மானாமதுரை சோமேஸ்வரர் (திருபதகேசர்) திருக்கோயில், சிவகங்கை

முகவரி :
அருள்மிகு சோமேஸ்வரர் (திருபதகேசர்) திருக்கோயில்,
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் – 630606.
போன்: +91 – 4574 268906
இறைவன்:
சோமேஸ்வரர் (திருபதகேசர்)
இறைவி:
ஆனந்த வள்ளி
அறிமுகம்:
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையில் அமைந்துள்ள சோமேஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு பிரதான கடவுள் சோமேஸ்வரர் (திருபதகேசர்) மற்றும் அம்மன் (தாயார்) ஆனந்த வள்ளி. சிவகங்கையிலிருந்து 18 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மாணிக்கவாசகர் இத்தலத்து சிவபெருமானை வணங்கி அவர் மீது பாடல்கள் பாடினார்.
மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மானாமதுரை. மதுரை மற்றும் திருச்சியில் இருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் நோக்கி ஏராளமான ரயில்கள் உள்ளன. அருகிலுள்ள விமான நிலையம் மதுரையில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
இருபத்தேழு நட்சத்திர தேவதையர்களின் கணவனான சந்திரன், ஒரு முறை தனது ஊழ்வினை காரணமாக ரோகிணியின் மீது மட்டும் கூடுதலான அன்பு காட்டி பிற மனைவியரைப் புறக்கணித்து வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் மிகுந்த துன்பமுற்று, தம் கணவன் சகோதரி ஒருத்தியிடம் மட்டும் அன்பு காட்டி வருவதை தங்களது தந்தை தட்சனிடம் முறையிட்டனர். இதனால் கடும்கோபங்கொண்ட அவன், தனது தவ வலிமையால் சந்திரனுக்கு சயரோகம் (தொழுநோய்) பீடிபீ க்கும் படி சாபம் கொடுத்தான். இதனால் சந்திரன் சயரோக நோயினால் பாதிக்கப்பட்டு நாள்பட அவனது கலைகள் சிறிது சிறிதாக தேயத்தொடங்கின.
இதனால் அச்சமுற்ற சந்திரன் தனது சாபம் நீங்கி பழைய பொலிவு பெற்றிட அகத்தியரிடம் வழி கேட்டான். அவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் நதியின் மேற்கு கரையில் அமைந்த வில்வவனத்தில் அருட்காட்சி தரும் லிங்கத்திற்கு தனியே கோயில் எழுப்பி பூஜிக்க அவனது பிணி தீர்ந்து பழைய நிலை கிட்டும் என கூறி அருளினார்.
தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதியில் அகத்தியர் கூறியது போல லிங்கம் அமைந்திருப்பதைக் கண்ட சந்திரன் பெருமகிழ்வுற்று தனியேதீர்த்தம் ஒன்றினை அமைத்து அத்தீர்த்தத்திலும், வைகையிலும் நீராடி சிவனைமனம் உருகி தனது கலையினால் தொடர்ந்து பூஜித்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வந்தான். அவனது பக்தியில் அகம் மகிழ்ந்த சிவபெருமான் அருட்காட்சியளித்து, அவனது நோயைப் போக்கி அருளினார். மேலும், சந்திரனின் வேண்டுகோளை ஏற்று அவரே இத்தலத்தில் உமையவள் ஆனந்தவல்லியுடனாய சோமநாதராக காட்சி தருகிறார். பிற்காலத்தில் இந்த கோயில் பிரளயத்தால் அழிந்திட இறைவனின் அருட்கட்டளைப்படி ஸ்தூலகர்ண மகாராஜா மீண்டும் இக்கோயி்லை புதுப்பித்துக் கட்டினார்.
நம்பிக்கைகள்:
இத்தலத்தில் உள்ள சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி இறைவனை மனம் உருகி வேண்டிக்கொள்ள தொழுநோய்கள் குணமாகின்றன. ஆடித்தபசு தினத்தில் சுவாமிக்கு அணிந்த மாலையை அணிந்து கொள்ள திருமணத்தடை நீங்குகிறது. புத்திரபாக்கியம் கிடைக்கிறது.
சிறப்பு அம்சங்கள்:
சிவபெருமான் தனது திருவிளையாடலின் போது தமது அடியார் மாணிக்கவாசகருக்காக இத்தலத்தில்தான் நரிகளைப் பரிகளாக மாற்றிட கயிறு மாற்றிக்கொடுத்தார். ஸ்ரீராமர், அகத்தியரின் ஆலோசனைப்படி இங்கு வந்து இறைவனைப் பூஜித்து அதன் பின்பு சேது அமைத்து இலங்கைக்குச் சென்று முடிசூடினார். ராமன் ராவணனுடன் போர் புரிந்த போது வானரச்சேனைகளின் பசியை போக்கிய தலம். பலராமர் தனது தீர்த்த யாத்திரையின் போது சூரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தினை, இத்தலத்திற்கு வந்து வில்வ வனத்தில் இருந்த லிங்கத்தினைப் பூஜித்து பாவவிமோசனம் பெற்று பின் துவாரகை மீண்டார். மகாஞானி ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரன் வாயு வடிவில் காட்சி தந்த நான்கு தலங்களில் ஓர் தலம். மூர்த்தி, தீர்த்தம் தலம் என சிறப்பு பெற்ற இத்தலத்தில் சந்திரன் சயரோகம் தீர தனது கலைகளால் அபிஷேகம் செய்து பூஜித்ததால் இங்கு உள்ள சுயம்புலிங்கம். வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறது. சிவபெருமானுக்கு மேற்குப்பகுதியில் விருஷபம், சூலத்துடன் கூடிய சிலை உள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.
திருவிழாக்கள்:
சித்திரையில் 10 நாள் மற்றும் ஆடியில் 10 நாட்கள் வருடத்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், பிரதோஷ நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.









காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மானாமதுரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மானாமதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை