Friday Nov 22, 2024

திருப்பாற்றுறை ஸ்ரீ ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை- 620 005. பனையபுரம், திருச்சி மாவட்டம். போன்: +91- 431 – 246 0455.

இறைவன்

இறைவன்: ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்) இறைவி: நித்யகல்யாணி, மேகலாம்பிகை

அறிமுகம்

திருப்பாற்றுறை – திருப்பாலத்துறை ஆதிமூலநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 59வது தலம் ஆகும். சூரியன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

புராண முக்கியத்துவம்

இப்பகுதியை ஆண்ட சோழன், இவ்வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால், தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக்கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான். பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி “பாற்றுறை நாதர்’ என்றும், தலம் “பாற்றுறை’ (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.

நம்பிக்கைகள்

புத்திரப்பேறு கிடைக்கவும், குழந்தைகள் நல்வாழ்க்கை வாழவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சுவாமிக்கு ஆதிமூலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அர்த்தமண்டபத்தில் நான்கு தூண் களுடன் ராஜசபை இருக்கிறது. இந்த சபையில் இருந்து சிவன், மன்னர் போல ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். திருஞானசம்பந்தர் சுவாமியை “மூலநாதேஸ்வரர்’ என்றும், தலத்தை “கறார் கொன்றை’ என்றும் பாடியுள்ளார். இங்கு சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்க்கையில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது லிங்கத்துக்கு பூஜை செய்ய தீர்த்தம் இல்லை. சுற்றிலும் தண்ணீர் கிடைக்காத நிலையில், லிங்கத்தின் தலையில் இருந்து பால் பொங்கி, தானாகவே அபிஷேகமானது. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்திருக்கிறது. நந்தியும், பலிபீடமும் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. தென்திசை எமதர்மராஜாவின் திசை. இவரது உக்கிரத்தைக் குறைக்க தெற்கு நோக்கிய அம்மன்களை வழி படுவதால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில், அம்பாள் நித்யகல்யாணி தெற்கு திசை நோக்கி அருளுகிறாள். குழந்தைகளை இழந்து மீண்டும் குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுபவர்கள் இப்பூஜையின் போது அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபட்டால் தீர்க்காயுள் உள்ள குழந்தை பிறக்கும் என நம்புகிறார்கள். பவுர்ணமிதோறும் இதற்குரிய விசேஷ பூஜை இவளது சன்னதியில் நடக்கிறது. புதுமணத்தம்பதிகளும் நல்ல குழந்தைகள் வேண்டி இதே நாளில் பூஜை செய்கின்றனர். மேலும், அனுக்ஞை விநாயகரும் தெற்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் அருளுவது சிறப்பு. கருவறைக்கு பின்புறம் லிங்கோத்பவரின் இடத்தில் சங்கரநாராயணர் இருக்கிறார். பிரகாரத்தில் சத்யபாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இத்தலவிநாயகரின் திருநாமம் அனுக்கை விநாயகர். கோபுரம்3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

திருவிழாக்கள்

மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்பாற்றுறை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top