Wednesday Dec 18, 2024

அருள்மிகு திருமூலநாதர் சிவன் கோயில், திருமூலஸ்தானம்

முகவரி

அருள்மிகு திருமூலநாதர் சிவன் கோயில், திருமூலஸ்தானம், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 301.

இறைவன்

இறைவன் திருமூலநாதர் இறைவி கிருபாஅம்பிகை

அறிமுகம்

காட்டுமன்னார்கோயிலின் கிழக்கில் மூன்று கிமி தூரத்தில் உள்ளது திருமூலஸ்தானம் எனும் கிராமம் இங்கு இரண்டு சிவன் கோயில்கள் உள்ளன. நாம் இப்போது காண்பது இரண்டு ஏக்கர் பரப்பில் உள்ள திருமூலநாதர் கோயில். இக்கோயில் மிக பழமையான கோயில் ஆகும் கிபி 968ல் இரண்டாம் ஆதித்தனால் கட்டப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர். இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் படிஎடுக்கப்பட்டன 1946ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. விருதராஜ பயங்கர வளநாட்டில் வீரநாராயண சதுர்வேதி மங்கலத்தில் அமைந்துள்ளது. இரண்டாம் ஆதித்தன், பரகேசரி, ராஜகேசரி, முதலாம்ராஜேந்திரன், முதலாம்குலோத்துங்கன் விக்கிரமசோழன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன் ஆகிய கல்வெட்டுக்கள் கிரந்தம் தமிழும் கலந்த நடையில் உள்ளன. இறைவன் பெயர் மூலத்தானத்து ஆழ்வார், மூலத்தானத்து மகாதேவர் மூலஸ்தான பரமேஸ்வரர் மூலஸ்தான உடையார் மூலஸ்தான மகேஸ்வரர் என உள்ளன. தீர்த்தம் திருமூல தீர்த்தம் இப்போது பாப்பாகுளம் எனப்படுகிறது. தல விருட்சம் வில்வம்

புராண முக்கியத்துவம்

முகப்பு கோபுரம் இல்லை நுழைவாயிலை கடந்தவுடன் பெரிய வளாகத்தில் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் கூடிய பெரும் செங்கல் தளி. முகப்பு மண்டபத்தின் வாயிலில் இரு விநாயகர்கள் உள்ளனர். முன்னர் எவ்விடத்தில் இருந்தனர் என தெரியவில்லை. சுற்று மதில் சுவர் உள்ளது. கருவறை விமானம் வேசர பாணியில் உள்ளது. பிரஸ்தரம் வரை கருங்கல் அதற்க்கு மேல் சுண்ணாம்பு கல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இறைவன் எதிரில் தனித்த மண்டபத்தில் நந்தி உள்ளார். இக்கோயில் மிகவும் சிதிலமடைந்து உள்ளது ,மண்டபத்தினுள் சித்தி விநாயகர் இங்கு விநாயகர் மனைவி சித்தியுடன் உள்ளார், அதிகார நந்திகேஸ்வரர் அவரது மனைவியின் சிற்பமும் உள்ளது. நவகிரகத்தின் அருகில் சுவற்றில் தெற்கு நோக்கிய சப்தமாதர்கள் உள்ளனர். கிழக்கு நோக்கிய இறைவன், இறைவி தெற்கு நோக்கியுள்ளார். மகாமண்டபத்தில் நவகிரகம் பைரவர் சூரியன் உள்ளனர். இறைவன் கருவறை வாயிலில் இருபுறம் துவாரபாலகர்கள் உள்ளனர். அறுகால் பகுதியில் இடதுபுறம் சிறிய மகாலட்சுமி அதன் கீழ் ஒரு பெண் தெய்வம் கையில் லிங்கம் வைத்துள்ளார், அதன் கீழ் விநாயகர், வலதுபுறம் மேலே நர்த்தன விநாயகர் அதன் கீழ் பெண் தெய்வம் ஒருவர் கையில் அக்கமாலையும் கெண்டியும் வைத்துள்ளார். உள்ளே உயரமான லிங்க பாணன் கொண்ட திருமூலநாதர்.உள்ளிருக்கிறார். திருமூலர் வழிபட்டதால் இந்த இறைவனுக்கு இப்பெயர். மகாமண்டப வெளி சுவர்களில் குடக்கூத்து எனப்படும் தமிழரின் பழமையான ஆடல் சிற்பம் உள்ளது. அருகில் முனிவர் லிங்க வழிபாடு செய்யும் சிற்பம் உள்ளது திருமூலராக இருக்கலாம். அருகில் உள்ள சுவர் சிற்பமாக சதாசிவமூர்த்தி மடியில் அம்பிகையை இருத்தியவாறு ஐந்து திருமுகம் கொண்டு பத்து கரங்களுடன் உள்ளார். வலக்கையில் சூலமும், மழுவும், கட்வாங்கமும், வச்சிரமும், அபயமுத்திரையும் கொண்டும், இடக்கையில் நாகம், மதுலிங்கப்பழம், நீலோற்பலம், உடுக்கை, மணிமாலை, கொண்டும் காட்சியளிக்கிறார். இந்த மூர்த்தி ஈசானம், தற்புருடம், வாமம், அகோரம், சத்தியோசாதம் முதலான ஐந்து திருமுகங்களுடன் எழுந்தருளியிருப்பவர். இவரது தேவியாக அமர்ந்திருக்கும் சக்திக்கு, மனோன்மணி என்று பெயர். கோட்டங்களில் அழகான அர்த்தனாரீச்வார் பிச்சாடனர், அடுத்து தென்முகன் அதற்கு அடுத்தாற்போல் உள்ள கோட்டத்தில் விநாயகர் நின்ற கோலம், இதன் காரணம் அறியமுடியவில்லை. தென்முகன் தலைமுடி அழகாக விரித்து காணப்படுகிறது அதில் சதுரமான ஒரு கட்டம் உள்ளது அதன் காரணம் என்ன? பின்புற கோட்டத்தில் அம்மையும் அப்பனும் ரிஷபத்துடன் நின்ற கோலம் ரிஷபாந்திகர் எனப்படும் இதுவும் இங்கு சிறப்பு. அடுத்து பிரம்மன் அஷ்ட புஜதுர்க்கை உள்ளனர். வடக்கு மதில் சுவரில் உள்ள கல்வெட்டு சந்திரைய நாயக்கர் மகன் செட்டியப்ப நாயக்கர் என்பவர் 1719 ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதத்தில் கட்டிய சுவர் இதுவாகும். வெளி பிரகாரத்தில் விநாயகர் சிற்றாலயம் அதில் விநாயகர் கிழக்கு நோக்கி உள்ளார் அவரது முகப்ப மண்டபத்தில் இரு நாவுக்கரசர் சிலைகளும், ஒரு சம்பந்தர் சிலையும் உள்ளது. சம்பந்தரின் பின் புறம் நடராஜர் தெற்கு நோக்கியபடி நடனகோலம் காட்டுகிறார். இதில் சிறப்பாக சொல்லப்படுவது என்னவெனில் விநாயகரின் கோஷ்ட்ட மூர்த்தியாக வடபுறத்தில் சனிபகவான் உள்ளார். சோழர்கள் பலரும் பேணிக்காத்த இக்கோயில் இன்று மரங்களின் வேர்களுக்கு பதில் சொல்லமுடியாமல் மழைக்கால நீரை தடுக்க இயலாமலும்நிற்கின்றன. பல மூர்த்தங்கள் எண்ணையும் வஸ்திரமும் காணமல் இருப்பது எவ்வாறெனில், செல்வந்தராய் வாழ்ந்து கெட்ட முதியவர் ஒருவர் தன் இயலாமையை சொல்லி பொருள் பெற கூசி நிற்பதாக உணர்கிறேன். இந்துக்களே நித்தம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று. பிற மத மக்களை பாருங்கள் ஆறுமுறை தொழுகிறார்கள், வாரம் தவறாமல் ஜபிக்கிறார்கள். ஆலயம் அழைக்கும் போராட்டம் இனி ஒரு நாள் வந்தாலும் வரலாம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காட்டுமன்னார்கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கடலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top