Friday Nov 08, 2024

களக்காடு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி

களக்காடு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், களக்காடு, நாங்குனேரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம் – 627501.

இறைவன்

இறைவன்: சத்தியவாகீஸ்வரர் இறைவி: கோமதியம்மாள்

அறிமுகம்

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குனேரி வட்டத்தில், வள்ளியூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள களக்காடு என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் சத்தியவாகீஸ்வரர் ஆவார். இறைவி கோமதியம்மாள் ஆவார். ஒன்பது நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் உள்ள இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலின் மணி மண்டபத்தில் அழகிய சிற்பங்களும், இசைத்தூண்களும் காணப்படுகின்றன. தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட இந்த ஆலயம் கி.பி. 12ம் நூற்றாண்டில், வீரமார்த்தாண்டவர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் ‘சோரகாடவி’ என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள பாண்டிய நாட்டு வைப்புத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

முற்காலத்தில் களந்தை மரங்கள் நிறைந்த காடாக இருந்த இந்த பகுதியில் இராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை தேடி இராம பிரான் வந்த போது இங்கு புன்னை மரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை கண்டு வழிபட்டதாகவும், அப்போது ஈசன் அசிரீரியாக தோன்றி சீதையை நிச்சயம் மீட்பாய் அதற்கு யாம் அருள்புரிவோம் என்று ராமருக்கு வாக்களித்ததாகவும், பின்னர் இராமன் இலங்கை சென்று சீதையை மீட்டு விட்ட பின் இங்கு எழுந்தருளி தனக்கு வாக்களித்த படி சீதையை மீட்க அருள்புரிந்த புன்னை மரத்தடி லிங்கத்தை வணங்கி பூசை செய்தார் என்றும் கூறப்படுகிறது. இராம பிரானுக்கு சத்திய வாக்கு அருளிய ஈசன் என்பதால் இவருக்கு “சத்தியவாகீஸ்வரர்” என்ற திருநாமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முற்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் கடும் போர் ஏற்பட்டது. அசுரர்களிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சரணடைகின்றனர். தன்னை சரணடைந்த தேவர்களிடம் பொதிகை மலையின் தென்புறத்தில் உள்ள களந்தை நகரில் புன்னை மரத்தடியில் தாம் எழுந்தருளி இருக்கும் இடத்தில் தவம் இயற்றினால் அசுரர்களை வெல்லலாம் என வாக்குறுதி கூறுகிறார். சிவபெருமானின் ஆணையை ஏற்ற தேவர்களும் அவ்வாறே களந்தை நகரை அடைந்து, அங்குள்ள புன்னை மரத்தடி நாதரை வணங்கி தவம் இயற்றுகிறார்கள். அவர்களின் தவத்திற்கு அசுரர்கள் இடையூறு செய்திட, சிவபெருமான் தமது பூத கணங்களுடன் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள்புரிந்தார். இதனால் மகிழ்ந்த தேவர்கள் பூ மாரி பொழிந்து சிவபெருமானை போற்றி துதித்தனர். இவ்வாறு தேவர்களை காப்பதாக கொடுத்த வாக்கை நிறைவேற்றியதால் இத் தல பெருமானுக்கு “சத்தியவாகீஸ்வரர்” என்ற பெயர் வழங்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. சுவாமி சத்தியவாகீஸ்வரர் : கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் லிங்கத் திருமேனியராய் காட்சியளிக்கிறார் சத்தியவாகீஸ்வரர். இவருக்கு புன்னை வன நாதர், புரமெலிச்வர முதலிய நயினார், பொய்யா மொழி நாதர்ஆகிய திருநாமங்களும் வழங்கப் பெறுகிறது. அம்மை கோமதி: கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவாரபாலகிகள் காவல்புரிய, உள்ளே கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை கீழே தொங்க விட்டபடியும், சற்றே இடைநெளித்து, புன்முறுவல் பூத்த திருமுகத்தவளாய், நின்ற கோலத்தில், புன்னகை தழும்ப காட்சியளிக்கிறாள் அம்மை கோமதி. கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கும் இக்கோவில் நுழைவாயிலில் மிக பிரம்மாண்ட ஒன்பது நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. இந்த ராஜ கோபுரத்தின் ஒரு பக்கம் இருக்கும் விநாயகர் மற்றொரு பக்கம் இருக்கும் சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி, கொடி மரம் ஆகியவற்றை தரிசிக்கலாம். பின் அதிகார நந்தி பெருமானை வணங்கி உள்ளே நுழைந்தால் நேராக சத்தியவாகீஸ்வரர் சன்னதி. சுவாமி சன்னதிக்கு வடப்புறம் கோமதி சன்னதியும், மத்தியில் சுப்பிரமணியர் சன்னதியும் இருக்கிறது. திருச்சுற்றில் பரிவார தேவதைகளாக முறையே சூரியன், நால்வர், அறுபத்து மூவர், சுர தேவர், சப்த மாதர்கள், சோமாஸ்கந்தர், சிவகாமி உடனுறை நடராஜர், தட்சிணா மூர்த்தி, கன்னி மூல விநாயகர், லிங்க நாதர், புன்னை மரத்தடி, துர்க்கை, நவநீத கிருஷ்ணன், சண்டிகேசுவரர், சுப்பிரமணியர், சண்முகர், சண்டிகேசுவரி, சனீஸ்வரர், பைரவர் மற்றும் சந்திரன் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். இத்திருக்கோவிலின் வெளித் திருச்சுற்றில் தீர்த்தக் குளமும், திருவாதிரை மண்டபமும், நந்தவனமும் அமையப் பெற்றுள்ளது.

நம்பிக்கைகள்

புன்னை மரம் தலவிருட்சமாகவும், பச்சையாறு தீர்த்தமாகவும் அமையப் பெற்றிருக்கும் இந்தக் கோயிலுக்கு, மகாசிவராத்திரி, மாசிமகம் முதலான புண்ணிய தினங்களில் வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

சிறப்பு அம்சங்கள்

இந்த திருக்கோவில் அப்பர் வாக்கினால் பாடப் பெற்ற தேவார வைப்புத் தலமாக திகழ்கிறது. கி.பி பதினொறாம் நூற்றாண்டை சேர்ந்த வீரமார்த்தாண்டன் என்னும் மன்னன் இக் கோவிலை மிக பிரம்மாண்டமாக கட்டியதாக கூறப்படுகிறது. இப்பகுதி மக்களால் பெரிய கோவில் என்று பெருமையாக அழைக்கப்படும் இக் கோவிலின் ராஜ கோபுரம் ஒன்பது நிலைகள் மற்றும் ஒன்பது கலசங்களை தாங்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த களக்காடு பெரிய கோவிலுக்கும், திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவிலுக்கும் இடையில் நீண்ட சுரங்கப் பாதை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ராஜ கோபுரத்தின் உட்புறத்தில் திருக்கோவில் வரலாறு மற்றும் திருவிளையாடல் புராணங்களை விளக்கும் இயற்கை மூலிகையால் வர்ணம் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் காணப்படுகிறது. இத் தலத்தில் உறையும் சத்தியவாகீசருக்கு புன்னைவனநாதர், பிரமநாயகன், பரிதிநாயகன், சுந்தரலிங்கம், களந்தை லிங்கம், பைரவ லிங்கம், வீரமார்த்தாண்ட லிங்கம், திரிபுர லிங்கம், வைரவநாதர், சாமள மகாலிங்கர், சோம நாயகர், குலசேகர நாயகர் ஆகிய பெயர்களும் வழங்கப் பெறுகின்றன. இங்கு வருடத்திற்கு இரண்டு முறை பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களில் சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் உள்ள சுவாமி மீது படும் அற்புத நிகழ்வு நடைபெறுகிறது.

திருவிழாக்கள்

இங்கு வைகாசி மாதம் சுவாமி கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். திருவிழாவின் ஒன்பதாம் நாள் தேரோட்டமும் விமரிசையாக நடைபெறும். ஐப்பசி மாதம் கோமதி அம்மை சன்னதியில் கொடியேற்றமாகி திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஐப்பசி மாதம் இத்தல சுப்பிரமணியருக்கு கந்த சஷ்டி திருவிழா ஏழு நாட்கள் சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாதம் சோமவார வழிபாடும், திருக்கார்த்திகை சொக்கப்பனை ஏற்றுதலும், திருவனந்தல் வழிபாடும் சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் திருவாதிரை அன்று ஆருத்ரா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். தை மாதம் பூசத்தை ஒட்டி தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இது தவிர மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை வருட பிறப்பு, நடராஜருக்குரிய ஆறு அபிஷேகங்கள், மாதாந்திர பிரதோஷ மற்றும் பெளர்ணமி பூஜைகளும் சிறப்பாக நடைபெறும்.

காலம்

13 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாங்குனேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாங்குனேரி, திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top