சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
முகவரி
அருள்மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி,அய்யம்பேட்டை அஞ்சல் 614 201. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91-4374-311 018
இறைவன்
இறைவன்: சக்ரவாகேஸ்வரர் இறைவி: வேதநாயகி
அறிமுகம்
சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அய்யம்பேட்டையில் சக்கராப்பள்ளி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 17ஆவது சிவத்தலமாகும். இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் சக்கரவாகேசுவரர் என்றும் திருச்சக்கராப்பள்ளி உடைய மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி தேவநாயகி ஆவார். நுழைந்தவுடன் மரத்தாலான கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. கருறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.
புராண முக்கியத்துவம்
திருமால் அம்மனை வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். சக்கரவாளப் பறவை வழிபட்ட தலம் என்றும் கூறுவர். “” வண்சசக்கிரம் மால் உறைப்பால் அடிபோற்றுக் கொடுத்தபள்ளி’ என்பது இத் தலபுராண வரலாற்றை உறுதிப்படுத்தும். மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்குகிறது. இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரமில்லை. உள்ளே நுழைந்ததும் முதலில் வலப்பால் அம்பாள் சன்னதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்றநிலை. கருவறை கீழ்புறம் கருங்கல்லாலும் மேற்புரம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. விமானத்தில் அதிக சிற்பங்களில்லை. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிரகார வலம் வரும் போது விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன், அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கல்வெட்டுக்களில், இவ்வூர், குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12 ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றன. நாற்பது வயதுக்கு மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுக்குள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்கவேண்டுமென்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன.
நம்பிக்கைகள்
திருமணத்தடை நீங்கவும், செல்வ வளம் செழிக்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
இந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் பூசித்த தலம். திருமால் இத்தல இறைவனை வழிபட்டு சக்கராயுதம் பெற்றதனால் இத்தல இறைவனுக்கு சக்கரவாகேஸ்வரர் என்றும், ஊர் சக்கரப்பள்ளி என்றும் பெயர். சப்த தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். பிராமி, மகேஸ்சுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்கள் வழிபட்ட தலம். சயந்தனும் தேவர்களும் வழிபட்ட தலம். கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. அம்பாள் சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் தருவதும், யம பயம் நீக்க வல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது. கல்வெட்டுக்களில் இவ்வூர், “குலோத்துங்க சோழவள நாடு, குலோத்துங்க விளநாடு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்” என்று குறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12-ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச் சபைக்குரிய சில விதிகளாக நாற்பது வயதுக்கும் மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஞானசம்பந்தர் காலத்தில் வணிகப்பெருவழியில் அமைந்த பெரும் வணிக நகரம் செம்பியன்மாதேவி காலத்தில் கற்றளியாக மாற்றியமைக்கப்பட்டது. செம்பியன்மாதேவி இவ்வூர் இறைவனை மலர்கொண்டு வழிபடும் புடைப்புச்சிற்பம் இதனை உறுதிப்படுத்தும். முதலாம் இராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், ராஜாதிராஜன், சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூர் நித்தவிநோத வளநாட்டு கிழார் கூற்றத்து அகழிமங்கலத்து பிரம்மதேயம் திருசக்கராப்பள்ளி என கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கருவறை அர்த்தமண்டபடத் தென்புறச் சுவரின் வெளிப்பக்கம் இரண்டு கோஷ்டங்களுக்கு இடையில் நீண்ட கல்வெட்டுப்பகுதியும், புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. சிற்பங்கள் உள்ள மாடத்தின் ஒரு புறம் மேடையில் லிங்கத்திருமேனி உள்ளது. அதன்மேல் மாலை சூட்டப்பட்டுள்ளது. இரு புறமும் எரியும் விளக்குகள் உள்ளன. எதிரில் செம்பியன்மாதேவியார் இரு கரங்களைக் குவித்து இலிங்கத்தை வணங்கும் நிலையில் உள்ளார்.
திருவிழாக்கள்
பங்குனி உத்திரம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி