அருள்மிகு சிதம்பரேசர் திருக்கோயில், சித்தவடமடம் (கோட்லாம்பாக்கம்)
முகவரி
அருள்மிகு சிதம்பரேசர் திருக்கோயில், சித்தவடமடம் (கோட்லாம்பாக்கம்) புதுப்பேட்டை, பண்ருட்டி – 607 108, விழுப்புரம் மாவட்டம்.
இறைவன்
இறைவன்: சிதம்பரேஸ்வரர் சிற்றம்பலநாதர் இறைவி: சிவகாமசுந்தரி
அறிமுகம்
பண்ருட்டியிலிருந்து திருவெண்ணைநல்லூர் திருக்கோவிலூர் சாலையில் புதுப்பேட்டை வந்து, காசி விஸ்வநாதர் கோயில் இருக்கும் தெருவினுள் சென்று, இடப்புறம் திரும்பினால் வீதியின் கோடியிலுள்ள சித்தவடமடம் கோயிலை அடையலாம். இப்பகுதி தற்போது கோட்லாம்பாக்கம் என்று வழங்குகிறது. சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கிய இப்பகுதி, தற்போது கோடாலம்பாக்கம் என்றாகி, அதுவும் மருவி கோட்லாம்பாக்கம் என்றாயிற்று. கோடல் என்பது செங்காந்தள் மலரைக் குறிக்கும். எனவே இம்மலர்கள் நிறைந்த பகுதியாக இஃது முற்காலத்தில் இருந்திருக்கலாம். திருவதிகைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மடம் என்பது பெரிய புராணக் குறிப்பு. திருவதிகையை மிதிக்க அஞ்சிய சுந்தரர் சித்தவடம் என்னும் இப்பகுதியில் இருந்த ஒரு மடத்தில் இரவு தங்கினார். இம்மடம் கோயிலுக்கு மேற்கில் முற்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிறிய கோயில் மேற்கு நோக்கிய சந்நிதி. இறைவன் – சிதம்பரேஸ்வரர் சிற்றம்பலநாதர், இறைவி – சிவகாமசுந்தரி. இராஜகோபுரமில்லை. மூலவர் சிறிய சந்நிதி. நேரே மூலவரையும் இடப்பால் அம்பாளையும் தரிசிக்கலாம். அம்பாள் திருமேனி உரிய இடத்தில் தனிச் சந்நிதியாக இல்லாமல், மூர்த்தம் மட்டும் நின்ற கோலத்தில் உள்ளது. மூலவர் விமானம் செடிகள் முளைத்துச் சிதலமாகியுள்ளன. திருப்பணி செய்து விமானத்தைக் காப்பாற்ற வேண்டுவது மிகவும் அவசியமாகும். கோயிலுள் மலர்ச் செடிகள் நிரம்பவுள்ளன. இத்தலம் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள நடு நாட்டு வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
இரவு உறங்கும்போது இறைவன் முதியவராக வந்து சுந்தரரின் தலைமீது கால்படும்படி வைத்து உறங்குபவரைப் போல இருந்தார். விழித்த சுந்தரர், “ஐயா மறையவரே! என் தலைமீது உம் திருவடி படுமாறு வைத்துள்ளனையே” என்று கேட்க, அம்முதியவர், “திசைஅறியா வகை செய்தது என்னுடைய மூப்பு” என்றுரைத்தார். சுந்தரர் வேறு திசையில் தம் தலை வைத்துப் படுத்தார்; அங்கும் அவர் தலைமீது திருவடி படுமாறு இறைவன் செய்யவே, கோபமுற்ற சுந்தரர் “இங்கு என்னைப் பல்காலும் மிதித்தனை நீ யார்?” என்று கேட்க, இறைவன் “என்னை அறிந்திலையோ?!” என்று கூறி மறைந்தார். இறைவனின் அருஞ்செயலை அறிந்த சுந்தரர் மனம் வருந்தி “தம்மானை அறியாத சாதியார் உளரே” என்றெடுத்துப் பாடிப் பரவினார். இவ்வாறு சுந்தரருக்குத் திருவடி தீட்சை அருளிய தலம் இதுவாகும்.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
`
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி