Thursday Jan 23, 2025

இரும்பேடு பூண்டி அருகர் கோயில், திருவண்ணாமலை

முகவரி

இரும்பேடு பூண்டி அருகர் கோயில், இரும்பேடு, ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் – 632301.

இறைவன்

இறைவன்: பொன்னெழில் நாதர், பார்சுவநாதர் இறைவி: ஜுவாலா மாலினி அம்மன்

அறிமுகம்

சென்னையிலிருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் ஆரணிக்கு முன்பு 3 கி.மீ. தொலைவில், ஆரணி வட்டத்தில் இரும்பேடு என்னும் ஊர் உள்ளது. ஆரணியிலிருந்து இரும்பேடு செல்லலாம். பூண்டி அருகர் கோயில் சோழர்கள் காலத்தில் திருவண்ணாமலைப் பகுதியில் சிற்றரசர்களாயிருந்த சம்புவராயர்களால் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். தென்னகக் கட்டடக் கலைக்கு சிறந்த சான்றாகத் திகழும் இக்கோயில் சமண தீர்த்தங்கரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். திராவிடக்கலைப் பாணியில் அமைந்த இக்கோயில் வீரவீர ஜீனாலயம் என்று அழைக்கப்படுகிறது. பொன்னெழில் நாதர் என்று கருவறையில் உள்ள ஆதிநாதர் அழைக்கப்படுகிறார். மகாவீரர் முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையில் உள்ளார். மேலும் சக்கரேஸ்வரி, பத்மாவதி போன்ற பெண் தெய்வங்களுக்கும், பிரம்மா, சரஸ்வதி, லட்சுமி போன்ற இந்து சமயக் கடவுளர்க்கும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். ஜ்வாலா மாலினி பெண் தெய்வத்திற்கு தனிக் கருவறை இக்கோயிலில் அமைந்துள்ளது. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் கோட்டங்கள் அமைந்துள்ளன. ஆனால் அவை வெற்றுக் கோட்டங்களாகவே உள்ளன. விமானத்தின் தளஉறுப்புகளில் சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் சுதையால் ஆனவை. இக்கோவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

சம்புவராயனின் பாடல் கல்வெட்டொன்று இக்கோயிலை “வீர வீர ஜீனாலயம்” எனக் குறிப்பிடுகிறது. நாட்டுப்பிரிவு முதல், எல்லை கூறி கல் நடுதல் வரை முழுமையும் பாடலால் அமைந்த கல்வெட்டு இங்கு காணப்படுகின்றது. சோழர் காலத்தில் சிற்றரசராக இருந்த சம்புவராய அதிகாரிகள் பலர் இக்கோயில் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர். ர் கோயிலில் உள்ள மகாவீரர் முதலான கற்சிற்பங்களும், இருபதுக்கும் மேற்பட்ட சமணச் செப்புத் திருமேனிகளும் கோயிலின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன. ஆதிநாதர், பொன்னெழில் நாதர் எனவும் வழங்கப்படும் மூலவர் சிற்பம் 3 அடி உயரமுடைய தனிக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்திலுள்ள தருமதேவியின் திருவடிவம் சிறிது உயரமான பீடத்தின் மேல் வடிக்கப்பட்ட தனிச்சிற்பமாகும். தேவியின் இருகுழந்தை வடிவங்களும், பணிப்பெண் வடிவமும் சிறியனவாக உள்ளன. மேலும் இக்கோயிலில் பிரம்மதேவர், சரஸ்வதி, லட்சுமி, சக்கரேஸ்வரி, பத்மாவதி ஆகியோருடைய சிற்பங்களையும் காணலாம். இக்கோயில் விமானத்தில் பல்வேறு சமணச் சுதை உருவங்கள் எழில் ஊட்டுகின்றன.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆரணி

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஆரணி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top