குறிச்சி அபிமுக்திஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
குறிச்சி அபிமுக்திஸ்வரர் சிவன்கோயில்,
குறிச்சி, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611102.
இறைவன்:
அபிமுக்திஸ்வரர்
இறைவி:
அபிராமி
அறிமுகம்:
நாகப்பட்டினத்தின் மேற்கில் உள்ள நாலுரோட்டில் இருந்தது வேளாங்கண்ணி சாலையில் 11 கிமீ சென்றால் பரவை கிராமம், இதன் மேற்கில் செல்லும் சாலையில் நான்கு கிமீ தூரம் சென்றால் நிர்த்தனமங்கலம்; நரசிங்கமங்கலம்; இதன் தென்புறம் தான் குறிச்சி கிராமம் கடுவையாற்றின் தென் பகுதி தான் இந்த கிராமம்.
ஊரின் மத்தியில் பெரிய குளம் ஒன்று; அதன் கரையில் பெரிய வீடாக ஒரு வீடு தெரிந்தது, அங்க போனா ஒரு வயதான பெரியவரும் அவர் சம்சாரமும் இடிந்து சரிந்துபோன அந்த பெரிய கட்டிடத்தில் உள்ளனர். ஒரு காலத்தில் இந்த ஊரில் ஓகோன்னு வாழ்ந்தவங்களாம், இந்த ஊரில் அவங்களுக்கு நிலபுலன்களும் ஏகப்பட்டது… பதிமூணாம் நம்பர் பட்டாவில் இருக்காம், எதிர்ல இருக்க குளம் கூட அவுரோடது தானாம். அவர் இப்ப இருக்க வீடு நாயக்க ராசா யாரோ ஒருத்தர் கட்டி கொடுத்தது தான். முன்பக்கம் பின்பக்கம் எல்லாம் காற்றிலும், மழையிலும் வெயிலிலும் பெரிய பெரிய செடிங்க முளைச்சி விரிசல் விட்டு கிடக்கு. அவரை பார்க்கறதுக்கு அப்போவெல்லாம் நிறைய பேர் வருவாங்க அவங்க நின்னு குறைகளை சொல்ல பெரிய மண்டபம் இருந்தது இப்போ அதுவும் இடிஞ்சி போய் வானம் பாக்குது.
இப்படி கிடப்பதை பார்த்துட்டு அண்டை அசலூர்காரங்க சிலபேர் வந்து வீட்டை எடுத்து கட்ட ஆரம்பிச்சாங்களாம், யாரு கண்ணு பட்டுதோ அப்படியே போட்டுட்டு போயிடாக, வருமானம் இல்லாம கரண்ட் பில்லு கட்டாம விட்டதுல பீசு கேரியரோட மீட்டரையும் தூக்கிட்டு போயிட்டாங்க போல. வயசானவங்க ரெண்டுபேரும் குளிக்க குடிக்க தண்ணியுமில்ல வெளிச்சமுமில்லை, வருமானமும் இல்ல எண்ணையும் மாத்து துணி கூடஇல்லிங்க. மக்களும் இவரை பார்த்து பிராது கொடுக்க வரதும் கொறஞ்சி போச்சி, இவங்களை கிட்ட இருந்து பாத்துக்கிட்ட இருந்த ஒரு ஐயா மேல திருட்டு பழி போட்டதால அவரும் இப்போ இல்லியாம்.
இவ்வளவு தூரம் வந்தாச்சு உள்ள பெரியவரை ஒரு எட்டு பாத்துட்டு போகலாம்னு உள்ள பாத்தா வீட்டுக்குள்ள அவரு கூட அவரு புள்ளைங்க வினாயகன், சந்திரன், சூரியன், பைரவன், சண்டி, கூட பொறந்த பொறப்பு தட்சிணாமூர்த்தி, எல்லோரும் ஒரே சின்ன இடத்தில தான் இருக்காங்க, முருகன் பிள்ளை மட்டும் தனியா ஒரு வீட்டில ரெண்டு மனைவியோட இருக்காரு அவர் நிலையும் இப்படிதான் இருக்கு வீட்டுக்காரம்மா தனியா ஒரு அறையில் இருக்காங்க. இந்த பெரியவரின் கஷ்ட நஷ்டம் எல்லாம் எதிரில் இருந்து பார்த்த அவரோட வளர்ப்பு மாட்டுக்கும் அது கட்டியிருக்கும் வயசான அரசமரத்துக்கும் தாங்க தெரியும்.
இந்த ஊர் பக்கம் போனீங்கன்னா அபிராமி அம்மா வீடுன்னு கேளுங்க, இல்லை அபிமுக்தி ஐயா வீடுன்னு கேளுங்க. எல்லோரும் காட்டுவாங்க.
ஆனா ஒண்ணுங்க பெரிய சோலிக்காரங்க இவங்களையும் விடாம வீட்டுக்கு TM015837 ன்னு நம்பரும் போட்டு கொடுத்திருக்காங்க!
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குறிச்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி