மகிழஞ்சேரி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
மகிழஞ்சேரி கைலாசநாதர் சிவன்கோயில், மகிழஞ்சேரி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609504.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி: அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்
மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் உள்ள ஆண்டிபந்தல் சென்று அங்கிருந்து திருவாஞ்சியம் செல்லும் புத்தாற்றின் வடகரை சாலையில் சென்றால் ஒரு கி.மீ. தூரத்தில் பனங்குடி அடையலாம். ஆற்றின் தென் கரையில் உள்ள பனங்குடியின் தென்புறத்தில் அரைகி.மீ. தூரத்தில் உள்ளது இந்த மகிழஞ்சேரி. இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயில் உள்ளது. யாரும் அதிகம் செல்ல இயலாத குறுகிய வழியாக கோயிலுக்கு செல்லும் வழி உள்ளது. சுற்றிலும் வயல்வெளிகளும் மரங்களும் நிறைந்துள்ளது. தற்போதுள்ள இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. அதுவும் நன்னிலத்தில் இருந்து ஒரு குருக்கள் வந்து செல்கிறார், அந்த நேரத்தில் நீங்கள் இங்கு இருந்தால் இறைவனை காணும் பேறு பெற்றவர் ஆவீர்கள். ஐந்து சென்ட் பரப்பளவு மட்டுமே கொண்ட கோயில். இக்கோயிலில் இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், இறைவி அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கிய சன்னதியிலும், பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமணியர், லட்சுமி உபசன்னதிகளும் உள்ளன. மயில்களின் அகவலும் சுவர்கோழிகளின் கீச்சும் தான் இறைவனுக்கு பேச்சுத்துணை.
புராண முக்கியத்துவம்
நடராஜர், ஒவ்வொரு தலத்திலும் வெவ்வேறு வகையான நடனங்களை ஆடியிருக்கிறார். மகிழஞ்சேரியில், உன்மத்த நடனம் என்ற அபூர்வமான நடனம் ஆடி இருக்கார். ஒவ்வொரு அங்குலமாக பார்த்து ரசிக்கத்தக்க நடராஜர், திருவாசி, விரிந்தசடை, உடுக்கு ஏந்திய கை, அனல்பறக்கும் திருக்கரம்,ஆனந்தப் புன்னகை நெளிந்தோடும் அழகு முகம் துடி இடை,தூக்கிய திருவடி, தரையில் பதிந்த பாதம் ஆனந்த தாண்டவத்தின் மெய்மறந்த நிலையை உணர்த்தும் வகையில் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது, அது மட்டும் தானா பிற தல நடராஜர்களில் ஊமத்தை பூ நிமிர்ந்து நிற்கும், இங்கு இறைவனின் ஆட்டத்தில் அதுவும் மெய் மறந்து நெற்றி சுட்டி போல வீழ்ந்து கிடப்பதை காண கண் ஆயிரம் வேண்டாமோ?? மகிழஞ்சேரி நடராஜர் சிலை முன்னர் இங்குள்ள பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டிருந்தது, இப்போ அது இங்கிருக்கா அல்லது திருவாரூர் காப்பகத்தில் இருக்கான்னு தெரியலை. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
19 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மகிழஞ்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி