்

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், தோல்வியாதி உள்ளவர்கள், ஸ்ரீஹத்தி(பெண்ணால் ஏற்படக்கூடியது) தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், சப்த நாகதோஷம் உள்ளவர்கள் அவை நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 107 வது தேவாரத்தலம் ஆகும்.ஆகும். திருமால் சிவனைக்குறித்து தவம் செய்ய போன போது, திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார். தவத்தின் பலனாக சக்ராயுதமும், கதையும் பெற்றார். அதன் பின் இங்கு வந்து, அம்மனை வணங்கி சங்கும், பத்மமும் பெற்றார் என் தல வரலாறு கூறுகிறது. ஹேரண்ட மகரிஷி திருவலஞ்சுழி காவிரியில் இறங்கி வலமாக வந்து இவ்வூரில் கரையேறினார். அதனால் இத்தலம் “திருவலம்புரம்’ ஆனது. அவரது ஜீவ சமாதி இங்கு தனி கோயிலாக உள்ளது. சம்பந்தருடன் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று வழிபட்ட போது, சிவபெருமான் இத்தலத்தில் திருநாவுக்கரசரை அழைத்து காட்சி கொடுத்துள்ளார். இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது. எனவே லிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகுசட்டம் சாத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. இதனால் இத்தலம் “மேலப்பெரும்பள்ளம்’ ஆனது. மகத நாட்டு மன்னன் தனஞ்செயன், தன் மகனிடம், “”நான் இறந்த பிறகு எனது அஸ்தி எங்கு மலராக மாறுகிறதோ, அங்கு அஸ்தியை கரைத்து விடு,”என்ற கூறிவிட்டு மறைந்தான். அதன்படி மைந்தன் பல தலங்களுக்கும் சென்றான். இறுதியில் இத்தலம் வந்ததும் அஸ்தி மலராக ஆனது. தந்தையின் ஆசைப்படி இத்தலத்தில் அஸ்தியை கரைத்து விட்டான். எனவே இத்தலத்தை காசியை விட புனிதமானது என புராணங்கள் கூறுகிறது. தட்சனும் அவனது மனைவியும், தங்கள் மகளாக தாட்சாயினி பிறக்க வேண்டும் என இத்தலத்தில் வேண்டியதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் உள்ள பிட்சாடனர் பேரழகுடன் இருப்பவர். இதை “அர்த்தநாரீஸ்வர பிட்சாடனர்’ என்பர்.

திருவிழாக்கள்

தை பரணியில் பிட்சாடணர் திருவிழா. பங்குனி உத்திரம், கார்த்திகை சோமவாரம், விநாயகர் சதுர்த்தி, ஆடிப்பூரம், தை, ஆடி, மகாளய அமாவாசை, திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேலப்பெரும்பள்ளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top