Friday Jun 28, 2024

கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், கஞ்சனூர் அஞ்சல் வழி துகலி திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN – 609804

இறைவன்

இறைவன்: அக்னீஸ்வரர், இறைவி: கற்பகாம்பாள்

அறிமுகம்

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும், சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 36வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினதிற்குட்பட்ட கோயிலாகும். கஞ்சமாற நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).பலாச வனம் என்றும், அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப்படுகிறது. தேவாரம், பெரிய புராணம், சோழ மண்டல சதகம் ஆகிய நூல்களில் இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். விருட்சம் : புரச மரம் தீர்த்தம் : அக்னி தீர்த்தம் பதிகம் : அப்பர் நவக்கிரகத் தலம் : சுக்ரன்

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் சுக்கிரன் ஸ்தலத்தில் வைணவரான வாசுதேவருக்கு ஓர் குழந்தை பிறந்தது. அவர் நாராயணனே தனக்கு குழந்தையாக பிறந்ததாக கருதி குழந்தைக்கு சுதர்சனர் என பெயரிட்டனர். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. சிறு வயதிலேயே சிவனின் மேல் ஈடுபாடு கொண்டு சிவ பக்தர்களோடே இருந்தது. வீட்டில் தாய் இட்ட நாமத்தையும் சூரனத்தையும் அழித்து விபூதி ருத்ராட்சம் அணிவதையே விரும்பியது. எப்போதும் சிவன் கோவிலிலேயே இருந்தது. விளையாடும் இடமே சிவன் கோவில் என தினமும் கோவிலிலேயே விளையாடியது. சுதர்சனிடம் அவரது தந்தை எவ்வளவோ எடுத்து கூறியும் விபூதியும் ருத்ராட்சமுமே பிடித்ததாய் இருந்தது. பூணூல் கல்யாணம் செய்வித்து நாம் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமகா விஷ்ணு. நாமத்தையும் சூரனத்தையும் இட வேண்டும் என கறாராக சுதர்சனனின் தந்தை சொல்லியும் கேட்கவில்லை. மாலை நேரத்தில் வீடு திரும்பிய மகனை தூணில் கட்டி வைத்து அடித்தார், பயன் இல்லை. மாறாக சிவன் கோவிலுக்கே போனார். தன் பேச்சை கேட்காத வரை இனி வீட்டில் இடமில்லை, உணவளிக்க கூடாதென்று சொல்லி வீட்டை விட்டு குழந்தையான சுதர்சனரை வெளியே அனுப்புகிறார். நேராக அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரையும், கற்பகாம்பிகையையும் வலம் வந்து துதித்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு எதிரே தியானத்தில் அமர்ந்தான் சுதர்சன். சிவபெருமானை துதித்தான். தன் மீது கருணை காட்டி அருள்புரிய வேண்டினான். இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான். பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் சிவபெருமான் காட்சியளித்தார் சிவபெருமான் சுதர்சனரிடம் “அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று சொன்னார். குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான். சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான். அவனுக்கு எல்லா கலைகளும் வருமாறு வரமருளினார். பின்னர் அவனை கருணையினால் நோக்கி, நீ உனது உடல் பொருள், ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீட்சா நாமம் தந்தோம். உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் என்று அருளினார். தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராட்ச மாலையணிவித்து பஞ்சாட்சர உபதேசம் செய்து, ஸ்படிக லிங்கம் கொடுத்து (ஹரதத்தர் பூஜித்த சிவலிங்கம் தனியாக கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது) சிவ பூஜா வித்யையும் தாமே உபதேசித்தார். வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார். தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார். தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியது, பொழுதும் விடிந்தது. அந்த ஊரில் இருந்த வைணவர்கள் ஒன்று கூடி, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம். இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், சிவனே பரம்பொருள் என்று நிரூபிக்க வேண்டும். முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும் என்றார்கள். ஹரதத்தரும் அக்னீசுவரரை வழிபட்டு பெருமாள் கோவிலுக்குச் சென்று தீக்குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ளபடியால் இந்த முக்காலி அடியேனுக்குக் குளிரட்டும் என்று கூறி, சிவ பரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும் கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது. தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர். ஹரதத்தருக்கு திருவிளையாடல் புரிந்து அருளிய அக்னிஸ்வரர் – கற்பகாம்பிகை ஒரு நாள் காவிரிக்கு நீராடச் சென்ற ஹரதத்தர் அங்கு ஓர் புலையனும் புலைச்சியும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார். தான் செய்த பாவத்தால் புலைச்சியானதாகக் கூறி, அப்பாவம் நீங்க வேண்டி காவிரியில் நீராட போவதாக கூறினாள். அவளை புலையன் தடுத்து நிறுத்தி விட்டு, இக்காவிரியாற்றிலுள்ள மணல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பதை அறிவாய். நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ லிங்கங்களை மிதிக்க நேரிடும். இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்த படியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் என்றான். இதனைக் கண்ட ஹரதத்தர், பார்க்கும் யாவும் சிவமயமாகக் காணும் இவனன்றோ சிவஞானி என்று எண்ணி அப்புலையனை நமஸ்கரித்து அவனது மிதியடியை தலை மீது வைத்துக்கொண்டார். அப்புலைய வடிவில் வந்தவர்கள் அக்னீசுவரரும், கற்பகாம்பிகையும் ஆவர். ஹரதத்தா, உனக்குத் திருவடி தீட்சை செய்யவே இப்படித் திருவிளையாடல் செய்தோம் என திருவாய் மலர்ந்து அருளினார் பெருமான்.

நம்பிக்கைகள்

இத்தலத்து தலவிருட்சத்தை, ஒரு மண்டல காலம், பதினாறு முறை சுற்றி வந்து வழிபட, கடன் தொல்லை தீரும் என்பது தொன்நம்பிக்கையாகும்.

சிறப்பு அம்சங்கள்

இக்கோயிலில் இருக்கும் முக்தி மண்டபம் என்றழைக்கப்படும் நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் அமைந்துள்ளன. சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடி, காட்சி அளித்த திருத்தலம் இது. நவக்கிரகத் தலங்களில், இது சுக்கிரனுடைய தலமாகும். சுக்கிரனின் நிறம் : வெண்மை. வாகனம் : முதலை தான்யம் : மொச்சை உணவு : மொச்சைப் பொடி கலந்த சாதம் வச்திரம் (துணி) : வெள்ளைத் துணி மலர் : வெண்தாமரை இரத்தினம் : வைரம்

திருவிழாக்கள்

விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, நவராத்திரி, சிவராத்திரி, ஆடிப்பூரம், மாசி மகம்.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கஞ்சனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top