திருக்காவளம்பாடி கோபால கிருஷ்ணன் திருக்கோயில், மயிலாடுதுறை
முகவரி
அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், காவளம்பாடி(திருநாங்கூர்)- 609 106 நாகப்பட்டினம் மாவட்டம
இறைவன்
இறைவன்: கோபாலகிருஷ்ணன் இறைவி: ருக்மணி, சத்தியபாமா
அறிமுகம்
திருக்காவளம்பாடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருநகரியிலிருந்து நடைப்பயணமாகவும் வரலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இத்தலமும் ஒன்றாகும். கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனையழித்தான். இந்திரன்,வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு, இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுக்க, சினங் கொண்ட கண்ணன் அவனோடு போரிட்டு அவனது காவளத்தை (பூம்பொழிலை) அழித்தான். 11 எம்பெருமான்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான் இருக்க காவளம் போன்ற ஒரு பொழிலைத் தேடி, இந்தக் காவளம்பாடியில் கோயில் கொண்டான் என தல வரலாறு கூறுகிறது.[1] இறைவிக்குத் தனிக் கோயில் இல்லை. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றது. திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு அன்னதானம் நடத்திய மங்கை மடம் இந்த தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
“காவளம்’ என்றால் பூஞ்சோலை. துவாரகை போல பூஞ்சோலைகள் மிக்க ஒரு இடம் தேடி, அங்கே பாமாவுடன் தங்க விரும்பினார் கிருஷ்ணர். அப்படி அமர்ந்த இடத்தில் ஒன்று தான் காவளம்பாடி. இன்றைக்கும் கூட இந்த இடம் மிகவும் பசுமையாகத்தான் உள்ளது. இத்தலத்தை வட துவாரகைக்கு இணையாக தல புராணம் கூறுகிறது. பாமாவுக்கு பிடித்தமான தேவலோக மலரான பாரிஜாத பூச்செடி கிருஷ்ணனால் பூமியில் நடப்பட்ட இடம் தான் காவளம்பாடி. சிவனுக்கும், சேனைத்தலைவர் விஷ்வக்சேனருக்கும் இந்த கிருஷ்ணன் காட்சி தந்துள்ளார். கோயில் சிறியது தான் என்றாலும், மிக அருமையாக உள்ளது.
நம்பிக்கைகள்
குழந்தை பாக்கியம் பெற இங்குள்ள கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் இப்பகுதியிலுள்ள 11 திருப்பதி பெருமாள்களும் ஒன்றாக கருட சேவைக்கு மணிமாடக்கோவிலில் எழுந்தருள்வார்கள். இவர்களுக்கு மங்களாசாசனம் செய்வதற்காக திருமங்கையாழ்வார் இங்கு எழுந்தருள்வார். அன்றைய தினம் இந்த ஊரைச்சுற்றியுள்ள வயல் வெளிகளில் உள்ள நெற்பயிர்கள் காற்றினால் ஆடும் சத்தத்தை கேட்டதும், அந்த சப்த வடிவில் திருமங்கையாழ்வாரே வந்து விட்டதாக பக்தர்கள் பரவசமடைவார்கள். பதினொரு பெருமாளையும் மங்களாசாசனம் செய்த பிறகு, திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வார். இந்த கண்கொள்ளா காட்சியை காண ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ணஜெயந்தி
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்காவளம்பாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி