Friday Dec 27, 2024

திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் திருக்கோயில், மதுரை

முகவரி

அருள்மிகு ஏடகநாதேஸ்வரர் திருக்கோவில் திருவேடகம் அஞ்சல் வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம் PIN – 625234

இறைவன்

இறைவன்: ஏடகநாதர் இறைவி: இளவர்குழளி

அறிமுகம்

திருவேடகம் ஏகடநாதேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சம்பந்தர் ஆற்றிலிட்ட தலம் எதிரேறிக் கரையடைந்தது என்பது தொன்நம்பிக்கை. இத்தலத்தின் மூலவர் ஏடகநாதேஸ்வரர், தாயார் ஏலவார்குழலி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தலத்தின் தீர்த்தமாக பிரம தீர்த்தக்குளம் மற்றும் வைகை ஆறு ஆகியவை உள்ளன.

புராண முக்கியத்துவம்

பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீயிட்டனர். ஒரு தேசத்தில் அராஜகம் நடக்கிறது என்றால், அதன் பலனை அரசனே அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சம்பந்தர், “அந்தத் தீ அரசனையே சாரட்டும்” என்று சொல்லி பாடினார். உடனே, கூன்பாண்டியனை தீயின் வெப்பம் வெப்புநோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான். அவன் சார்ந்திருந்த சமணமதத் துறவிகளால் அதைச் சரி செய்ய முடியவில்லை. தன் வெப்பு நோயைத் தீர்க்க அவன் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தான். கருணை மனம் கொண்ட ஞானசம்பந்தர் “மந்திரமாவது நீறு’ என்ற பதிகம் பாடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளி சாம்பலை அவனுக்கு பூசியதும், நோய் நீங்கியது. இதையடுத்து மன்னனின் மனம் சைவத்தை நோக்கிச் சென்றது. இதைத் தடுக்க நினைத்த சமணர்கள், சம்பந்தர் செய்தது சித்துவேலை என்றும், தாங்கள் அறிவிக்கும் போட்டியில் சம்பந்தர் வெற்றி பெற்றால், மதுரையை விட்டே போய்விடுவதாகவும் அறிவித்தனர். அதாவது, “அத்திநாத்தி’ என்று எழுதிய ஏட்டினை சமணர்களும்,” வாழ்க அந்தணர்’ என்று எழுதிய பதிக ஏட்டினை ஞானசம்பந்தரும் வைகையாற்றில் விட வேண்டும். எந்த ஏடு வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்படாமல் கரை ஒதுங்குகிறதோ அவரே வென்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. போட்டி துவங்கியது. சமணர் ஏடு ஆற்றோடு சென்றுவிட்டது. சம்பந்தர் “வன்னியும் மத்தமும்’ என்ற பதிகத்தை பாடினார். அப்போது ஏடு கரை சேர்ந்தது. அவ்வாறு ஏடு கரை சேர்ந்த இடமே “திரு ஏடு அகம்’ எனப்பட்டு, “திருவேடகம்’ என மருவியது. இத்தலத்தில் அமைந்த கோயிலில் சுவாமி ஏடகநாதர், அம்பாள் ஏலவார் குழலியுடன் அருள் செய்கிறார்.

நம்பிக்கைகள்

திருமணஞ்சேரியில் திருமணத்தடை உள்ள ஆண், பெண்கள் பரிகார பூஜை செய்வது போல, இங்கும் பரிகார பூஜை செய்யப் படுகிறது. ஏலவார்குழலிக்கு மாலை அணிவித்து, அதை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். 48 தினங்கள் தொடர்ந்து பூஜித்து வர, திருமணத்தடை நீங்கப்பெற்று விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருமணத்திற்குப் பின் தம்பதி சமேதராக இங்கு வந்து சுவாமி, அம்பாளை வழிபட வேண்டும்

சிறப்பு அம்சங்கள்

இரண்டு தீர்த்தங்கள் பிரம்மன் உண்டாக்கிய பிரம்மதீர்த்தம் இங்குள்ளது. தற்போது இது காய்ந்து கிடக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு சித்தபிரமை நீங்கியதாம். இப்போதும் இதை தூரெடுத்து, படித்துறைகளை சீர்செய்தால், மிகப்பெரிய தீர்த்தம் ஒன்று காப்பாற்றப்பட்ட பெருமை கிடைக்கும். பக்தர்கள் இதற்குரியமுயற்சியை எடுக்க வேண்டும். இந்த பிரம்மதீர்த்தத்தில் தைமாதத்தில் மகத்தன்று தெப்பத்திருவிழா நடந்தது. தற்போது தண்ணீர் இல்லை என்பதால், தெப்பத்திற்குள் சுவாமியை வலம் வரச்செய்ய மட்டும் செய்கிறார்கள். இதுதவிர கோயில் முன்பு ஓடும் வைகைநதியும் மற்றொரு தீர்த்தமாக உள்ளது. இவ்வூரில் வைகைநதி தெற்கிலிருந்து வடக்காக ஓடுகிறது. காசியிலுள்ள கங்கை இவ்வாறு தான் ஓடும். ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. இறந்தவர்களின் ஆன்மா மோட்சகதி அடைய வேண்டி வகையில் அஸ்தி கரைக்கிறார்கள். மேலும், பிறவியை முடித்த உயிர்கள் நற்கதி அடைவதற்காக மோட்சதீபம் ஏற்றும் வழக்கமும் இந்தக் கோயிலில் உள்ளது. எல்லாமே ஒரு நாள் இங்கு 12 மாதமும் திருவிழா உண்டு. புரட்டாசி நவராத்திரி தவிர எல்லா விழாக்களுமே ஒருநாள் மட்டுமே நடக்கும் என்பதுவிசேஷம். கொடிமரம் இருந்தும், பிரம்மோற்ஸவம் நடைபெறுவதில்லை. சித்திரை முதல்நாளில் மட்டும் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது. திருமண பிரார்த்தனை துவாரபாலகர்களுக்கு புடவை: சிவன் கோயில்களில், சுவாமி சன்னதியில் இரண்டு துவார பாலகர்கள் பாதுகாப்பாக நிற்பர். அம்மன் சன்னதியில் துவார பாலகியர் இருப்பர். ஆனால், இங்குள்ள ஏலவார்குழலியம்மன் சன்னதியில் இரண்டு துவாரபாலகர்கள் காவலுக்கு நிற்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாக உள்ளது. அம்பாள் மீது கொண்ட அன்பின் காரணமாக, சில சமயங்களில் அர்ச்சகர்கள், இந்த துவாரபாலகர்களுக்கு புடவையை உடுத்தி, துவாரபாலகிகளாக பாவித்துக் கொள்கிறார்கள். விநாயகர்கள் இங்குள்ள ஒரு தூணில் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்த நிலையிலுள்ள விநாயகரின் சிற்பம் வித்தியாசமாக இருக்கிறது. இவரை “செவிசாய்த்த விநாயகர்’ என்கின்றனர். தன்னிடம் வரும் அன்பர்களின் வேண்டுதல்களையும், மனக்குறைகளையும் கேட்கும் விதத்தில் தன் காதினை நமக்கு காட்டி அமர்ந்திருப்பதால் இந்தப்பெயர் ஏற்பட்டது. சம்பந்தர் வைகை ஆற்றில் விட்ட ஏட்டினை திருவேடகத்தில் தடுத்து நிறுத்தி கரை சேர்க்க காரணமாக அமைந்தவர் விநாயகர். ஆற்றுநீரை எதிர்த்து வந்த ஏட்டின் நான்கு மூலைகளிலும் பாதுகாப்பாக நின்று, நான்கு மீன்களாக மாறி அதை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் ஏட்டை தன் துதிக்கையில் தாங்கி, படித்துறையில் அமர்ந்தார். இவரை “வாதில் வென்ற விநாயகர்’ என்கின்றனர். கோயிலுக்கு வெளியே தனிக்கோயிலில் தற்போது அருள் செய்கிறார். திருமண நாள் சரியில்லையா? பத்ரிகா பரமேஸ்வரரை வணங்குங்க!: உங்களுக்கு திருமணம் என வைத்துக் கொள்ளுங்கள். ஏதோ சில காரணங்களால், நல்ல நாள் அல்லாத ஒரு தினத்தில் தாலி கட்டிவிட்டீர்கள். இத்தகைய தம்பதிகள் ஏடகநாதரை வணங்கி தோஷம் நீங்கப் பெறலாம். இவருக்கு “பத்ரிகா பரமேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. சில சமயங்களில் அவசர அவசரமாக திருமணம் நடத்த வேண்டியிருக்கும், நாள் சரியாக அமையாது. இதுபோன்ற இக்கட்டான சமயங்களில் நம் மனம் கடுமையாக சஞ்சலப்படும். அவசரப்பட்டு, திருமணம் முடித்தால் என்னாகுமோ என்ற பயமும் இருக்கும். இப்படி சஞ்சலப்பட வேண்டிய அவசியமே இனி இல்லை. ஒரு திருமணப் பத்திரிகையை எடுத்துச் சென்று, பத்ரிகா பரமேஸ்வரரான ஏடகநாதர் முன்பு பாக்கு வெற்றிலை வைத்து பூஜை செய்யுங்கள். அவரைத் தங்கள் வீட்டுத் திருமணத்துக்கு வரவேண்டுமென மானசீகமாக வேண்டிக் கொள்ளுங்கள். பின்பு ஜாம் ஜாமெனத் திருமணத்தை நடத்துங்கள். எந்தப் பிரச்னையும் வராது. திருமணம் மட்டுமின்றி, பிற சுபநிகழ்ச்சிகளையும் இவ்வாறே பத்திரிகை வைத்து இஷ்டப்பட்ட நாளில் நடத்திக் கொள்ளலாம். வயிற்றுவலி தீர நீராகார நைவேத்யம் சட்டைநாத சித்தர் சமாதியான இடம் பற்றி சர்ச்சை உண்டு. இவர் ஏழு இடங்களில் சமாதியானதாகச் சொல்கிறார்கள். இவர் திருவேடகத்திற்கு வந்த போது, செல்லும் வழியெல்லாம் லிங்கங்கள் பூமிக்குள் பதிந்திருப்பதைப் பார்த்து கால் வைக்கவே அஞ்சினார். அவரை சிறுவர்கள் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கோயிலுக்குள் விடுவார்களாம். அவர்களுக்கு ஆற்று மணலை பண்டமாக மாற்றி தந்தார் சட்டை நாதர். சட்டைநாதரும் அவருடன் தங்கியிருந்த சாதுக்களும், நீராகாரத்தில் திருநீறைப் போட்டு மக்களின் வயிற்று நோயினை போக்கினர். இப்போதும், நீராகாரம் கொண்டு வந்து சித்தர் அதிஷ்டானத்தின் மேலுள்ள லிங்கத்தின் முன்பு வைத்து, திருநீறிட்டு குடித்தால், வயிற்றுவலி தீருமென்று பக்தர்கள் நம்புகின்றனர். ஆடி அமாவாசையன்று சித்தருக்கு குருபூஜை நடக்கிறது. ஏடகநாதர் லிங்க வடிவில் சற்று சாய்ந்த நிலையில் தோற்றமளிக்கிறார். அம்பாளின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் உண்டு என்பதால் ஏலவார்குழலி என அழைக்கப்படுகிறாள். இங்குள்ள சப்தமாதர்களில் வாராஹி அம்மனுக்கு பூமிக்கு அடியில் விளையும் கிழங்குவகைகள், எருமைத்தயிர்சாதம், எள்ளுருண்டை ஆகியவற்றை வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் படைக்கின்றனர். இங்கு வடக்கு நோக்கி ஒரு துர்க்கையும், தெற்கு நோக்கி ஒரு துர்க்கையும் சன்னதி கொண்டுள்ளனர். இருதுர்க்கைகள் இருப்பதும் மாறுபட்ட ஒரு அமைப்பாகும். இங்கு சுவாமிக்கு தனியாகவும், அம்பாளுக்கு தனியாகவும் ராஜகோபுரங்களுடன் தனித்தனி வாசல்கள் உள்ளன. இத்தலத்திற்கு வந்த சுந்தரர், ஞானசம்பந்தர் பாடி வழிபட்ட தலமாதலால் மிதிக்க அஞ்சி வைகை நதியில் தான் வந்த ஓடத்தில் நின்றபடியே ஏடகநாதரை தரிசித்துவிட்டு திரும்பி விட்டதைக் குறிக்கும் சிற்பம் இங்கு இருக்கிறது. சூரிய சந்திரர் இங்கு இணைந்து அருள்தருகின்றனர்.

திருவிழாக்கள்

சித்திரையில் மாதப்பிறப்பும், வைகாசியில் விசாகமும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு திருமஞ்சனமும், ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு பூப்புனித நீராட்டும், ஆவணி அவிட்டத்தில் (பவுர்ணமி) ஏடு எதிர் ஏறிய உற்ஸவமும், ஐப்பசியில் சூர சம்ஹாரமும், கார்த்திகையில் தீபத்திருவிழாவும், மார்கழியில் ஆருத்ரா தரிசனமும், தை மகத்தில் தெப்பத்திருவிழாவும், மாசியில் மகாசிவராத்திரியும், பங்குனியில் உத்திரமும் நடக்கின்றன. கார்த்திகை மாத சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடக்கிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவேடகம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சோழவந்தான்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top