பாபநாசம் பாபநாசநாதர் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி
பாபநாசம் பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம், வி.கே.புரம் அஞ்சல் அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம் – 627425
இறைவன்
இறைவன்: பாபநாசநாதர் இறைவி: உலகம்மை
அறிமுகம்
பாபநாசநாதர் கோயில் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். அப்பர், சம்பந்தர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள பாண்டிய நாட்டு தலமாகும். திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் இறைவன் பாபநாசநாதர், இறைவி உலகம்மை ஆவர். கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும் நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக் கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன. கோயிலின் வரலாறு சரியானபடி கணிக்க முடியவில்லையென்றாலும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட சந்திரகுல பாண்டியன் என்ற பாண்டிய அரசனால் இக்கோயிலின் நடுக் கோயிலும் விமானமும் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மதுரை நாயக்க வம்சத்தைச் சேர்ந்த, வீரப்ப நாயக்கரால் (கிபி1609-23), யாகசாலை, கொடிமரம், நடராசர் மண்டபம் கட்டப்பட்டன. தற்காலத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறையால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
புராண முக்கியத்துவம்
இந்து சமயப் புராண வரலாற்றின்படி, இறைவன் சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் நடந்த திருமணத்தை அகத்தியர் காண முடியாமல் போனது. அகத்தியரின் இறைவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பி இறைவனை வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அகத்தியருக்கும் லோபமுத்திரைக்கும் இத்தலத்தில் இறைவன் தன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார். இக்கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என அழைக்கப்படுகிறது. மற்றொரு மரபு வரலாற்றில், உரோசம முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டு அம்மலர்கள் கரைசேர்ந்த இவ்விடங்களில் சிவாலயங்கள் அமைந்து சிவனை வழிபட்டதாகவும், அவற்றில் முதலாவது மலர் கரைசேர்ந்த பாபநாசத்தில் அமைத்த கோயில் பாபநாசநாதர் கோயிலெனக் கூறப்பட்டுள்ளது. இக்கோயில் சிவவடிவான இலிங்கமானது நவகோள்களில் ஒன்றான சூரிய தேவனின் அம்சமாக கருதப்படுகிறது. கைலாயநாதரை முதன்மைக் கடவுளாகக் கொண்டு நவகோள்களுக்குரியவையாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோயில்களின் வரிசையில் முதலாவதான இக்கோயில் சூரியனுக்குரியதாகும். கோயிலமைப்பு: கோயிலுள்ள அனைத்துக் கருவறைகளையும் உள்ளடக்கியவாறு கருங்கல்லலான சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் கோபுரம் ஏழடுக்குகள் கொண்டதாகும். கோயிலின் முதன்மைக் கடவுளாக பாபநாசநாதர் இலிங்க வடிவிலுள்ளார். இறைவி உலகம்மையின் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் வெளிச்சுவற்றில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவகோள்கள் ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிமரத்தை அடுத்துள்ள சிறுகோயிலில் யாளிகளைமைந்த தூண்களைக் கொண்ட மண்டபத்தில் நடராசர் உள்ளார். இங்கு ஆனந்த தாண்டவ கோலத்தில் காணப்படும் நடராசர் புனுகு சபாபதி என அழைக்கப்படுகிறார்.[3] இக்கோயில் குளம் பாபநாச தீர்த்தம் எனப்படுகிறது. மேலும் அகத்திய தீர்த்தமும் கல்யாணி தீர்த்தமும் இக்கோயிலைச் சேர்ந்தவையாகும்
நம்பிக்கைகள்
கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது. உலகம்மைக்கு அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பதாக நம்புகின்றனர். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
சிறப்பு அம்சங்கள்
பெயர்க்காரணம்: அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை “பாபநாசநாதர்’ என்கின்றனர். இத்தலத்திற்கு “இந்திரகீழ க்ஷேத்திரம்’ என்ற பெயரும் இருக்கிறது. சூரியதலம்: அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசுவீம்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை “நவ கைலாய தலங்கள்’ எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. முக்கிளா லிங்கம்: இத்தலத்து லிங்கத்திற்கு ” முக்கிளா லிங்கம்’ என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்கிறார்கள். சிறப்பம்சம்: பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்பாள் உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இம்மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பதாக நம்புகின்றனர்.
திருவிழாக்கள்
சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், சித்திரைப் பிறப்பன்று அகத்தியருக்கு திருமணக்காட்சி விழா, தைப்பூசம்.
காலம்
16 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அம்பாசமுத்திரம்
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி