லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில், திருச்சி
முகவரி
அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில், திருமஞ்சன தெரு, திருத்தவத்துறை (லால்குடி), திருச்சி மாவட்டம் – 621601. தொலைபேசி எண்- 0431 2541329
இறைவன்
இறைவன்: சப்தரிஷீஸ்வரர் இறைவி: பெருந்திருப்பிராட்டியார்
அறிமுகம்
திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் பாதையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது லால்குடி. இங்கு பழம்பெருமை வாய்ந்த சப்தரிஷிஸ்வரர் கோயில் உள்ளது. மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது, இந்த ஊர் பக்கம் வந்தார்கள். அப்போது திருவத்துறை சப்தரிஷிஸ்வரர் ஆலய கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகுபடுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. இதனைக் கவனித்த மாலிக்காபூர், அருகிலிருந்த தளபதியிடம் உருது மொழியில், “அது என்ன லால் (சிவப்பு) குடி (கோபுரம்)? என்றான். அச்சொற்றொடரே “லால்குடி’ என்று மாறி விட்டது. இக்கோயில் மிகப்பழமையான கோயில். மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். அம்பாள் பெயர் சிவகாம சுந்தரி. ஏழு முனிவர்கள் வழிபட்ட திருத்தலம் இது. சப்தரிஷிகளும் தவமிருந்து வணங்கி வழிபட்டு பூஜைகள் செய்த திருத்தலம் என்பதால், சப்தரிஷிகளுக்கும் சிவனார் திருக்காட்சி தந்தருளியதால், இங்கே உள்ள ஈசனுக்கு சப்தரிஷீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தலபுராணம். இங்குள்ள லிங்கத்தின் மேல் வரிவரியாய் பள்ளங்கள் உள்ளது. இத்திருக்கோயில் இந்து சமய அறநிலைய துறையால் பாதுகாக்கப்படுகிறது. இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் திருவருளால் முருகக் கடவுள் அவதாரஞ்செய்து குழந்தையாகத் தோன்றினார். சப்தரிஷிகள் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கீரசர், மரிசி ஆகியோர் அந்த ஏழு முனிவர்கள் ஆவர்கள். சப்த ரிஷிகளின் ஆசிரமம் அருகே உள்ள தாமரைப் பொய்கை அருகே, தனித்து விடப்பட்ட குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்தது. அந்த குழைந்தைக்கு பாலுட்டுமாறு தனது பத்தினியான அருந்ததியிடம் வசிஷ்டர் கூறினார். பூஜைக்கு மலர் பறிக்க சென்று கொண்டு இருந்ததால், அருந்ததி குழந்தைக்கு பால் கொடுக்கவில்லை. கோபம் கொண்ட வசிஷ்டர் தனது மனைவியை தனிமைப்படுத்தி தண்டித்தார். மற்ற ரிஷி பத்தினிகள் அனைவரும் அருந்ததியை சார்ந்தும், ரிஷிகள் வசிஷ்டரை சார்ந்தும் வாதிட்டார்கள். ரிஷி பத்தினிகளுள் ஒருவரான அருந்ததி குழந்தைக்குப் பால் கொடுக்க மறுக்கவே கார்த்திகை பெண்கள் அறுவரும் குழந்தைக்குப் பால் கொடுத்தனர். இச்செய்தியை ஏழு முனிவர்கள் கேட்டு மனைவிமார்களைச் சபித்து விட்டார்கள். குழந்தை ஆறுமுகனாக மாறி முனிவர்களைச் சபித்தார். இதனால் முனிவர்கள் தன் சாபம் நீங்கும் பொருட்டுத் இத்தலத்துக்கு வந்து தவம் செய்தனர். ஏழு ரிஷிகள் கடுந்தவம் புரிந்ததால், அவர்களுக்கு அருள் செய்ய தன் சிவப்பேரொளியில் அவர்களை ஐக்கியப்படுத்திக் கொண்டார் ஈசன். தன் லிங்கத் திருமேனியில் ஏழு ரிஷிகளும் ஐக்கியமானதால், இத்தலத்திலுள்ள சிவலிங்கத் திருமேனியில் ஏழு புள்ளிகள் தோன்றின. மேலும் ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை ஆயிற்று. ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
நம்பிக்கைகள்
மகாலட்சுமி தாயார், இங்கு இந்தத் தலத்தில் கடும் தவம் புரிந்து மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டாள் என்கிறது ஸ்தல புராணம். எனவே இந்தத் தலத்துக்கு வந்து, சப்தரிஷீஸ்வரரை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். இங்கு, அம்பாள், சரஸ்வதி, மகாலட்சுமி தாயார், துர்கை முதலானோருக்கு புடவை சார்த்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். தாலி பாக்கியம் நிலைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். கடன் முதலான தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் குடிகொள்ளும் என்கிறார்கள்
சிறப்பு அம்சங்கள்
சிதம்பரம் திருத்தலத்துக்கு அடுத்தபடியாக, மார்கழி மாத திருவாதிரை திருநட்சத்திர நன்னாளில், ஆருத்ரா தரிசனமும் இரவில் ஆனந்தத் திருநடனமும் இங்கு விமரிசையாக நடைபெறுகிறது. அதேபோல், திருக்கடையூர் திருத்தலத்துக்கு இணையாக இங்கே உள்ள அமிர்தகடேஸ்வரர் சந்நிதியில், சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் அறுபதாம் கல்யாணமும் சதாபிஷேகம் எனப்படும் எண்பதாம் கல்யாண வைபவமும் இங்கு விமரிசையாக நடைபெறுகிறது. லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலின் மற்றுமொரு சிறப்பு… பெருந்திருப்பிராட்டியூர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீமகாலட்சுமி முதலானோர் அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம்.
திருவிழாக்கள்
இத்திருகோவிலில் நாள்தோறும் ஆறுகால அபிஷேகம் நடைபெறும். சித்ராபவுர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தசஷ்டி, சோமவாரம், திருவாதிரை, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியன ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
லால்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
லால்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி