Monday Dec 23, 2024

இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி

அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம் – 604503. போன்: +91 94440 22548,99625 22548

இறைவன்

இறைவன்: வரதராஜ பெருமாள் இறைவி: பெருந்தேவிதாயார்

அறிமுகம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், இஞ்சிமேடு கிராமத்தில், ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் தனி சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீராமரின் இடது கையில் உள்ள தனுஸில் (வில்) நரசிம்மர் எழுந்தருளியிருப்பது மிகவும் அதிசயம். ராமரின் அருகிலேயே பெரிய திருவடி கருடாழ்வாரும், சிறிய திருவடி அனுமனும் அருள்பாலிப்பதும், நரசிம்மர் மடியில் உள்ள தாயார் நரசிம்மரை ஆலிங்கனம் செய்திருப்பதும் இக்கோயிலின் சிறப்பம்சம்.

புராண முக்கியத்துவம்

ஒருநாள் பரத்வாஜ முனிவரின் தவத்தில் மகிழ்ந்த பரம்பொருள், அவருக்குத் திருக்காட்சி தந்தருளினார். தன் அவதாரங்களை தானே பறைசாற்றிக் கொள்கிற திருமால், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே ஸ்ரீராமராகவும் திருக்காட்சி தந்தார். நரசிம்ம மூர்த்தமாகவும் தரிசனம் தந்தார்! இதில் மெய்சிலிர்த்துப் போனார் பரத்வாஜ முனிவர். பரம்பொருள், முனிவருக்குத் தரிசனம் அளித்ததை அறிந்து, அங்கே ஆச்சார்யர்களும் அந்தணர்களும் ஓடோடி வந்தனர். அந்த நதியிலும் கரையிலும் வனத்திலும் மனதைப் பறிகொடுத்தவர்கள், அவர்களும் அங்கேயே தங்கி, திருமாலுக்கு பூஜை செய்யத் துவங்கினார்கள். அந்த இடத்தில் மெள்ள மெள்ள நல்லதொரு அதிர்வலைகள் பரவின. தினமும் காலையிலும் மாலையிலும் வேத கோஷங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஒருபக்கம் அந்தணர்கள் கூட்டமாக அமர்ந்து வேதங்களை முழங்க.. இன்னொரு பக்கத்தில், ஆசார்யபுருஷர்கள் யாக வேள்வியில் ஈடுபட்டனர். பாஹு நதிக்கரையில் யாகங்களும் வேத கோஷங்களும் நிறைந்திருந்ததால், அந்த இடத்துக்கு யக்ஞ வேதிகை என்று பெயர் ஏற்பட்டது. அந்த இடம், யாக மேடு என்று அழைக்கப்பட்டது. முனிவர்களும் அந்தணர்களும் ஆசார்ய புருஷர்களும் வழிபட்டு வேதம் சொல்கிற அந்த இடம் குறித்து, மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மன்னர், அங்கே ஆலயம் ஒன்றை உருவாக்க ஆணையிட்டார். தொண்டை நாட்டில் சிறந்து விளங்குகிற ஆலயங்கள் எத்தனையோ உண்டு என்றபோதிலும், இந்தக் கோயிலை மிக அழகாகவும் பிரமாண்டமாகவும் கட்டி, வழிபடத் துவங்கினார் மன்னர் என்கிறது ஸ்தல வரலாறு.

நம்பிக்கைகள்

திருமண தோஷத்தால் கலங்குவோரும் பிள்ளை பாக்கியம் இல்லையே என வருந்துவோரும் தாயாருக்கு மஞ்சள் மாலை சார்த்துவதாகப் பிரார்த்திப்பது இங்கு விசேஷம்!

சிறப்பு அம்சங்கள்

ஸ்ரீமத் அகோபில மடத்தின் 34-வது பட்டம் சடகோப ராமானுஜ யதீந்திர மகா தேசிகன், மற்றும் 42-வது பட்டம் ரங்க சடகோப யதீந்திர மகா தேசிகன் என இரண்டு மகான்கள் அவதரித்த புண்ணிய பூமி இது. கோயிலும், அங்கே குடிகொண்டிருக்கிற மூர்த்தங்களும் கொள்ளை அழகு! வரதராஜ பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி. இவர் சன்னதிக்கு வந்து முறையிட்டால் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தருவார். பெருந்தேவித் தாயாரும் கருணையே உருவானவள். திருமண தோஷத்தால் கலங்குவோரும் பிள்ளை பாக்கியம் இல்லையே என வருந்துவோரும் தாயாருக்கு மஞ்சள் மாலை சார்த்துவதாகப் பிரார்த்திப்பது இங்கே விசேஷம்! பெருந்தேவித் தாயாரை மனதுள் நினைத்து, தினம் ஒரு மஞ்சள் (விரலி மஞ்சள்) எடுத்து, பூஜையறையில் வைத்துப் பிரார்த்திக்க… 48 நாட்களுக்குள் திருமண வரம் தேடிவரும் என்பது ஐதீகம்! பிரார்த்தனை நிறைவேறியதும் அந்த மஞ்சளையெல்லாம் எடுத்து மாலையாக்கி, தாயாருக்கு சார்த்தி வழிபட்டுச் செல்கின்றனர். மேலும், சீதாதேவி – லட்சுமணர் சமேதராகக் காட்சி தரும் ஸ்ரீராமரின் விக்கிரகத் திருமேனியைக் காணக் கண்கோடி வேண்டும். இங்கே.. ஸ்ரீராமரின் தனுஸில் (வில்) நரசிம்மர் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்! அஞ்சலி அஸ்தத்துடன் அனுமனும் காட்சி தருகிறார். மாதந்தோறும் மூல நட்சத்திர நாளில், இவருக்குச் சிறப்பு ஹோமமும் பூஜைகளும் நடைபெறுகின்றன. திருமணம் மற்றும் சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்கிறார் கல்யாண லட்சுமி நரசிம்மர். ஒருகாலத்தில் இந்தப் பகுதி, நரசிம்மபுரம் என்றும் அழைக்கப்பட்டது! கொள்ளை அழகுடன் காட்சி தரும் கல்யாண லட்சுமி நரசிம்மரைக் கண்ணாரத் தரிசித்தாலே எதிரிகள் தொல்லையெல்லாம் ஒழிந்துவிடும் என்கின்றனர், பக்தர்கள்! மாதந்தோறும் சுவாதி நட்சத்திர நாளில், சுவாதி மகா ஹோமமும் ஸ்வாமிக்குத் திருமஞ்சனமும் சிறப்புற நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு, பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜரையும் கல்யாண லட்சுமி நரசிம்மரையும் வணங்கித் தொழுதால், சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்; மனதில் உள்ள பயம் விலகி மனோபலம் கூடும் என்பது நம்பிக்கை!

திருவிழாக்கள்

இந்த கோவிலில் புத்தாண்டு திருவிழா, தைமாத திருவிழா, திருப்பாவாடை அன்னக்கூடை திருவிழா, பவுத்திர உற்சவம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, கருடசேவை, கிருஷ்ணஜெயந்தி ஆகியவை முக்கிய விழாக்களாக நடக்கின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இஞ்சிமேடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top