Saturday Dec 28, 2024

திருக்காழிச்சீராம விண்ணகரம் திரிவிக்ரமப் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு திரிவிக்ரமப் பெருமாள் திருக்கோயில், சீர்காழி நகரம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609 110

இறைவன்

இறைவன்: திரிவிக்கிரம நாராயணர் இறைவி: லோகநாயகி

அறிமுகம்

திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர்) திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது.உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம். திருமங்கையாழ்வாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையேயான வாதப்போட்டியில் ஆழ்வார் வெற்றி பெற்றதால், திருமங்கையாழ்வாரைப் பாராட்டி தமது வேலை திருஞானசம்பந்தர் அளித்த திருத்தலம். திருவாழி – திருநகரி திருத்தலத்தில் இந்த வேலை வைத்தபடி திருமங்கையாழ்வார் காட்சி தருகிறார்.

புராண முக்கியத்துவம்

மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார். உற்சவர் தாடாளன் வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே காட்சி தருகின்றார். படைக்கும் கடவுளான பிரம்மா பல யுகங்கள் வாழும்படி சாகாவரம் பெற்றிருந்தார். இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகவே, தனது பணியையும் அவர் சரியாக செய்யவில்லை. அவரது கர்வத்தை அடக்க எண்ணம் கொண்டார் மகாவிஷ்ணு. இதனிடையே மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத்தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலத்தைக் காண வேண்டும் என உரோமச முனிவருக்கு ஆசை எழுந்தது. சுவாமியை வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, தன் இடக் காலை தூக்கி திரிவிக்கிரம அவதாரத்தை காட்டியருளினார். பின் அவர் உரோமசரிடம், “என் ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள் பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை பெறுவீர்கள். மேலும், பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெற்று வாழ்வீர். உமது உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால் பிரம்மாவின் ஆயுட்காலத்தில் ஒரு வருடம் முடியும்’ என்று கூறி இத்தலத்தில் திரிவிக்கிரமனாக எழுந்தருளினார். மகாவிஷ்ணு சூட்சுமமாக தன் ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மா தன் கர்வம் அழியப்பெற்றார்.

நம்பிக்கைகள்

பணிகளில் சிறக்க, பதவி உயர்வு பெற, ஆயுள் விருத்தி பெற இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

கருவறையில் இடது காலை தலைக்கு மேலே தூக்கிக்கோண்டு, வலக்கையை தானம் பெற்ற அமைப்பிலும், இடக்கையை மீதி ஒரு அடி எங்கே? எனக்கேட்டு ஒரு விரலை மட்டும் தூக்கியபடி திரிவிக்கிரமர் காட்சி தருகிறார். இவருக்கு மேல் உள்ள விமானம் புஷ்கலா வர்த்த விமானம் எனப்படும். சாளக்கிராம மாலை அணிந்தபடி இருக்கும் இவரது சங்கும், பிரயோக சக்கரமும் சாய்ந்தபடியே இருக்கிறது. வலது பாதத்திற்கு அருகில் உற்சவர் தாடாளன் இருக்கிறார். இவரை “தவிட்டுப்பானை தாடாளன்’ என்றும் சொல்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று ஒருநாள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.”தாள்’ என்றால் “பூமி அல்லது உலகம்’, “ஆளன்’ என்றால் “அளந்தவன்’ என்று பொருள். தன் திருவடியால் மூன்று உலகங்களையும் அளந்தவன் என்பதால் இவருக்கு ஆண்டாள் இவருக்கு “தாடாளன்’ என்ற பெயரை சூட்டினாள். சுவாமியை குறித்து ஆண்டாள் தனது திருப்பாவை, நாச்சியார் திருமொழியிலும் பாடியிருக்கிறாள். அருகில் குழந்தை தொட்டிலில் சந்தான கோபால கிருஷ்ணர் இருக்கிறார். புத்திரப்பேறு இல்லாதவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தாயார் சிறப்பு பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியை தாங்கியபடி இருப்பதைப்போல, இங்கு தாயார் லோகநாயகி மார்பில் திரிவிக்கிரமரைத் தாங்கியபடி காட்சி தருகிறாள். ஒரு கால் ஊன்றி மற்றொரு காலைத் தூக்கி நின்று கொண்டிருப்பதால் சுவாமியின் பாதம் வலித்து விடாமல் இருக்க அவரை இத்தலத்தில் மகாலட்சுமி தாங்குகிறாளாம். எனவே அவள் தன் மார்பில் சுவாமி பதக்கத்தை அணிந்திருக்கிறாள். இந்த தரிசனம் விசேஷமானது. பெண்கள் இவளை வணங்கினால் கணவர் மீது கூடுதல் அன்பு காட்டுவர், பிரிந்திருக்கும் கணவனுடன் மீண்டும் சேர்வர் என்பது நம்பிக்கை. உற்சவ அம்பாள் தாயாரை மறைத்தபடி இருப்பதால், இவளது திருமுகத்தை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். தன்னை தாங்கும் கணவனை தான் தாங்குவதை யாரும் பார்த்து விடாமல் இருக்க இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள்.வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. திருமங்கை வேல் பெற்ற தலம்: தேவாரம் பாடிய நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் இவ்வூரில்தான் பிறந்தார். அவர் இங்கேயே தங்கியிருந்து சிவத்தொண்டு செய்து வந்தார். இக்கோயில் சிலகாலம் வழிபாட்டில் இல்லாதிருந்தபோது, உற்சவர் தாடாளனை ஒரு மூதாட்டி தன் வீட்டில் ஒரு தவிட்டுப்பானையில் மறைத்து வைத்து தினமும் பூஜைகள் செய்து சுவாமியை வணங்கி வந்தாள். ஒருசமயம் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தார். அவருடன் வந்தவர்கள் திருமங்கையைப் போற்றிப் பாடிக்கொண்டு வந்தனர். இதைக்கண்ட சம்பந்தரின் சீடர்கள் அவர்களை அமைதியாகச் செல்லும்படி கூறினர். அவர்களோ மறுத்தனர். இருவருக்குமிடையே வாதம் உண்டானது. இறுதியில் திருமங்கைக்கும், சம்பந்தருக்கும் மறுநாளில் வாத போட்டி வைப்பது என முடிவானது. எனவே, அன்றைய தினம் திருமங்கை சீர்காழியிலேயே தங்கினார். இரவில் திருமங்கையின் கனவில் தோன்றிய பெருமாள், தான் மூதாட்டியின் தவிட்டுப்பானைக்குள் இருப்பதாகவும், தன்னை வணங்கி வாதத்தில் வெல்லும்படி சொன்னார். அதன்படி மூதாட்டியிடம் தாடாளனை திருமங்கை வாங்கிக்கொண்டார்.மறுநாள் போட்டி ஆரம்பமானது. சம்பந்தர் திருமங்கையிடம், ஒரு குறள் சொல்லும்படி கூறினார். திருமங்கை, “குறள்’ எனும் சொல்லையே முதலாவதாக தொடங்கி பெருமாளின் பத்து அவதாரங்களைப் பற்றி ஒன்று, இரண்டு என வரிசையாக பாடினார். திருமங்கையின் பெருமையை உணர்ந்த சம்பந்தர் அவரைப் பாராட்டி தான் வைத்திருந்த வேலை அவருக்கு பரிசாகக் கொடுத்து, காலில் தண்டையையும் அணிவித்தார்.பின் திருமங்கை இக்கோயிலை மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். தாடாளனையும், தாயாரையும் பாடியதோடு சுவாமி எழுந்தருள காரணமான உரோமசரையும் சேர்த்து தன் பெயர்கள் அனைத்தையும் குறிப்பிட்டு மங்களாசாசனம் செய்தார்.

திருவிழாக்கள்

வைகாசியில் நடைபெறும் பிரம்மோற்சவம் பிரசித்தமானது.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top