மூவலூர் மார்க்க சகாயேசுவரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
மூவலூர் மார்க்க சகாயேசுவரர் திருக்கோயில், மூவலூர், மல்லியம் (வழி), நாகப்பட்டினம் மாவட்டம் – 609806.
இறைவன்
இறைவன்: மார்க்க சகாயேசுவரர் இறைவி: செளந்தரநாயகி, மங்களாம்பிகை
அறிமுகம்
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மூவலூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய நிலையில் ராஜகோபுரம் எழிலாக அமைந்துள்ளது. இருபுறமும், விநாயகர், முருகன் சன்னிதிகள் காணப்படுகின்றன. ஆலயத்தின் உள்ளே வலதுபுறம் செளந்தரநாயகி, அருகில் மங்களாம்பிகை சன்னிதிகளும், எதிரே சப்தமாதர், நவ நாகங்கள் சன்னிதியும் அமைந்துள்ளன. நடுநாயகமாக இறைவன் மார்க்க சகாயேசுவரர் எளிய வடிவில் ஒளிவீசும் முகத்தோடு அருள் வழங்குகின்றார். பல்வேறு அற் புதங்களை நிகழ்த்திய இறைவன் வழிகாட்டும் வள்ளல், மார்க்க சகாயேசுவரர் எளிய வடிவிலும் கிழக்கு முகமாய் அருளாசி வழங்குகின்றார். அரி, அயன், அரன் மூவரும் வழிபட்ட தலமாதலின்; மூவர் ஊர் – என்பது மருவி மூவலூர் என்றாயிற்று. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சனி என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டி, தேவர்களையும் மக்களையும் வாட்டி வதைத்து வந்தனர். தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்களையும் மக்களையும் காத்திட திருவுள்ளம் கொண்டார் ஈசன். அதைத் தொடர்ந்து பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட் டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் உள்ளிட்டோர் ‘அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது’ என்று எண்ணி கர்வம் கொண்டனர். இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்கள் அனைவருக்கும் சாபம் ஏற்பட்டது. மனம் வருந்திய திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினர். அவரது ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர். இறைவனின் கருணையால் அங்கு சிவலிங்கம் வெளிப்பட்டது. அவரை வணங்கி வழிபட்டு தோஷம் நீங்கினர் என தலபுராணம் கூறுகிறது. மற்றொரு தல புராணம் : திரிபுரம் தகனம் ஆன பிறகு திருமாலும், பிரம்மனும், இந்திரனோடு திரிபுரம் எரித்த அம்பைத் தேடி வந்தனர். அப்போது வேடன் உருவில் வந்த மாயூரநாதர், அவர்களை எதிர்கொண்டு அழைத்தார். அவர்களைப் புன்னாக வனத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே வனத்தில் மறைந்திருந்த இறைவனின் லிங்கத் திருமேனியைக் காட்டி மறைந்தார். அவர்களுக்கு வழிகாட்டியதால் இறைவன் ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் வழங்கப்பட்டார். மகிஷாசுரன் தன் தவ வலிமை யால், ‘ஆண்களால் தன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது’ என்ற வரத்தை சிவ பெருமானிடம் கேட்டுப் பெற்றான். அவனைப் பொறுத்தவரை, பெண்கள் எல்லாரும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தால் தேவர்களுக்கும், மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்து வந்தான். பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். அசுரனை வதம் செய்வது பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதால், அன்னை பார்வதியை நாடுமாறு சிவபெருமான் அறிவுறுத்தினார். அதன்படி தேவர்கள் அனைவரும், அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்குச் செவி மடுத்த அன்னை துர்க்கையாக வடிவம் பூண்டு, அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம், அழகிய முகமாக மாற, மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி, இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால், அன்னை அழகிய திருவுருவம் பெற்றாள். மீண்டும் இறைவனை மணம்புரிய தவம் இயற்றினாள். அதன்படியே இறைவனை மணந்தாள் என தலபுராணம் கூறுகிறது. இச்சம்பவம் பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. இந்த ஐதீகம் இன்றும் இந்த ஆலயத்தில் விழாவாக நடைபெறுகிறது.
நம்பிக்கைகள்
இந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலாபிஷேகம் செய்தும், அபிஷேக பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
இவ்வாலயத்தில் செளந்தரநாயகியுடன், மங்களாம்பிகை என்ற அம்மனுக்கும் தெற்கு முகமாய் தனி சன்னதி அமைந்துள்ளன. அன்னை இருவரின் வடிவங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அமாவாசை தோறும் சவுந்திரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும், லலிதா திரிசடையும், சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகிறது.இத்தலத்து இறைவனை, அன்னை பார்வதி, திருமால், பிரம்மா, சந்திரன் வழிபட்டுள்ளனர். மகா சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நவ நாகங்களும், ரத சப்தமியில் சப்தமாதர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர். இது தவிர, கர்மசேனகியர் என்ற மன்னன், பிப்பிலர் என்ற உபமன்யு முனிவர் என பலரும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
திருவிழாக்கள்
பங்குனி ஆயில்யத்தில் சவுந்திரநாயகி திருக்கல்யாண உற்சவம், உத்திர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி, தைப்பூசம், நவராத்திரி, மகா சிவராத்திரி, மாசி மகம், தீர்த்தவாரி, பிரதோஷம் உள்ளிட்ட சிவாலய விழாக்கள் சிறப்பாக நடை பெறுகின்றன.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மூவலூர் தேரடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி