செங்கம் வில்வாரணி சுப்பிரமணியர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்,
செங்கம், வில்வாரணி,
திருவண்ணாமலை மாவட்டம் – 606906.
இறைவன்:
சுப்பிரமணியர்
இறைவி:
வள்ளி, தேவசேனை
அறிமுகம்:
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அருகே உள்ள வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோயில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் நக்ஷத்ரா கோவில் என்று குறிப்பிடப்படுகிறது (இங்கு 27 நட்சத்திரங்களும் கிருத்திகை கன்னிகளும் கிருத்திகையில் கூடி வழிபடுகின்றனர்). வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், குறிப்பாக ராகு மற்றும் கேதுவிடம் இருந்து பரிகாரம் தேடும் பக்தர்களால் கூட்டம் அலைமோதுகிறது. போளூர் – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் வில்வாரணி முருகன் கோவில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்த கோயில் குருக்கள் ஒருவர் பல கோயில்களுக்கு பூஜை செய்து வந்தார். வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு குதிரையில் சென்று வருவார். அவர், தன் சக குருக்கள் ஒருவருடன் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையன்று திருத்தணி சென்று முருகனை வழிபடுவார். ஒரு ஆண்டில் சில காரணங்களால் அங்கு செல்ல இருவருக்கும் தடங்கல் ஏற்பட்டது. இதனால் மனம் நொந்த அவர்கள் அன்றிரவு உறங்கும் போது, இருவர் கனவிலும் தோன்றிய முருகன், “”நான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளியுள்ளேன். எனக்கு அந்த இடத்தில் கோயில் கட்டி கிருத்திகை நட்சத்திரங்களில் வழிபாடு செய்யுங்கள்,” என கூறினார்.
மறுநாள் முருகன் குறிப்பிட்ட மலையில் சுயம்புவைத் தேடினர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது. குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால், நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது.
நம்பிக்கைகள்:
ஜாதகரீதியாக ராகு, கேது தோஷமுள்ளவர்கள் இந்த முருகனை வழிபட்டு துன்பம் நீங்கி இன்ப வாழ்வு பெறுவர் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
நெருப்பு சிவன். அதிலுள்ள வெப்பம் உமாதேவி, நெருப்பின் நிறம் கணபதி, அதன் ஒளி முருகன். இவையாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்றும், லிங்க வடிவில் முருகன் தோன்றியதால், சிவனே முருகன், முருகனே சிவன் என்றும் இந்த கோயில் மூலம் உணர முடிகிறது. ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும் இங்கு வந்து முருகனை வழிபடுவதாகவும் நம்பிக்கை உள்ளது.
திருவிழாக்கள்:
ஆடி கிருத்திகை மற்றும் இதர கிருத்திகை நாட்கள் இங்கு விழாக்கோலம் தான். பங்குனி உத்திரம் பத்து நாள் நடக்கிறது. ஐந்தாம் நாளில் முருகன் மலையில் இருந்து கீழிறங்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் நாளில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக 16 லட்சம் ரூபாய் செலவில் தேர் உருவாக்கப்பட்டுள்ளது.












காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செங்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவண்ணாமலை
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி