அருள்மிகு திரிபுரசுந்தரி சக்தி பீடக் கோவில், உதய்பூர்
முகவரி
அருள்மிகு திரிபுரசுந்தரி திருக்கோயில் மாதாபரி, உதய்பூர், திரிபுரா மாநிலம் – 799103
இறைவன்
சக்தி: திரிபுர சுந்தரி பைரவர்: திரிபுரேஸவரர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: வலது கால் பகுதி
அறிமுகம்
இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் மாநிலம் திரிபுரா. இயற்கை எழில் நிறைந்த தெய்விக பூமியான திரிபுரா மாநிலத்தில் உள்ள நகரம் உதய்பூர். ஆதிகாலத்தில் உதய்பூர்தான் திரிபுரா மாநிலத்தின் தலைநகராக இருந்தது. அதன் காரணமாகவே திரிபுரா மாநிலத்தின் பெரும்பாலான பிரசித்தி பெற்ற கோயில்கள் உதய்பூரிலேயே அமைந்திருக்கின்றன. எண்ணற்ற நீர்நிலைகளுடன் பசுமை நிறைந்த உதய்பூரில் திரிபுரா மாநிலத்தின் முக்கியக் கோயிலாகத் திகழ்வது அருள்மிகு திரிபுரசுந்தரி கோயில். இந்தக் கோயிலின் காரணமாகத்தான் அந்த மாநிலத்துக்கே திரிபுரா என்ற பெயர் அமைந்ததாகவும் சொல்லப்படுகிறது. திரிபுரசுந்தரி கோயில் பக்தர்களால் மாதா பாரி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் அருள்புரியும் திரிபுரசுந்தரி காளி வடிவினளாகக் காட்சி அருள்கிறாள். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இந்தத் தலத்தில்தான், தேவியின் கால் பகுதி விழுந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
புராண முக்கியத்துவம்
கோயிலின் வெளிப்புறத் தோற்றம் நாற்கோண வடிவில் ஓர் ஆமையைப் போல் உள்ளதால், இதைக் கூர்ம பீடம் என்று சொல்கிறார்கள். கருவறை சதுர வடிவில் வங்காளத்து கட்டடக் கலையைப் பின்பற்றி அமைந்திருக்கிறது. கருவறையின் மேல் விதானம் புத்த ஸ்தூபியைப் போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி வித்தியாசமான முறையில் அமைந்திருக்கும் தேவியின் கருவறைக்குள் அன்னை திரிபுரசுந்தரியை உள்ளால். கருவறையில் அருள்புரியும் திரிபுரசுந்தரி காளி வடிவினளாக இருந்தாலும் அவளுடைய விழிகளில் கருணையும் கனிவும் நிறைந்து நமக்கெல்லாம் அபயம் தர அழைப்பதுபோல் காட்சி தருகிறாள். சுமார் 6 அடி உயரத்தில் உரைகல்லினால் வடிக்கப்பட்ட விக்ரகம் கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. ஜடாமகுடத்துடன் நாக்கைத் துருத்தியபடி காட்சி தரும் திரிபுரசுந்தரி, 13 தலைகளைக் கோத்த மாலையை கழுத்தில் அணிந்திருக்கிறாள். அவளுடைய மேல் இடது கையில் வாள் போன்ற ஆயுதத்தையும், கீழ் இடது கையில் ஓர் அரக்கனின் தலையையும் ஏந்தி உள்ளாள். மேல் வலது கரத்தால் வர முத்திரையும் கீழ் வலது கரத்தால் அபய முத்திரையும் காட்டி, நமக்கெல்லாம் அபயம் அளித்து, நம்முடைய பயங்களை எல்லாம் இல்லாமல் செய்வதற்கே தான் அங்கே கோயில் கொண்டிருப்பதாக நமக்கெல்லாம் சொல்லாமல் சொல்வதுபோல் காட்சி தருகிறாள் காளியாகிய அன்னை திரிபுரசுந்தரி. இங்குள்ள இறைவியை 16 வயது பெண்ணாக வழிபடுகிறார்கள். தேவியின் திருவுருவத்துக்கு அருகிலேயே தேவியின் சிறிய விக்கிரகமும் உள்ளது. அந்தக் காலத்தில் மன்னர்கள் போர்க்களத்துக்குச் செல்லும்போதும் வேட்டைக்குச் செல்லும்போதும் அங்கே வழிபடுவதற்காக இந்தச் சிறிய விக்கிரகத்தை கூடவே எடுத்துச் செல்வார்களாம். நித்ய கால பூஜைகள் தவறாமல் நடைபெற்று வரும் இந்தக் கோயிலில் தீபாவளி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் வலது கால் பகுதி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
திருவிழாக்கள்
இங்கு தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திரிபுரா
அருகிலுள்ள இரயில் நிலையம்
உதய்பூர்
அருகிலுள்ள விமான நிலையம்
அகர்தலா