திருநீரகம் உலகளந்த பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
முகவரி
அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருநீரகம் காமாட்சி அம்மன் கோயில் தெரு, திருநீரகம், காஞ்சிபுரம்
இறைவன்
இறைவன்: ஜெகதீசப்பெருமாள், இறைவி: நிலமங்கை வல்லி
அறிமுகம்
இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.
புராண முக்கியத்துவம்
“நீரகத்தாய்” என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “திருநீரகம்’ முற்காலத்திலே எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார். பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாக கொண்டவன். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன். எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்த மூன்று தலங்களும் “திருஊரகத்துடன்’ வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.
நம்பிக்கைகள்
பிரார்த்தனை: ஆணவம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருக்காரகம், திருகார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி
காலம்
1000-2000 வருடங்களுக்கு முன்
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருநீரகம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை