கடயம் நித்ய கல்யாணி திருக்கோயில் (வில்வவனநாதர் கோயில்), திருநெல்வேலி
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021-12-04-2.jpg)
முகவரி :
அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில்,
கடயம், அம்பாசமுத்திரம் தாலுக்கா,
திருநெல்வேலி மாவட்டம் -627 415.
போன்: +91 4634 241 384, 240 385. 94430 03562.
இறைவன்:
வில்வவனநாதர்
இறைவி:
நித்ய கல்யாணி
அறிமுகம்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையத்தில் அமைந்துள்ள நித்ய கல்யாணி கோயில் வில்வவனநாத சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரும், தேசபக்தருமான சுப்ரமணிய பாரதியார் இந்தக் கிராமத்தில் வாழ்ந்து, இந்தக் கோயிலுக்குச் செல்வது வழக்கம்; அவர் தனது பிரபலமான கவிதைகள் பலவற்றை இந்த கிராமத்தில் இருந்து எழுதினார். மூலவர் வில்வ வனநாத சுவாமி / வில்வாரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அன்னை நித்ய கல்யாணி என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் சக்கர தீர்த்தம் மற்றும் ஸ்தல விருட்சம் வில்வ மரம்.
புராண முக்கியத்துவம் :
காபிலோ புராணத்தில் இந்த ஸ்தலத்தின் வரலாறு சொல்லப்பட்டுள்ளது. தேவர்களுக்கும் கம்பாசுரன் என்பவனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தின் போது, தேவேந்திரனுக்கு உதவியாக அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜா சென்றார். அசுரர்கள் பலரைக் கொன்றார். இதனால் தனக்கு தோஷம் ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதிய அவர் தென்னகத்துக்கு வந்து, அகத்தியரால் உருவாக்கப்பட்ட தத்துவசாரா நதியில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். அந்த நதிக்கரையில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த வில்வவனநாதரை அவர் வணங்கினார்.அவரது அருளால், ஸ்ரீமன் நாராயணனே அவருக்கு புத்திரராகப் பிறந்தார்.
அயோத்தியில் ராமராஜ்யம் நடந்த போது, அகால மரணமே யாருக்கும் ஏற்படவில்லை. இதைக்கண்டு பொறாமைப்பட்ட சம்புகன் என்ற கொடியவன், அங்கே அகால மரணம் ஏற்பட வேண்டும் என இறைவனை வேண்டி தவம் செய்தான். அவனை ராமபிரான் கொன்றுவிட்டார். அந்த தோஷம் நீங்குவதற்காக அவர் தத்துவசாரா நதியில் நீராடி, வில்வவனநாதரையும், அவரது தேவியான நித்ய கல்யாணி அம்பாளையும் வணங்கினார். ராமபிரான் நீராடிய பிறகு, இந்த நதிக்கு “ராம நதி’ என்ற பெயர் ஏற்பட்டது. இப்போதும், இந்தப் பெயரிலேயே இந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது. பவித்ரமான இந்த நதி செல்லும் இடங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை கூட மணல்வெளியாக காட்சியளித்தன. இப்போது புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த நதியின் வரலாற்று முக்கியத்துவம் கருதி, இதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
நம்பிக்கைகள்:
அம்பாளின் 15 கலைகள் அடங்கிய பீடத்தில் நெய்விளக்கேற்றி நியாயமான கோரிக்கைகள் எது வைத்தாலும் நிறைவேறுகிறது. குறிப்பாக, பொதுநலன் கருதி வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.
சிறப்பு அம்சங்கள்:
பாரதியார் பாடிய பூமி: பாட்டுக்கொரு புலவரான பாரதியார் இவ்வூரின் மருமகன் ஆவார். இங்கு வசித்த செல்லம்மாளை அவர் திருமணம் செய்தார். இவ்வூரில் தன் வாழ்நாளில் சில வருடங்கள் அவர் தங்கியிருந்தார். அப்போது வில்வவனநாத சுவாமி கோயிலுக்கு வந்து வில்வவனநாதர் மற்றும் நித்யகல்யாணி அம்பாள் மீது பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் எழுதிய நவராத்திரி பாடலில், “”உஜ்ஜெயினீ நித்ய கல்யாணீ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி!” என்று பாடினார். சங்கரன்தேவி, சரஸ்வதி மாதா, மகேஸ்வரன் தோழி, மகாலட்சுமி, உத்தமதேவி என்று அவர் நித்யகல்யாணி அம்மனை வர்ணித்துள்ளார். கோயில் முன்பு உள்ள தட்டப்பாறையில் அமர்ந்து தான் “காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்’ என்ற புகழ் பெற்ற பாடலை அவர் எழுதினார்.
இத்தலத்து அம்பாள் நித்யகல்யாணி மிகுந்த உக்கிர தேவதையாக கிழக்கு நோக்கிய சன்னதியில் இருந்தாள். இவளுக்கு பூஜை செய்வதென்றால், சற்றும் விதிமுறைகள் தவறாமல் செய்ய வேண்டியிருந்தது. இதில் சிறு கோளாறு ஏற்பட்டாலும் பூஜைக்குச் சென்ற அர்ச்சகர்கள் இறந்து விடுவார்கள். இதனால், கோயில் பக்கமே யாரும் செல்ல அஞ்சினர். இவ்வூரில் வசித்த தேவதாசியான நாட்டியமங்கை ஒருத்தி இந்த அம்பாள் மீது மிகுந்த பக்திகொண்டவள். தவறான தொழில் செய்து வந்தாலும், அதில் கிடைக்கும் பணம் முழுவதையும் அம்பாளுக்காகவே செலவிடுவாள்.
அவள் அர்ச்சகர் ஒருவரிடம் மாலை ஒன்றை கொடுத்தனுப்பினாள். அந்த மாலையுடன் சென்ற அவர், அம்பாள் உக்கிர நிலையில் இருந்ததால், பூஜை செய்ய இயலாது எனத் திரும்பி விட்டார். பிற்காலத்தில், பல யோசனைகளுக்குப் பிறகு தெற்கு நோக்கியிருந்த ஒரு சன்னதியில் அம்பாள் சிலை வைக்கப்பட்டது. அம்பாளின் சக்தி 16 கலைகளாக சிலைக்குள் அடக்கப்படுமாம். இதில் 15 கலைகளைப் பிரித்து ஒரு பீடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டது. இந்த பீடத்தை தரணி பீடம் என்கிறார்கள். ஒரு கலையுடன் சாந்ததேவியாக அம்பாளுக்கு பூஜைகள் துவங்கின. அதன் பிறகு பிரச்னை ஏதும் ஏற்படவில்லை.
அம்பாள் மகிமை : “கல்யாணி’ என்ற பெயருக்கு சிறப்பான அர்த்தங்கள் உண்டு. வடமொழி நிகண்டுகளின் படி “கல்யாண்’ என்றால் மங்கலம், பரமானந்தம், அதிர்ஷ்டம், அழகு, வளம், கருணை, நன்மை தரவல்லது, ஆசிர்வாதம், பரிசுத்தமானது, வணங்கத்தக்கது, சொர்க்கம் என்ற பொருள்கள் உள்ளன. அதிலும் இத்தலத்து அம்மன் நித்யகல்யாணி என்பதால் எந்நாளும் எந்நேரமும் வரமருளுபவளாகக் கருதப்படுகிறாள். இவளது சன்னதியில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
அதிசய வில்வமரம்: சிவனுக்கு மிகவும் பிடித்தமான அர்ச்சனை பொருள் வில்வம். அந்த வில்வத்தின் பெயரையே சுவாமி இங்கு தனக்கு சூடிக்கொண்டுள்ளார். பிரம்மதேவருக்கு சிவபெருமான் ஒரு வில்வபழத்தைக் கொடுத்தார். அதை மூன்றாக உடைத்த பிரம்மா ஒன்றை கைலாய மலையிலும், இன்னொன்றை பாரதத்தின் நடுவிலுள்ள மேருமலையிலும், மற்றொன்றை தென்பொதிகை சாரலிலுள்ள துவாத சாந்தவனத்திலும் நட்டார். அந்த துவாதசாந்தவனப் பகுதியில் தான் வில்வவனநாதர் கோயில் உள்ளது. தேவர்கள் நீர் பாய்ச்சி இந்த மரத்தை வளர்த்தனர். தற்போது கோயிலுக்குள் உள்ள வில்வமரத்தில் எப்போதாவது தான் காய் காய்க்கும். இதை எடுத்து உடைத்தால் உள்ளே சிவலிங்க பாணம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் சிலருக்கு இந்தக் காய் கிடைத்துள்ளது. அவற்றை அவர்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.
திருவிழாக்கள்:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2021-12-04-1.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2021-12-04-2.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2021-12-04-3.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2021-12-04-4.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2021-12-04-5.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2021-12-04-6.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2021-12-04-7.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2021-12-04-8.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2021-12-04-9.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2021-12-04-10.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2021-12-04-11.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2021-12-04.jpg)
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடயம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தென்காசி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை, திருவனந்தபுரம்