Monday Jan 27, 2025

காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி :

காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோயில்,

கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் சாலை,

காரைமடை,

கோயம்புத்தூர் மாவட்டம்,

தமிழ்நாடு 641104

இறைவன்:

அரங்கநாதசுவாமி

இறைவி:

லட்சுமி ரங்கநாயகி

அறிமுகம்:

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடையில் உள்ள அரங்கநாதசுவாமி கோயில் (காரைமடை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) விஷ்ணு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரில் இருந்து 23 கி.மீ. திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அவர் அரங்கநாதசுவாமி என்றும் அவரது மனைவி லட்சுமி ரங்கநாயகி என்றும் வணங்கப்படுகிறார். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் இக்கோயில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

       ஒருசமயம் கருடாழ்வாருக்கு திருமால், மகாலட்சுமியின் திருமணக்கோலம் காண வேண்டுமென ஆசை எழுந்தது. அதனை சுவாமியிடம் தெரிவித்தார்.அவர் விருப்பத் திற்காக சுவாமி, பூலோகத்தில் இத்தலத்தில் திருமணக்கோலம் காட்டியருளினார். அவருக்கு காட்சி தந்த சுவாமி, இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். பிற்காலத்தில் இப்பகுதி காரை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இப்பகுதியில் வசித்த இடையன் ஒருவன் பசுக்கள் மேய்த்து, வந்தான். அதில் ஒரு பசு மட்டும் தொடர்ந்து பால் சுரக்காமல் இருக்கவே, அதனை கண்காணித்தான். ஓரிடத்தில் காரை மரத்தின் அடியில் இருந்த புதர் மீது பால் சொரிந்ததைக் கண்டான். அப்புதரை அவன் வெட்டியபோது, ரத்தம் பீறி பீ ட்டது. தகவல் தெரிந்த மக்கள் இங்கு வந்தபோது அசரீரி தோன்றி, சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிருந்ததை உணர்த்தியது. அதன்பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

நம்பிக்கைகள்:

குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க, செல்வம் பெருக ரங்கநாதரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

      மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது. ராமானுஜர், கர்நாடக மாநிலத்திலுள்ள திருநாராயணபுரம் தலத்திற்கு சென்றபோது இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளார். திருப்பதியில் மலையப்பசுவாமி (வெங்கடாஜலபதி) மலையிலும், அலர்மேலுமங்கைத்தாயார் அடிவாரத்திலும் காட்சி தருகின்றனர். ஆனால் இத்தலத்தில் சுவாமி கீழேயும், அருகிலுள்ள மலையில் ரங்கநாயகித்தாயாரும் காட்சி தருகின்றனர். இவளை, “பெட்டத்தம்மன்’ என்று அழைக்கிறார்கள். சுவாமி, இந்த தாயாரையே திருக்கல்யாணம் செய்து கொள்வதாக ஐதீகம். மாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில், இக்கோயிலில் இருந்து அர்ச்சகர் மலைக்கோயிலுக்குச் சென்று, கும்பத்தில் தாயாரை ஆவாஹனம் செய்து (எழுந்தருளச்செய்து) கோயிலுக்கு கொண்டு வருகிறார். அப்போது பெருமாள் சன்னதியில் இருந்து ராமபாணத்தை வெளியில் கொண்டு சென்று தாயாரை வரவேற்கும் வைபவம் நடக்கிறது. அதன்பின் கலசத்தை மூலஸ்தானத்தில் வைத்து பூஜிக்கின்றனர். மறுநாள் அதிகாலையில் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. ரங்கநாதருக்கு வலப்புறத்தில் ரங்கநாயகிக்கு பிற்காலத்தில் தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது.

ராமபாணஆசிர்வாதம்: கோயில்களில் பெரும்பாலும் உற்சவமூர்த்தி, மூலவருக்கு அருகில்தான் காட்சி தருவார். விழாக்காலங்களில் மட்டும் இவர் வெளியில் சென்று புறப்பாடாகி மீண்டும் சன்னதிக்கு திரும்புவார். ஆனால், இக்கோயிலில் உற்சவர் மூலஸ்தானத்திற்கு செல்வது கிடையாது. இவர் எப்போதும் சன்னதி முன்மண்டபத்தில்தான் காட்சி தருகிறார். இத்தலத்தில் சுயம்புவாக தோன்றிய ரங்கநாதர், சிறிய மூர்த்தியாக இருக்கிறார். இவருக்கான உற்சவர், பெரிய சிலை வடிவில் இருக்கிறார். எனவே இவரை மூலஸ்தானத்தில் வைத்தால், மூலவரை தரிசிக்க முடியாது என்பதன் அடிப்படையில் முன்மண்டபத்திலேயே வைத்திருக்கின்றனர். பெருமாள் கோயில்களில் பிரதானமாக கருதப்படுவது சடாரி சேவை. இந்த சடாரியில் திருமாலின் திருப்பாதங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதை பக்தர்களின் தலையில் வைத்து ஆசிர்வதிப்பர். இங்கு மூலவர் சன்னதியில், சடாரி வைக்கப்படுவதில்லை. மாறாக, ராமபாணத்தால் ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. இந்த ராம பாணத்திற்குள் திருமாலின் பிரதான ஆயுதமான சக்கரம், ஆதிசேஷன் வடிவம் இருப்பதாக சொல்கிறார்கள். உற்சவரிடம் மட்டுமே சடாரி ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. ஆயுதபூஜையன்று ஒருநாள் மட்டும் இந்த ராமபாணத்திற்கு பூஜை செய்யப்படுவது மற்றொரு விசேஷம்.

கவாள சேவை: மாசி பிரம்மோற்ஸவத்தின்போது மகம் நட்சத்திரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். தேர் நிலைக்கு வந்ததும், பக்தர்கள் தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகிய பொருட்கள் கலந்த பிரசாதத்தை வைத்துக்கொண்டு, “ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்,’ எனச்சொல்லி ஒருவருக்கொருவர் கொடுக்கிறார்கள். இதனை, “கவாள சேவை’ என்கிறார்கள். அப்போது சுவாமியின் பாதத்தில் தண்ணீர்ணீவிடும் “தண்ணீர்ணீ சேவை’, கையில் பந்தம் ஏந்திக்கொண்டு சுவாமியை வணங்கும் “பந்த சேவை’ என்னும் சேவைகளும் நடக்கிறது. சுவாமி சுயம்புவாக இருந்ததை கண்டறிந்தபோது இந்த வைபவங்கள் செய்யப்பட்டதன்அடிப்படையில் தற்போதும் இந்நிகழ்ச்சி நடக்கிறது. அமாவாசை தோறும்காலையில் சுவாமிக்கு பாலபிஷேகம் நடக்கிறது. சுவாமி சன்னதி இடப்புறம் உள்ள ஆஞ்சநேயர், சுவாமியை பார்த்து காட்சி தருகிறார். இந்த ஆஞ்சநேயர் சிலை, பெரிய சதுரக்கல்லில் வித்தியாசமாக வடிக்கப்பட்டிருக்கிறது.

திருவிழாக்கள்:

மாசியில் பிரம்மோற்ஸவம், ராமானுஜர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.

காலம்

10-11 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காரைமடை

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்புத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்புத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top