கோம்பூர் பசுபதீஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி :
கோம்பூர் பசுபதீஸ்வரர் சிவன் கோயில்,
கோம்பூர், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614101.
இறைவன்:
பசுபதீஸ்வரர்
இறைவி:
மங்களாம்பிகை
அறிமுகம்:
சிவபெருமான் இந்த உலகில் சுயம்புவாய், பசுபதீஸ்வரராய் எழுந்தருளியிருக்கும் தலங்கள் பல. அவற்றில் ஒன்று இந்த கோம்பூர். மேய்ச்சலுக்குச் செல்லும் பசுக்கள் சுயம்பு மூர்த்தங்களின் மீது தாமாகப் பால் பொழியும். அந்தப் பகுதியை சோதித்து அங்கு சிவலிங்க வடிவைக் கண்டுபிடித்து வழிபடுவர். அப்படி பசுக்களால் வழிபடப்பட்ட தலங்களில் ஒன்று கோம்பூர் பசுபதீஸ்வரர்.
கூத்தாநல்லூர் தாலுகாவில் உள்ளது கோம்பூர் கிராமம். காக்கையாடி அருகில் உள்ளதால் காக்கையாடிகோம்பூர் எனவும் அழைக்கின்றனர். கூத்தாநல்லூர் – வடபாதிமங்கலம் சாலையில் சரியாக 4 ½ கிமீ தூரத்தில் சாத்தனூர் உள்ளது. சாலையை ஒட்டி ஓடும் வெண்ணாற்றின் தென்புறத்தில், திருத்தலம் உள்ளது. இங்கு அருளும் இறைவன்- பசுபதீஸ்வரர் இறைவி-மங்களாம்பிகை
கோயில் முற்றிலும் சிதைவுண்டு லிங்கமும் அம்பிகையும் மட்டும் குடிசையில் வைத்து வழிபடப்பட்டு வந்தன. ஊர் மக்களின் முயற்சியாலும் மற்றும் சில பெரியோர்களின் உதவியால் புதுப்பித்து குடமுழுக்கும் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில். கோயிலும் சிறியது தான். கோயிலின் நேர் பின்புறம் ஒரு தீர்த்த குளம் அமைந்துள்ளது. கோயிலின் வடகிழக்கில் அகத்திய தீர்த்தம் எனும் ஒரு கிணறு அமைந்துள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர்.
முகப்பில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது இதில் கருவறை வாயிலில் விநாயகரும், வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளன. விநாயகர் அருகில் நால்வர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இறைவனை நோக்கிய நிலையில் நந்தி அமைந்துள்ளது. அம்பிகை கருவறையை ஒட்டி சனிபகவான் கிழக்கு நோக்கி உள்ளார். இதே மண்டபத்தில் அகத்தியர் பூசித்த அகத்தீஸ்வரர் என ஒரு லிங்கமும் உள்ளது இது மேற்கு நோக்கி உள்ளது. அருகில் சூரியனும் உள்ளார். கருவறை கோஷ்டத்தில் தென்முகன், மற்றும் துர்க்கையும் மட்டும் உள்ளனர். இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை பூஜித்தார் கோரக்க சித்தர் என்கின்றனர். தலத்தின் விருட்சம் காசி வில்வம். ராஜமன்னார்குடி ராஜகோபாலசுவாமிக்கு பங்குனி விழாவில் திருமஞ்சனம் செய்ய பசுபதீஸ்வரர் ஆலய தீர்த்தத்தையே அக்காலத்தில் எடுத்து செல்வது வழக்கம் என்கின்றனர். . ஒருகாலத்தில் இந்த ஆலயத்தைச் சுற்றி அக்ரஹாரம் இருந்ததாகவும் எப்போதும் வேதகோஷம் ஒலிக்கும் தலமாக இந்தத் தலம் விளங்கியது என்றும் சொல்கிறார்கள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோம்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி