சாக்கோட்டை வீரசேகரர் திருக்கோயில், சிவகங்கை
முகவரி :
அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில்,
சாக்கோட்டை-630 108,
சிவகங்கை மாவட்டம்.
போன்: +91- 4565 – 272 117, 99943 84649
இறைவன்:
வீரசேகரர் (திருமுடித்தழும்பர்)
இறைவி:
உமையாம்பிகை (உமையவள்)
அறிமுகம்:
காரைக்குடி அருகே சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையில் அமைந்துள்ள வீரசேகரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பழங்காலத்தில் வீரவனம் என்று அழைக்கப்பட்டது. மூலவர் வீரசேகரர் (திருமுடித்தழும்பர்) என்று அழைக்கப்படுகிறார். அன்னை உமையாம்பிகை (உமையவள்) என்று அழைக்கப்படுகிறார். கோயிலில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். புழுங்கல் அரிசி இறைவனுக்கு நிவேதனமாக வழங்கப்படுகிறது. ஆனி மாதம் பிரம்மோத்ஸவம் 10 நாட்கள் நடைபெறும். கந்த சோழ, பாண்டிய மன்னர்கள் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். உ.வே.சுவாமிநாத ஐயர் இந்த இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.
புராண முக்கியத்துவம் :
முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்த வேடுவன் ஒருவன், ஒருமரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்கு கொடியை கடப்பாரை கொண்டு தோண்டினான். அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. ஆச்சர்யமடைந்த அவன், நிலத்திற்கு கீழே பார்த்தபோது, லிங்கம் ஒன்று இருந்தது. சிவன் நிகழ்த்திய இந்த அதிசயத்தை வேடுவன் மன்னரிடம் கூறினான். இதைக்கேட்டதுமே, குஷ்டநோயால் பாதிக்கப்பட்டிருந்த மன்னர் குணமானார். சிவனின் திருவிளையாடலை அறிந்த மன்னர் இவ்விடத்தில் கோயில் கட்டினார்.
நம்பிக்கைகள்:
புத்திர தோஷம் உள்ளவர்கள், கண் நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
தலவிருட்ச சிறப்பு: ஒரு சமயம், இங்கு வந்த பாண்டிய மன்னன் ஒருவர், சிவன் நிகழ்த்திய அதிசயம் குறித்து நம்பாமல் சந்தேகம் கொண்டான். அவர் சுவாமியை முதல் முறை வலம் வந்தபோது, அங்கிருந்த வீரைமரம், பலா மரமாக மாறியது. மன்னன், திகைப்புற்று சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டான். அம்மரத்திலிருக்கும் கனியை உண்டால், அவனது நோய்கள் தீரும் என்று கூறி சுவாமி அருளினார். மன்னர், அப்பழத்தை உண்ட பிறகு, அம்மரம் மீண்டும் வீரைமரமாகவே மாறியது. சிவனை வணங்கிவிட்டு, இம்மரத்தை வணங்கினால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
புழுங்கல் அரிசி நைவேத்தியம்: மதுரையில் பாண்டிய மன்னரிடம் பணியாற்றிய மாணிக்கவாசகர் குதிரைகள் வாங்க சென்றபோது, இவ்வழியே சென்றார். அப்போது, சிவனுக்கு தன்னிடமிருந்த புழுங்கல் அரிசியை சமைத்து நைவேத்யமாக படைத்தார். அன்று முதல், இங்கு புழுங்கல் அரிசி சாதமே நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
ஆசைக்கு தண்டனை: ஒருசமயம், குழந்தை இல்லாத பக்தர் ஒருவர் தன்னிடமிருந்த பசுக்களில் சிலவற்றை அந்தணர் ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டு, மீதியை மற்றொருவருக்கு விற்று விட்டார். அந்தணரின் வீட்டில் நின்ற பசுக்கள், விற்கப்பட்ட பசுக்களை தேடிச் சென்று விட்டன. பசுக்களை வாங்கியவர், அவற்றையும் தொழுவத்தில் கட்டி விட்டார். இதையறிந்த அந்தணர் அவரிடம் சென்று, தனது பசுக்களை தரும்படி கேட்டார். பசுக்களை வாங்கியவர் அதிக ஆசையால் தராமல் வாக்குவாதம் செய்தார். இவ்வழக்கு மன்னனிடம் சென்றது.
மன்னன், இத்தலத்து சிவனை சாட்சியாக வைத்து, உண்மை கூறி, தீர்த்தத்தில் மூழ்கி எழும்படி கூறினார். அதன்படி, இருவரும் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்திட அந்தணரை ஏமாற்றியவன் தனது கண்களை இழந்தான். பின், அவன் பசுக்களை திருப்பி ஒப்படைத்து சிவனிடம் மன்னிப்பு பெற்றான். இவ்வாறு, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு அவர்களை ஏமாற்றுபவர்களை இத்தலத்து இறைவன் உடனடியாக தண்டிப்பவராக இருக்கிறார்.
திருவிழாக்கள்:
ஆனி, ஆடியில் பத்து நாள் விழா, சிவராத்திரி, கந்தசஷ்டி
காலம்
15-16 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாக்கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை