Sunday Nov 24, 2024

அருள்மிகு தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம்.

முகவரி

அருள்மிகு தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம். தமிழ் நாடு-625005, Ph: 0452-2484359 0452-2482248

இறைவன்

இறைவன்: சுப்ரமணியசுவாமி

அறிமுகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், (Thiruparankundram Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இந்தக் கோயில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் என்னும் ஊரில் உள்ளது. இங்குதான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை, ஒரு குகைக் கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன. சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத்தக்கவையாக உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர, திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன. அர்த்த மண்டபத்தில், சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும், திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண்கள், நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும். ‘முருகன் தெய்வானை திருமணக்கோலம்’ போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன. கருவறை 3 வாயில்களுடன் அர்த்தமண்டபம் உள்ளது. இதில், பரங்கிரிநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை (கொற்றவை) மற்றும் முருகப் பெருமான் வடக்கு நோக்கியும், பவளக் கனிவாய்ப் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். முருகப்பெருமான் கருவறைக்குள் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். கருவறைக்கு மேற்கில் இடப்பக்கம் தெய்வானையும், வடப்பக்கம் நாரதரும் இடம் பெற்றுள்ளனர். தீர்த்தம் கோயிலின் கிழக்கே 1 கி.மீ. தூரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. மலை அடிவாரத்தில் சத்திய தீர்த்தம் உள்ளது. இதில் தைமாத தெப்பத்திருவிழா நடைபெறும்.

புராண முக்கியத்துவம்

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஓம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. முருகப்பெருமான், பிரணவ மந்திரத்தினையும், அதன் உட்பொருளையும், பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார். இந்நிலையில், சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்கு காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் – பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. முருகப்பெருமானுக்கு, சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சி தந்தார். எனவே தைப்பூசத்தன்று, சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே, திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா, பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே, சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள், துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில், இந்திரன் தன் மகளாகிய தெய்வயானை யை, திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன்-தெய்வயானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா, விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது. பெயர்க்காரணம் பரம்பொருளான சிவபெருமான், குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்; திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (சிறுமலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று. இக்குன்றமானது, சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால், தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர், தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார். சங்க இலக்கியங்களில் அகநானூற்றில் இந்த மலை முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

நம்பிக்கைகள்

வெள்ளை நிற மயில்கள் திருப்பரங்குன்றம் கோயிலில், வெள்ளை நிற மயில்களைக் காணலாம். முருகனின் தரிசனம் காணத் தேவர்கள் மற்றும் முனிவர்கள் வெண்ணிற மயில் வடிவில் இங்கு வசிப்பதான நம்பிக்கை உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில், இக்கோயில் அளவில் பெரியதாகும். லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம்.

திருவிழாக்கள்

சித்திரை- முருகப்பெருமானுக்கு தங்கக் கவசம் சாற்றுதல், மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாண விழாவுக்குப் புறப்படுதல். வைகாசி- வசந்தவிழா (விசாகம்), பாலாபிஷேகம், கந்தசஷ்டி மற்றும் ஆடிப்பூரம், ஆடிக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஐப்பசி பூரம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவரங்கள், திருக்கார்த்திகை, திருப்பள்ளி எழுச்சி (மார்கழி), ஆரூத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, தெப்பத் திருவிழா, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனிப் பெருவிழா, ஆனி ஊஞ்சல், மொட்டையரசுத் திருவிழா, ஆனி முப்பழத் திருவிழா. கோயிலைச் சுற்றி தென்பரங்குன்றம் மற்றும் சமணர் குகைகள் உள்ளன. மயில்களின் காப்பகமும் செயல்பட்டுவருகிறது. கோயில் பகுதியில் பசுமடம் உள்ளிட்டவையும், வேதபாடசாலையும் செயல்படுகின்றன. கோயிலில் வெண்ணெய் சிறு சிறு உருண்டைகளாகத் திரட்டி விற்கப்படும். அவ்வெண்ணெய் உருண்டைகளை வாங்கி கோயிலிலுள்ள மிகப் பெரிய நந்தி சிலை மீது மனதில் வேண்டுதல்களோடு எறிய வேண்டும். வெண்ணெய் உருண்டை நந்தியின் மேல் ஒட்டிக் கொண்டால், நினைத்தது நடக்கும் என்று வழிவழியாய் நம்பப்பட்டு வருகிறது.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்பரங்குன்றம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பரங்குன்றம்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top