அரசூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி :
அரசூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
அரசூர், திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613202.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
ஆனந்தவல்லி
அறிமுகம்:
தஞ்சாவூர் – திருவையாறு பிரதான சாலையில் உள்ளது அரசூர் பேருந்து நிறுத்தம் இங்கிருந்து கிழக்கில் அரை கிமீ தொலைவில் உள்ளது கிராமம். தஞ்சையை சார்ந்த பல அரசு அதிகாரிகள் இங்கிருந்து அரசின் நிர்வாகத்தினை செய்தமையால் இது அரசூர் எனப்படுகிறது. ஊரின் மையத்தில் உள்ளது சிவன் கோயில். சோழர்களின் பிற்கால படைப்பு இந்த கோயில். தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்கள் சோழர், நாயக்கர், மராட்டிய காலக் கட்டமைப்புடன் இவ்வாலயம் காட்சியளிக்கின்றது இறைவனது விமானம் அழகிய துவிதள விமானமாக உள்ளது அர்த்த மண்டப விதானங்கள், காரை – சுண்ணாம்பு கலந்து உருவாக்கப்பட்டு மராட்டிய மரபுடன் காட்சியளிக்கின்றன.
முன் மண்டபம் மிகப் பெரிய அகலமான தூண்கள் தாங்கி நிற்கும் வகையில் பார்க்க பிரம்மாண்டமாக விளங்குகிறது. இது நாயக்கர் கால சாயல். தஞ்சாவூர் மராட்டிய மன்னனான இரண்டாம் சிவாஜி காலத்தில் அவரது நிர்வாகத்திற்கு உட்பட்டு 64 திருக்கோயில்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அவற்றுள் அரசூரில் உள்ள ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயிலும் ஒன்று. மராட்டிய மன்னர்கள், திருக்கோயிலில் அன்றாட பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் செவ்வனே நடைபெற நில மானியங்களை அளித்துக் கோயிலைப் பராமரித்து வந்தனர். தற்போதும் மராட்டிய போன்ஸ்லே வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகளே இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக உள்ளனர்.
இறைவன் மேற்கு நோக்கியவர், பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளதை காணலாம். அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், அவரின் நேர் எதிரில் தான் பிரதான வாயில் உள்ளது. இறைவன் – அகத்தீஸ்வரர் இறைவி – ஆனந்தவல்லி அகத்திய முனிவர் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்றென போற்றப்படுகிறது. பெரிய திருச்சுற்று மதில்கள் காணப்படும் இக்கோயிலில் விநாயகர், சண்டேசர், முருகன் என பரிவார தெய்வங்களும் சிற்றாலயம் கொண்டுள்ளனர். மாரியம்மன் ஒன்று முகப்பு மண்டபத்திலேயே உள்ளது. நந்தி தனி மண்டபம் கொண்டு இறைவனின் நேர் எதிரில் உள்ளார்.
கோயில் பிரகாரம் வலம் வர வசதியாக சிமென்ட் கலவையால் திருச்சுற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரக சன்னதியும் உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டுமே உள்ளார். ஒவ்வொரு மாசி மாதமும் மாலைச் சூரியன், நேரடியாக அகஸ்தீஸ்வரர் திருமேனியின் மீது கதிர்களை பரவவிடுவது அற்புதமான திருக்காட்சி. இந்நேரங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சரியான தேதிகள் குறித்து வைக்கப்படவில்லை.
சிறப்பு அம்சங்கள்:
இக்கோயிலில் மராட்டிய மன்னர் துக்கோஜியின் கல்வெட்டு கிடைத்துள்ளது சோழர் காலத்தில் இவ்வூரில் பல அதிகாரிகள் இருந்துள்ளனர். முதலாம் ராஜராஜனின் காலத்தை சேர்ந்த அரசூர் கோன்கொற்றன் என்பவர் மலைநாட்டு படையெடுப்பில் கலந்து கொண்டும், நாஞ்சில் நாட்டை நிர்வாகிக்கும் அரசியல் அதிகாரியாக இருந்தார், என சோழர் காலத்து நாகர்கோவில் கொம்மண்டையம்மன் கல்வெட்டால் அறிய முடிகிறது. இச்சோழ அரசனின் 14வது ஆட்சி ஆண்டில் திருப்பெருந்துறை கோவிலுக்கு பெரியதேவர், அஸ்திரதேவர் என்ற இரு இறை திருமேனிகளை அரசூரை சேர்ந்த பெண் ஒருவர் செய்து அளித்தார் என்பதும் திருப்பெருந்துறை கல்வெட்டின் மூலம் அறியலாம்.
தற்போது கிடைத்துள்ள மராட்டிய மன்னரான துக்கோஜி காலத்து கல்வெட்டு, (கி.பி.1706) விய விருடம் தை 20ம் தேதி அரசூர் அகஸ்தீஸ்வர சுவாமிக்கு துக்கோஜி ராஜா குடுத்த சன்னதி நிலம் இருவேலி” என்ற வரிகளுடன் இரண்டு அடி உயரத்திலும், அரை அடி அகலத்திலும் தமிழ் எழுத்தில் காணப்படுவதை கொண்டு அறியலாம். பல்லவர் குல சிற்றரசர் “சீரக்கன்” என்பவர், முக்கிய ஆலோசனைகளை அரசூர் அகஸ்தீஸ்வர சுவாமி முன்பு நின்று உத்தரவாகக் கேட்டுச் செயல்படுத்தியதாக செவிவழிச் செய்தி சொல்கிறது. “பொன் போலும் பொறி பறக்கும் கானகத்தே” என்று தொடங்கும் பாடலை பொய்யாமொழிப் புலவர் இவ்வூரிலிருந்து பாடியதாகச் சொல்வர். அவர் பெயரில் “பொய்யாமணி” என்ற இடமும் இவ்வூரில் உண்டு.












காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அரசூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி