Friday Nov 08, 2024

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வானம்

முகவரி

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வானம், காமாட்சி அம்மன் சன்னிதி தெரு, பெரியா, காஞ்சிபுரம், தமிழ்நாடு 631502, +91-94435 97107, 98943 88279,94439 03450, 94425 53820,97874 14773.

இறைவன்

இறைவன்: கார்வானர் இறைவி: கமலா வள்ளி

அறிமுகம்

இங்கு மூலவர் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம்புஷ்கல விமானம் எனப்படும். பார்வதி இத்தல இறைவனின் தரிசனம் பெற்றுள்ளார். உலகளந்த பெருமாள்: கருவறையில் மேற்கு நோக்கிய திருமுகத்துடன் உலகளந்த பெருமாள் அருள்பாலிக்கிறார். இடக்கரத்தில் இரு விரல்களையும், வலக்கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக் காட்டி இன்னும் ஒரு அடி நிலம் எங்கே? என்று கேட்கிறார். இவருக்கு திருவிக்ரமன் என்ற பெயரும் உண்டு. தாயாருக்கு அமுதவல்லி நாச்சியார் என்பது திருநாமம்.நான்கு திவ்யதேசம்: காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள 22 திவ்ய தேசங்களில் (தொண்டை நாட்டு தலங்கள்) இத்தலம் கச்சி ஊரகம் எனப்படுகிறது. கச்சி என்றால் காஞ்சிபுரம். ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள், இந்த ஒரே கோயிலுக்குள் இருக்கின்றன. அதாவது, 108 திவ்யதேசங்களில் நான்கை, இந்த ஒரே கோயிலுக்குள் தரிசித்து விடலாம். இந்த திவ்ய தேசப் பெருமாள்கள் தொண்டை மண்டலத்தின் எப்பகுதியில் இருந்து இங்கு வந்தனர் என்பதைக் கண்டறிய முடியவில்லை. வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்த இத்தல பெருமாள்கள், ஏதோ ஒரு காலகட்டத்தில் இங்கு வந்து சேர்ந்ததாகக் கூறுகின்றனர்.நீரகத்தில் ஜெகதீசப்பெருமாளும், நிலமங்கைவல்லியும் அருள்பாலிக்கின்றனர். காரகத்தில் கருணாகரப் பெருமாளும், பத்மாமணி நாச்சியாரும் வீற்றிருக்கின்றனர். கார்வானத்தில் கமலவல்லி நாச்சியாரோடு கார்வானப் பெருமாள் காட்சியளிக்கிறார். பேரகம் உரகத்தான்: சாதாரண மனிதனாக இருந்த மகாபலி, உலகளந்த பெருமாளின் நெடிய கோலத்தை முழுமையாகக் காண முடியாமல் பதைபதைத்து நின்றான். பெருமாளும் மனமிரங்கி, மிக எளிமையாக ஆதிசேஷன் மீது காட்சியளித்தார். இந்த இடமே பேரகம் எனப்படுகிறது. இங்கு பாம்பு வடிவில் பெருமாள் வீற்றிருக்கிறார். உரகத்தான் என்பது அவரது திருநாமம். உரகம் என்றால் பாம்பு. அப்பெயரே மருவி நாளடைவில் ஊரகத்தான் என்றாகி விட்டது. இவருக்கு திருமஞ்சனம் செய்து திருக்கண்ணமுது என்னும் பாயாசம் படைத்து வழிபட்டால் புத்திரப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம். சங்கு சக்கர ஆஞ்சநேயர்: உலகளந்த பெருமாளுக்கு எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதி விசேஷமானது. சங்கு சக்கரம் ஏந்திய நிலையில், நான்கு கரங்களுடன் இவர் அருள்பாலிக்கிறார். இரு கைகள் பெருமாளை வணங்கிய நிலையில் அஞ்சலி ஹஸ்தமாக விளங்குகிறது. இவருக்கு மூலம் நட்சத்திரம், சனிக்கிழமை வழிபாடு சிறப்பாக நடக்கிறது. இவரை வழிபட்டால் துணிச்சல் அதிகரிக்கும். தீர்த்தம்:கவுரி தீர்த்தம்

புராண முக்கியத்துவம்

“கார்வானத்துள்ளாய் கள்வா’ என இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம். உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் இருக்கும் திருநீரகம், திருக்காரகம் ஆகிய இரண்டிற்கும் இல்லாத தனிச்சிறப்பு பெற்றது இத்தலம். “நீரகத்தாய்”, “காரகத்தாய்’ என திவ்ய தேசத்தை மட்டும் மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், இதை மங்களாசாசனம் செய்யும் போது மட்டும் பெருமாளின் பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்து விட்டார். திருங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம், திருக்காரகம் ஆகிய இந்த மூன்று தலங்களும் “திருஊரகத்துடன்’ வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலம் யாசகம் கேட்டார். பலியும் சம்மதித்தான். அப்போது அவர் திரிவிக்ரம மூர்த்தியாக உயர்ந்து ஓரடியால் மண்ணையும், மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து விட்டு மூன்றாவது அடியை மகாபலியின் சிரசில் வைத்தார். அவன் பாதாள உலகைச் சென்றடைந்தான். தானம் வாங்க வந்த பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தைக் காண முடியாமல் போய் விட்டதே என வருந்தி, அங்கேயே தவத்தில் ஆழ்ந்தான். அவனுடைய தவத்திற்கு இணங்கி, சத்திய விரத க்ஷேத்திரம் என்னும் காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாளாக உயர்ந்து நின்று காட்சியளித்தார். அத்தலமே ஊரகம் என்னும் உலகளந்த பெருமாள் கோயில்.

நம்பிக்கைகள்

ஆணவம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருகார்வானம் எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருநீரகம், திருக்காரகம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு.ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருகார்வானம் எனப்படும்.இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி. திருவோண நிகழ்ச்சி: திருவோணத்தை ஒட்டி இந்த கோயிலில், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. காலை 4மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 5மணிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்), மாலை 6 மணிக்கு பெருமாள், தாயார் வீதியுலா நடக்கிறது. இந்த காட்சியை தரிசிப்பவர்கள் உயர்ந்தநிலையை அடைவர் என்பது ஐதீகம்.

காலம்

1000- 2000

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கார்வானம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top