கோழிகுத்தி வான்முட்டி பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில்,
கோழிகுத்தி, மயிலாடுதுறை,
நாகப்பட்டினம் மாவட்டம்- 609003.
போன்: +91- 4364223395, 9842423395, 9787213226
இறைவன்:
வான்முட்டி பெருமாள்
இறைவி:
மகாலக்ஷ்மி
அறிமுகம்:
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை நகருக்கு அருகில் உள்ள கோழிக்குத்தி கிராமத்தில் அமைந்துள்ள வான்முட்டிப் பெருமாள் கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வான்முட்டிப் பெருமாள் ஸ்ரீனிவாசப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் 1400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலஸ்தான தெய்வமான வான்முட்டிப் பெருமாள் 18 அடிக்கு மேல் உயரம் மற்றும் ஒரு அத்தி மரத்தில் செதுக்கப்பட்டவர்.
புராண முக்கியத்துவம் :
முன்னொரு காலத்தில் குடகுமலைச்சாரலில் நிர்மலன் என்ற அரசன் வாழ்ந்தான். அவன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டான். ஒருமுறை, அவன் காட்டு வழியாக வந்து கொண்டிருந்த போது, முனிவர் ஒருவர் வீணை மீட்டி மிகவும் இனிமையாக பாடிக்கொண்டிருந்தார். அவரிடம் மன்னன் தன் நோய் பற்றி வருந்தி முறையிட்டான். இதனைக்கேட்ட முனிவர் மன்னனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் செய்து, அதை தினமும் ஜெபிக்கும்படி கூறினார். முனிவர் கூறியபடி மன்னனும் அந்த மந்திரத்தை உருகி ஜெபிக்க தொடங்கினான்.
அப்போது அசரீரி ஒலித்தது. “”நான் பெருமாளின் குரலாய் ஒலிக்கிறேன். உனக்கு ஒரு கடுமையான தோஷம் உள்ளது. இந்த தோஷம் நீங்க காவிரிக்கரை வழியாக உன் யாத்திரையை தொடங்கு. மூவலூரில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் (சிவன்) உனக்கு வழிகாட்டியாக வருவார். வழியில் உள்ள திருத்தலங்களில் எல்லாம் நீராடு. எங்கு உன்மேனி பொன் வண்ணமாக மாறுகிறதோ, அங்கேயே தங்கிவிடு,”என்றது. அதன்படி, மன்னன் காவிரிக்கரை வழியாக தன் பயணத்தை துவக்கினான். ஓரிடத்தில் அவனது மேனி பொன்நிறமாக மாறியது. மகிழ்ச்சியடைந்த மன்னன் பெருமாளுக்கு நன்றி கூறி மனமுருகி வழிபட்டான். அந்த இடத்தில் ஒரு பெரிய அத்திமரம் தோன்றியது. அந்த மரத்தில் நாராயணன், சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் மன்னனுக்கு காட்சி கொடுத்தார்.
மன்னனின் பாவங்கள் இங்கு உடனடியாக நீங்கியதால் இத்தலம் “கோடிஹத்தி’ என அழைக்கப்பட்டது. “கோடிஹத்தி’ என்றால் “சகல பாவமும்நீங்குமிடம்’ என்று பொருள். இதுவே, காலப்போக்கில் மருவி “கோழிகுத்தி’ ஆனது. இதன் பின் மன்னன் பெருமாள் பக்தனாகி தவமிருந்து ரிஷியாகவே மாறி விட்டான். “பிப்பல மகரிஷி’ என மன்னனை மக்கள் அழைத்தனர். பிப்பலர் காவிரிக்கரையில் தவம் புரிய ஆரம்பித்தார். அவர் தவம் செய்த இடத்தில் தற்போது ஒரு மண்டபம் உள்ளது. இதன் அருகில் ஓடும் காவிரி தீர்த்தத்தை “பிப்பல மகரிஷி தீர்த்தம்’ என அழைக்கிறார்கள்.
நம்பிக்கைகள்:
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்யலாம்.
சிறப்பு அம்சங்கள்:
திருப்பதி சீனிவாசப்பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாக தரிசித்த பலன், கோழிகுத்தி வான்முட்டி பெருமாளை தரிசித்தால் கிடைக்கும். 800 ஆண்டுகள் பழமையான வான்முட்டி பெருமாள் கோயில் உள்ளது.வேருடன்கூடிய ஒரு அத்தி மரத்தில் 15 அடி உயரத்திற்கு சீனிவாச பெருமாள் விசுவரூப தரிசனம் தருவது காணக் கிடைத்தற்கரிய ஒரு காட்சி.
மார்பில் மகாலட்சுமி: சீனிவாசப் பெருமாள் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஏந்தி, மார்பில் மகாலட்சுமி யுடன் அருள்பாலிக்கிறார். இவர் மிகப்பிரமாண்டமாக விஸ்வரூபத்தில் அமைந்திருந்ததால் “வான்முட்டி பெருமாள்’ என அழைக்கின்றனர். இவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால், அபிஷேம் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. உற்சவமூர்த்தியாக உள்ள யோக நரசிம்மருக்கே அபிஷேகம்.
சப்தஸ்வர ஆஞ்சநேயர்: வான்முட்டி பெருமாளின் மார்பில் இருக்கும் மகாலட்சுமி, அவரது அருகில் சிலைவடிவிலும் அருள் செய்கிறாள். ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை எழுகின்றது. இதன் காரணமாக இந்த பெயர் ஏற்பட்டது. மேலும் ஆஞ்சநேயரின் வாலில் கட்டப்பட்டுள்ள மணியை தலைமீது தூக்கி வைத்துள்ளார்.
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்து இன்னல்கள் நீங்கியதாக கல்வெட்டு உள்ளது. பிப்பல மகிரிஷி பாடிய ஸ்லோகம் இக்கோயில் வழிபாட்டு நேரங்களில் சொல்லப்படுகிறது. பலருக்கும் பலவிதமான பலன்களை அள்ளித்தந்த பெருமாள் கோயில்.
சரபோஜி மன்னர் கண்ட காட்சி: கோழிகுத்தி வான முட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட சரபோஜி மகாராஜா, இங்குவந்து மனதார வழிபட்டார். பகவானே! எனக்கு யுத்ததோஷம் உள்ளது. அதை நீக்கி அருள்புரிய வேண்டும் என வேண்டிக்கொண்டார். பிப்பிலர்க்கு அருளியதுபோல் (வானளாவிய காட்சி) சரபோஜி மகாராஜாவுக்கும் இந்த அத்திமரத்தில் காட்சி தந்தருளினார். ஆஹா! கனவிலும் நினைவிலும் காணக்கிடைக்காத காட்சியொன்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மன்னர், தன்னைப் போல அனைவரும் பலனடைய வேண்டும் என்று எண்ணினார். சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் கொண்டு சதுர்புஜனாய் தனக்கு பெருமாள் காட்சி தந்த அற்புத திருக்கோலத்தை ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சிலைவடித்து, கோயில் எழுப்பி பூஜை செய்தார். விஸ்வரூப பெருமாள் என்பதால் வானமுட்டி பெருமாள் என்ற திருநாமம் கொண்டார்.
மகேந்திரவர்மன் உள்ளிட்ட பிற மன்னர்களும் திருப்பணி செய்துள்ளார்கள் என்பதற்கு 7-ஆம் நூற்றாண்டு, 10-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் உள்ளன. அந்தக் கல்வெட்டில் பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. இவ்வளவு பழமைவாய்ந்த கோயில் 2004-ஆம் ஆண்டு நிலவரப்படி சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. அதன் பின் சேவார்த்திகள், ஊர்மக்கள், ஆன்மிக அன்பர்கள் ஒத்துழைப்புடன் மூன்று நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டு, வைணவ ஆகம விதிப்படி சுற்றுப்பெருமதில்களுடன் கோயில் அமைத்து, பெருமாளின் உத்தரவுப்படி 11-7-2007 ஆம் வருடம் குடமுழுக்கு விழா கண்டு, அன்று முதல் இன்றுவரை முறைப்படி காலபூஜைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின்கட்டுப்பாட்டில் சிறப்பாக இயங்கி வருகிறது. இனி கோயில் அமைப்பையும் சிறப்பையும் பார்ப்போம்.
திருவிழாக்கள்:
ஆனி ரோகிணி – அபிஷேகம், 3 நாள் பவித்ரோத்ஸவம், தையில் பிரம்மோத்ஸவம் – சிராவணத்தில் தேர் திருவிழா, மாதாந்திர ஸ்ராவணம் கோயிலில் ஒரு விசேஷ நாள்.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோழிக்குத்தி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி