வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வழுவூர், வழி மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டம் – 609401
இறைவன்
இறைவன்: வீரட்டேஸ்வரர், கஜசம்ஹாரர் இறைவி: பாலகுஜாம்பிகை
அறிமுகம்
வழுவூர் வீரட்டானேசுவரர் கோயில் அட்டவீரட்டானக் கோயில் தலங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள வழுவூரில் அமைந்துள்ளது. பிரளய காலத்தில் உலகெல்லாம் அழிந்தும் இவ்வூர் அழியாது பிரளயத்தினின்றும் வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது. இக்கோயிலில் உள்ள இறைவன் வீரட்டானேசுவரர் ஆவார். இறைவி பால குஜாம்பிகை ஆவார். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆணவம் கொண்டனர். அவ்வாறே அவர்களது மனைவியரும் நினைத்தனர். இவர்களது ஆணவத்தையும் கர்வத்தையும் அழிக்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர். முனிவர்கள் மோகினியைக் கண்டும், அவர்களது மனைவியர் பிட்சாடனரைக் கண்டும் தந்நிலை அழிந்தனர். பெருமான் மோகினியோடு கூடி ஐயனாரை பெற்றெடுத்து மறைந்தார். முனிவர்கள் சிவபெருமானின் செயல் கண்டு கோபம் கொண்டனர். வேள்வி செய்து அக்னி, புலி, மான், மழு, பாம்பு, முயலகன் ஆகியவற்றை சிவபெருமான் மீது ஏவி தோல்வி கண்டு கடைசியாக மதயானையை வேள்வி தீயிலிருந்து உண்டாக்கி பெருமான் மீது ஏவினர். பிட்சாடனர் உருவில் வந்த பெருமான் யானையின் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார். உலகம் இருள்கிறது. அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள். பெருமான் யானையின் வயிற்றிலிருந்து கலக்க, கொல்ல வந்த யானை வலி தாங்க முடியாமல் தவிக்க, சுவாமி யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு (ஊர்த்துவ தாண்டவம்) வீர நடனமாடிக் கொண்டு வருகிறார். அதன்பின் ஆணவம் அழிந்த முனிவர்கள், வந்தது சிவன் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டனர். யானையை சம்ஹாரம் செய்தவர் என்பதால் இறைவன் “கஜசம்ஹாரமூர்த்தி’ எனப்படுகிறார். சனிபகவான் : சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்கிறார். இதில் விக்கிரமராஜா தோற்றுப் போய்விடுகிறார். இத்தீர்த்தத்தில் வந்து விழுகிறார். தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபடுகிறார். சுவாமி அவருக்கு அருள் பாலிக்கிறார். சனி பகவான் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். சனிபகவானை சுவாமி ஒரு காலை முடமாக்கி விடுகிறார். இத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் யானையை பிளந்து சிவபெருமான் வீரச்செயல் புரிந்துள்ளார். சனீஸ்வரனுக்கு இங்கு சாப நிவர்த்தி ஆன தலம்.
நம்பிக்கைகள்
அமாவாசை தோறும் சுவாமி சன்னதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோசம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றை பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் நிறைவேறுகிறது. இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீகவீ யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால் பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும். இத்தலத்தில் வீற்வீ றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
சிறப்பு அம்சங்கள்
இத்தலத்தின் விசேஷ மூர்த்தி இந்த கஜசம்கார மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது. திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது எங்குமில்லாத தனிசிறப்பு. இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கினால், ஞானம் கிடைக்கும். அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும். சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள். பெருமான், உமையஞ்ச ஆனையை உரித்ததை இத்திரு உருவத்தில் காணலாம். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம். சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும். முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். கஜ சம்கார மூர்த்தி உள்ள இடம் ஞானசபை ஆகும். கஜசம்கார நடனம் நவ தாண்டவத்தில் ஊர்த்துவ தாண்டவமாகப் போற்றப்படும் நடன சபையில் ஞானசபை என்று இது கூறப்படும். யானையைப் பிளந்து வீரநடனமாடி வரும் அப்பாவைப் பார்த்து அம்பாளின் இடுப்பில் இருக்கும் முருகப்பெருமான் அதோ அப்பா வருகிறார் என்று சுட்டிக் காட்டியபடி உள்ளார். 48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது. சனீஸ்வரனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சனீஸ்வரன் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது சிறப்பம்சம். தீர்த்தங்களில் சுவாமி சன்னதிக்கு எதிரே உள்ள ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை விசேசமானது. பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதாதலின் வழுவூர் என்று ஆனது. இதிகாசங்களில் இத்தலம் தாருகா வனம் என்று குறிப்பிடப்படுகிறது.
திருவிழாக்கள்
மாசிமகம் – யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி -10 நாட்கள் திருவிழா – தினமும் இரண்டு வேளை வீதி வீ யுலா – 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி – 10 ம்நாள் தீர்த்த வாரி – இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். மார்கழி – திருவாதிரை – 3 நாட்கள் திருவிழா புரட்டாசி – நவராத்திரி திருவிழா – 10 நாட்கள் திருவிழா கார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும், இரவு தினந்தோறும் யந்திர பிரதிஷ்டைக்குப் பூஜை நடைபெறுகிறது. அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். ஆடிப்பூரம், பவுர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும். கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேஷ நாட்கள் ஆகும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி,பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வழுவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி