அருள்மிகு பரஞ்சோதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாக்கூர்
முகவரி
அருள்மிகு பரஞ்சோதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாக்கூர் – அஞ்சல் – 630610, திருப்பாச்சேத்தி (வழி) மானாமதுரை வட்டம், சிவகங்கை மாவட்டம்.
இறைவன்
இறைவன் : பரஞ்சோதீஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை
அறிமுகம்
மதுரை – இராமநாதபுரம் / மானாமதுரை பேருந்து நெடுஞ்சாலையில், திருபுவனம் தாண்டி – திருப்பாச் சேத்தி (25 கி.மீ.) என்ற ஊரையடைந்து – அங்கிருந்து தஞ்சாக்கூர் செல்லும் கிளைப்பாதையில் 5 கி.மீ. சென்று தலத்தையடையலாம். திருப்பாச் சேத்தியிலிருந்து தஞ்சாக்கூருக்கு அடிக்கடி பஸ்கள் கிடையாது. எனவே எப்போதும் இப்பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகமாவுள்ளது. ஊர்க் கோடியில் இறங்கியதுமே அடுத்துக் கோயில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
சிறிய கோயில். கோபுரங்கள் ஏதுமில்லை. சுவாமி விமானம் மட்டுமேயுள்ளது. இறைவன் – பரஞ்சோதீஸ்வரர், இறைவி – ஞானாம்பிகை. கோயிலின் முன் உள்ள குளத்தில் நீரில்லை. அஃது குட்டை போலவுள்ளது. பயன்படுத்தும் நிலையில்லை. இத்தலம் ஆதி விளைவான ஷேத்திரம் எனப்படுகிறது. கோயிலின் முன்பு சிமெண்ட் தகட்டினால் மூடப்பட்ட மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் துவார பாலகர்கள், விநாயகர், தண்டபாணி, பலிபீடம், நந்தி முதலிய திருமேனிகள் உள்ளன. பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. நேரே மூலவர் தரிசனம். லட்சுமி, சரஸ்வதி, கௌதமர், அகத்தியர், ராமர், லட்சுமணர் ஆகியோர் வழிபட்ட தலம். நவக்கிரகங்களை தவிர வேறெதுவுமில்லை. மண்டபத்தின் முன்னால் கொடிமரமும் நந்தியும் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், லிங்கோற்பவரும், துர்க்கையும் காட்சி தருகின்றனர். இக்கோயிலை சிவகுமார மௌன சுவாமி என்ற துறவி 1958 ல் திருப்பணி செய்துள்ளார். 1961-ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளதாக அங்குள்ள பெயர்ப் பலகைக் குறிப்பு தெரிவிக்கின்றது. இத்துறவியின் மகனுக்கும் ஊர் மக்களுக்கும் ஒத்துழைப்பு இல்லாததால் கோயிலுக்கு போதுமான பராமரிப்பு இன்றி உள்ளது. சிவாசாரியார் மூலம் இரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. ஊரின் சாலைக்கு வலப்பால் ஐயனார் கோயில் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. ‘தஞ்சைவாணன் கோவை’ பாடிய பொய்யாமொழிப் புலவர் பிறந்த பதி. இத்தலம் சுந்தர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள பாண்டிய நாட்டு வைப்புத் தலமாகும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தஞ்சாக்கூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை