Monday Jan 27, 2025

திருவகிந்தபுரம் தேவநாத பெருமாள் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், திருவகிந்தபுரம்-607 401, கடலூர் மாவட்டம். போன்: +91 04142 – 287515

இறைவன்

இறைவன்: தேவநாதர் இறைவி: வைகுண்ட நாயகி

அறிமுகம்

திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோயில், கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் இது ஒன்றாகும். இக்கோயிலில் தேவநாத சுவாமி , அயக்கிரீவர் சன்னதிகள் அமைந்துள்ளன. பாண்டிச்சேரியிலிருந்து 25 கி.மீ தூரத்திலும், கடலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ள திருவந்திபுரம் அருகே ஓடும் கெடிலம் ஆறு தெற்குலிருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது. இது ஒரு சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம், ஸ்காந்த புராணம், பிருகன் நாரதீய புராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவ நாதன் என்றும் தெய்வநாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.இறைவி: வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). விமானம்: சந்திர விமானம், சுத்தசத்துவ விமானம்.திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.

புராண முக்கியத்துவம்

ஒரு காலத்தில் அகம்பாவம் பிடித்த தேவர்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள். அவர்கள் ஒளஷதாசலத்துக்கு வந்து வணங்க நாரயணன் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார். அசுரர்கள் பிரம்மனிடம் முறையிட பரமனை துணை கொண்டு யுத்தம் செய்யுங்கள் என்று கூறியனுப்பினார். அசுரர்களுக்கு பக்கபலமாக சிவன் நின்றார். சிவனால் தேவர்கள் தாக்கப்பட்டு அல்லலுறுவதைக் கண்ட நாராயணன் சக்ராயுதத்தை ஏவினார். அசுரர்களை விரட்டிச் சென்று கொன்று குவித்தது.இறுதியில் எல்லோரும் நாராயணனிடம் சரணடைந்தனர்.எல்லாரையும் பகவான் அரவணைத்தார். தாமே மும்மூர்த்தியாகக் காட்சியளிப்பதாகக் கூறிய பகவான் தமது திருமேனியில் பிரமனையும் சிவனையும் காட்டி அனைவரையும் மகிழ்வித்தார்.தேவர்களுக்கு தலைவனாக இருந்தது கொண்டு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. அங்கேயே ஸ்ரீமந் நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் அங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான்.அதுதான் திரு அஹீந்த்ர (ஆதிசேஷ) புரம் என பெயர் பெற்று விளங்கியது.

நம்பிக்கைகள்

தேவநாத பெருமாளை வணங்குவோர் பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு , நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெறுவார்கள். கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்பு, வெல்லம், மிளகு, பால் இவற்றை பிரார்த்தனையாக சேர்ப்பது சர்வரோக நிவாரணம் அளிக்கும். குரு, ராகு, கேது தோசம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோசம் நிவர்த்தி ஆகும்.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்லி தன் வாலால் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோயிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு மிளகு வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும். இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாச்சலம் என்றும் பெயர் பெற்றது. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் கோயிலில் உள்ளது. பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த தலம். இத்தலம் நடு நாட்டு திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்றது. கலியனாலும் நிகமாந்த மகா தேசிகனாலும் பாடப்பெற்றுள்ளது. வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். அநேக நூல்களை எழுதினார். அவர் எழுந்தருளிய இடம் ஸ்ரீ தேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது. வேதாந்த தேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணற்றையும் இந்த ஊரில் காணலாம். தேசிகன் பெருமாளை நாயகா நாயகி பாவத்தில் (பெருமாள் – நாயகன் தேசிகன் – நாயகி) அனுபவித்து வழிபட்டுள்ளார். தன் விக்ரத்தை தானே செய்து கொண்ட தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது. யுகம் கண்ட பெருமாள் என்று போற்றப்படுகின்றார்.

திருவிழாக்கள்

சித்திரை மாதம் – தேவநாதபெருமாள் பிரம்மோற்சவம் -10 நாட்கள் திருவிழா 5 ம் நாள் இரவு கருடசேவை – 9ம் நாள் தேர் தீர்த்தவாரி விடையாற்றி – அன்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவார்கள். வைகாசி விசாகம் – வைகாசி விசாகம் நம்மாழ்வார் சாத்து முறை 10 நாள் (உற்சவம்) பெருமாள் வசந்த உற்சவம் -10 நாள் (பௌர்ணமி சாத்து முறை) நரசிம்ம ஜெயந்தி ஆடி அமாவாசை, ஆடிபூர உற்சவம், ஆவணி பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், புரட்டாசி மகா தேசிகன் பிரம்மோற்சவம், ஐப்பசி தீபாவளிப் பண்டிகை முதலாழ்வார்கள் உற்சவம், திருக்கார்த்திகை உற்சவம், மார்கழி அனுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, போகி, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், தைமாதம் மகரசங்கராந்தி, பங்குனி ஸ்ரீ ராம நவமி உற்சவம் ஆகியவை முக்கியமான விழா நாட்கள் ஆகும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவகிந்தபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பப்புலியூர்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top