செப்பறை நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :
அருள்மிகு நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில்,
செப்பறை,
திருநெல்வேலி மாவட்டம்- 627 359.
போன்: +91-4622-339 910, 88707 20217, 94866 47493
இறைவன்:
நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்)
அறிமுகம்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகருக்கு அருகில் உள்ள ராஜவல்லிபுரத்தில் அமைந்துள்ள செப்பறை நடராஜர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது அழகிய கூத்தர் என்றும் சிவகாமி அம்பாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. உள்ளூர்வாசிகள் செப்பறை என்றும் குறிப்பிடுகின்றனர். இது பஞ்ச நடராஜர் தலங்களில் ஒன்று. சிதம்பரம் நடராஜ மூர்த்தியை உருவாக்கிய ஸ்தபதி ஐந்து மூர்த்திகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது. சிதம்பரத்தைத் தவிர மற்ற நான்கு மூர்த்தங்களும் திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பின்வரும் கோயில்களில் உள்ளன: காரி சூழ்ந்த மங்கலம், கட்டாரிமங்கலம், மேல கருவேலங்குளம் மற்றும் செப்பறை.
இக்கோயில் 1000-2000 ஆண்டுகள் பழமையானது. திருநெல்வேலியில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆருத்ரா தரிசனத்திற்கு மிகவும் பிரபலமானது. சிதம்பரத்திற்கு சமமான வரலாறு இதற்கு உண்டு. அதனால் இத்தலம் “தென் சிதம்பரம்” அல்லது “தென் தில்லை” என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரம் கோவிலுக்கு முதன் முதலில் செப்பு சிலை செப்பறை கோவிலில் தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது நம்ப முடியாத ஒன்று. கோவிலில் உள்ள சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது.
புராண முக்கியத்துவம் :
தாமிரபரணியின் வடகரையில் ராஜவல்லிபுரம் கிராமம் உள்ளது. இவ்வூரிலேயே மன்னர் ராமபாண்டியனின் அரண்மனை இருந்தது. இவர் தினமும் திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே சாப்பிடுவார். ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதால் அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் பட்டினியாக இருந்தார். அன்று இரவில் மன்னர் கனவில் நெல்லையப்பர் தோன்றி, “”இனிமேல் உன் மாளிகையின் அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன். சிதம்பரத்திலிருந்து ஒருவன் எனது நடனமாடும் வடிவுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில் கட்டுமிடத்தின் அருகிலுள்ள குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு,’ என கூறி மறைந்தார்.
அதன்படியே, சிற்பி ஒருவர் நடராஜரின் விக்ரகம் ஒன்றை சுமந்து வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. சிலையை அவர் செப்பறை என்ற இடத்தில் வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையை காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார். ராமபாண்டியன் அதிர்ச்சியடைந்து சிலையை தேடிச்சென்றார். வேணுவனத்தில் ஓரிடத்தில் சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது, நடராஜரின் சிலை இருந்ததைக் கண்டார். அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று மறைந்து கொண்டிருந்தன. ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் தனி சன்னதி அமைத்தார். அவர் கட்டிய கோயில் வெள்ளத்தால் அழிந்துவிட்டது. அதன்பிறகு ஆரை அழகப்ப முதலியார் என்பவர் இப்போதுள்ள கோயிலைக் கட்டினார்.
நம்பிக்கைகள்:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
சிறப்பு அம்சங்கள்:
வீரபாண்டியன் என்ற மன்னன் ராமபாண்டியனின் எல்கைக்குட்பட்ட சிற்றரசன். செப்பறையில் இருந்த நடராஜர் சிலையை அவன் கண்டான்.அதேபோல தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என ஸ்தபதியிடம் கூறினான். சிலை செய்யும் பணி துவங்கியது. இதில் ஒன்றை கட்டாரிமங்கலத்தில் உள்ள கோயிலிலும், மற்றொன்றை கரிசூழ்ந்தமங்கலம் கோயிலிலும் வைக்க எண்ணினான். சிலை செய்யும் பணி முடிந்தது. சிலைகளின் அழகைக் கண்டு மன்னன் ஆனந்தம் கொண்டான்.இதே போல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஸ்தபதியை கொன்றுவிடும்படி காவலாளிகளுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் ஸ்பதியின் மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான். ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளை துண்டித்தான். இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் கட்டாரிமங்கலம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதன் பிறகு ஸ்தபதிக்கு மரக்கை பொருத்தப்பட்டது. கலையார்வம் மிக்க ஸ்தபதி, மரக்கைகளின் உதவியுடன், முன்னை விட அழகாக மற்றொரு சிலை செய்தார். அந்தச்சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினான். அவ்வாறு கிள்ளிய வடுவுடன் கூடிய சிலை கருவேலங்குளம் கோயிலில் வைக்கப்பட்டது.
முதல் நடராஜர்: சிதம்பரம் நடராஜருக்கு சோழநாட்டு சிற்பியான நமச்சிவாயமுத்து ஸ்தபதி சிலை செய்தார். அவ்வூரை ஆண்ட சிங்கவர்மன் என்ற மன்னன் அச்சிலையைக் கண்டு வியப்படைந்தான். அது தாமிர சிலையாக இருந்தது. இதே சிலையை தங்கத்தில் வடித்தால் மிகவும் சிறப்பாக இருக்குமே என எண்ணியவன், முதலில் செய்த சிலையை பிரதிஷ்டை செய்யாமல் தங்கத்தால் சிலை செய்ய உத்தரவிட்டான். ஆனால், அந்த சிலையும் தாமிரமாகவே மாறிவிட்டது.சிவன் அவன் கனவில் தோன்றி, “”நான் உன் கண்ணுக்கு மட்டுமே தங்கமாக தெரிவேன். மற்றவர்கள் கண்ணுக்கு தாமிர மாகவே தெரிவேன். இதுவே என் விருப்பம்!’ எனக்கூறி மறைந்தார். எனவே, இரண்டாவது செய்த சிலையையே சிங்கவர்மன் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்தான். முதலில் செய்த சிலையை இறைவனின் கட்டளைப்படி சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிட்டான். அவனது கனவில் தோன்றிய சிவன், “”இந்தச் சிலையை சுமந்துகொண்டு தெற்கு நோக்கிச் செல்,’ எனக்கூறி மறைந்தார். அந்த சிலையே இந்தக் கோயிலில் உள்ளது. இதன்படி முதன்முதலாக செய்யப்பட்ட நடராஜர் சிலை செப்பறைக்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு திருவாதிரைத் திருவிழா மிக விசேஷமாக நடக்கும்.
திருவிழாக்கள்:
ஆனி தேரோட்டம், மார்கழி திருவாதிரை மற்றும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மகா சிவராத்திரி ஆகியவை கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஆருத்ரா தரிசனம் தமிழ் மாதமான மார்கழியில் (டிசம்பர் – ஜனவரி) திருவாதிரை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுகிறது. இது அடிப்படையில் சைவத் திருவிழாவாகும், மேலும் இது நடராஜ வடிவத்தால் குறிக்கப்படும் சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்தைக் கொண்டாடுகிறது. ஆருத்ரா என்பது தங்க சிவப்புச் சுடரைக் குறிக்கிறது மற்றும் சிவன் இந்த சிவப்பு-சுடர் ஒளியின் வடிவத்தில் காட்சியளிக்கிறார்.












காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செப்பறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை, திருவனந்தபுரம்