Sunday Dec 29, 2024

மணம்தவிழ்ந்தபுத்தூர் சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில், கடலூர்

முகவரி

மணம்தவிழ்ந்தபுத்தூர் சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில், மணம்தவிழ்ந்தபுத்தூர், பண்ருட்டி தாலுகா, கடலூர் மாவட்டம் – 607101. Ph: +91 9751988901, 9047261148

இறைவன்

இறைவன்: சொக்கநாதீஸ்வரர் இறைவி: மீனாட்சி அம்பாள்

அறிமுகம்

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் திருமணம் தடைப்பட்டு நின்ற இடம் – பண்ருட்டிக்கு அருகே சுமார் 7 கி.மீ தொலைவில் மணம்தவிழ்ந்தபுத்தூர் என்ற கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாக்ஷி அம்பிகா ஸமேத ஸ்ரீ சொக்கநாதீஸ்வர ஸ்வாமி ஆலயம். எல்லா சிவன் கோவில்களிலும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கியமான நால்வராகிய திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் இவர்களுடைய திருவுருவச் சிலைகள் கட்டாயம் இருக்கும். இதைக் குறிப்பிடும் வகையில் பாலை, வேலை, ஓலை, காலை என்று குறிப்பிடும் நான்கு புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. அதில் ஓலை சம்பந்தபட்டது (மணம்தவிர்த்த புத்தூர்) மணம்தவிழ்ந்தபுத்தூர். முதலில் இந்த ஊர் ”புத்தூர்” என்று மட்டும் முன் காலத்தில் அழைக்கப்பட்டது. சுந்தரருடைய திருமணத்தைத் தடுத்து அவரை ஆட்கொண்டதால் மணம் தவிர்த்த புத்தூர் என்றும், பின்னர் அது மருவி மணம் தவிழ்ந்த புத்தூர் என வழங்கபடுகிறது. எல்லா சிவன் கோவில்களும் பெரும்பாலும் கிழக்கு பார்த்த அமைப்பில் தான் ஆவுடையார் வீற்று இருப்பார். குறிப்பிட்ட சில சன்னதிகளில் மட்டும் மேற்கு பார்த்த அமைப்பிலும் ஆவுடையார் காணப்படுகிறார். இக்கோவிலின் மூலவர் சொக்கநாதீஸ்வரர் தாயார் மீனாக்ஷி அம்பாள்.

புராண முக்கியத்துவம்

சடைய நாயனார், இசைஞானியார் தம்பதிக்கு திருநாவலூரில், கி.பி. 807ஆம் ஆண்டு, ஆவணி உத்திர நன்னாளில் பிறந்தவராவார் சுந்தரர். இவருக்கு தந்தையிட்டபெயர் நம்பி ஆரூரன் நடுநாட்டு மன்னரான நரசிங்க முனையரையர் சுந்தரரின் சிறுவயது அழகை பார்த்து அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியுடன் தத்தெடுத்து, தானே வளர்த்து வந்தார்கள். சுந்தரரின் பதினாறாவது வயதில், அவருக்குத் திருமணம் நடத்திட நினைத்தார் மன்னர். இதற்கு சடையனார் இசைஞானியார் அனுமதி பெற்று மணப்பெண் தேடினார். இறுதியில் இன்றைய பண்ருட்டியை அடுத்த புத்தூரில் வாழ்ந்திருந்த ”சடங்கவி” என்ற சிவாச்சார்யாரின் மகளான கமலஞானப் பூங்கோதையினைத் தேர்வு செய்து நிச்சயம் செய்தார். திருமணத்தேதி குறிக்கப்பட்டது! புத்தூர் விழாக்கோலம் பூண்டது. திருக்கோவில் இருக்கிற இந்த வீதியில் தான் திருமண வாத்தியங்கள் முழங்க சுந்தரர் தேரில் ஆள், அம்பு, குதிரை, யானை பரிவாரங்களுடன் திருமணக் கோலத்தில் வந்தார், திருமணச்சாலையிலே திருமணச் சடங்குகள் நிறைவேறிக் கொண்டிருந்தது. அந்த வேளையில் உரத்தக் குரலில் ஒரு முதியவர் சுந்தரா! நிறுத்து உன் திருமணத்தை?!” என்று முழங்கியவாறு மணவறையை நெருங்கினார்! அனைவரும் திகைத்துப் போய்த் திரும்பினர். அந்த முதியவர், கையில் ஏட்டுச் சுவடியொன்றுடன் வந்தார். சுந்தரரை பார்த்து, “அப்பனே! நீ எனது அடிமை! உன் தகப்பன், பாட்டன் எல்லோரும் எனக்கு அடிமை! என் அனுமதியின்றி நீ மணம் முடிக்க முயன்றது குற்றமாகும்!” என்றார் ஆக்ரோஷமாக… திருமணக் கோலத்தில் இருந்த சுந்தரர், நீர் என்ன பித்தனா? நான் அடிமை என்பதற்கு அத்தாட்சி என்ன? என்று கேட்க, இதோ உன் பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்த அடிமை ஓலை எனக்கூறி ஓர் ஓலையை நீட்டினார் முதியவர். அதைப் படித்துக்கூடப் பார்க்காமல் கிழித்து, அக்கினியில் இட்டுப் பொசுக்கினார் நம்பியாரூரர்! முதியவருக்கும்,சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. ஓலையை சுந்தரர் கிழித்து தீயில் இட்டதினால் கோபமுற்ற முதியவர் இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய் நல்லூருக்கு செல்வோம் வா! அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன்” என்று கூறினார். சுந்தரரோ, “”அப்படியோர் வழக்கு இருக்குமெனில் அதை முடித்தப் பின்னரே மணம் முடிப்பேன்” எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார். இங்க ஒரு திருக்குளம் இருந்ததாகவும் அதில்தான் மணம் முறிந்த உடன் வெறும் கையுடன் சென்ற சுந்தரர் வந்த தேர், குதிரை எல்லாம் சென்று மறைந்ததாகவும் சொல்லபடுகிறது. சுந்தரருடன் மணம் முறிந்த நிலையில் கமலஞானப் பூங்கோதை வழக்கு நடந்த இடத்திற்கு சென்று இறைவனிடம் முறையிடுகிறார். இப்படி என்னுடைய திருமணம் ஆகிவிட்டதே! நான் என்ன செய்வது!? எனக் கேட்கும்போது ஈசன் அவருக்கு காட்சியளித்து கமலஞானப் பூங்கோதையை அவர் பிறந்த ஊரான இங்கு வந்து தவம் இயற்றி என் திருவடியை வந்து சேர் எனக் கூறினார். அந்த அம்மையாரும் திரும்பி இந்த ஸ்தலத்திற்கு வந்து இறைவனுடைய திருவடியை அடைந்தார். பின்னர் சிவப்பெருமான் அருளால் கயிலையைச் சேர்ந்த கமலினியும், அநிந்தையும் பூவுலகில் பரவை நாச்சியாராகவும், சங்கிலி நாச்சியாராகவும் அவதரித்திருந்தனர். சிவனருளால் அவர்களை திருமணம் செய்து கொண்டாராம் சுந்தரர்.

நம்பிக்கைகள்

இது ஒரு திருமணத்தடை பரிகார ஸ்தலமாகும். திருமணத்தில் ஏற்படும் தடைகள் நீங்கவும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் இக்கோவிலில் சோமவாரத்தில் பரிகார பூஜைகள் செய்யபடுகிறது.

சிறப்பு அம்சங்கள்

லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூலவர் சன்னதியின் வெளிப்புறத்தில் அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னதியின் முன்பு அவரது வாகனமான சிம்மமும், அதன் பின்னே பலிப்பீடமும் அமைந்துள்ளது. இங்கு, காலபைரவரும், சூரியனும் ஒரே நேர்க்கோட்டில் வீற்றிருந்து அருள்பாளிப்பது கூடுதல் சிறப்பு. அதனை அடுத்து சந்திரனும் ஒரே வரிசையில் தனியாக வீற்றிருக்கிறார். இத்தலத்து சிவன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு. இங்கு ஆவுடையார் சன்னதிக்கு மேலே சுதந்தரரைமணம் தடுத்த கோலம் சிலை வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆவுடையாருக்கு முன்புறம் நந்தியும், நந்தியின் பின்புறம் பலிபீடமும் இருக்கிறது. முக்கியமாக அகஸ்தியர் வழிபட்ட ஸ்தலமாகும் இது.

திருவிழாக்கள்

சோமவார பூஜை

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மணம்தவிழ்ந்தபுத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பண்ருட்டி

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top