திருவண்ணாமலை – காஞ்சி எல்லையில் பூமிக்கு கீழே 16 கால் மண்டபம்
திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப் பகுதியில், செய்யாறு அடுத்த புஞ்சை அரசந்தாங்கல் கிராமம் அருகே, பூமிக்கு கீழே, 20 அடி ஆழத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வரலாற்று சிறப்புமிக்க, 16 கால் கல்மண்டபம் அமைந்துள்ளது.தமிழகத்தில் தஞ்சாவூர், மதுரை, கும்பகோணம், காஞ்சிபுரம் போன்ற ஆன்மிக தலங்களில் உள்ள கோவில்களில், 16 கால் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபங்கள் அனைத்துமே, பூமியின் மேல்பகுதியில் அமையப்பெற்றவை.ஆனால், இங்குள்ள, 16 கால் கல்மண்டபம், பூமிக்கு கீழே, 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருப்பது தான், சிறப்பு அம்சம்.
திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப் பகுதிகளான அய்யங்கார்குளம், புஞ்சை அரசந்தாங்கல், கோளிவாக்கம் ஆகிய மூன்று கிராமங்கள் சந்திக்கும் இடத்தில் தான், இந்த சிறப்புமிக்க, வியப்பு அளிக்கக்கூடிய, 16 கால் கல்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது
பூமிக்கு அடியில், 20 அடி ஆழத்தில், அதிக சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படும் இந்த, 16 கால் கல்மண்டபம், 1585 — 1614ம் ஆண்டு விஜயநகர பேரரசு காலத்தில் அமைக்கப்பட்டதாக, கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பூமியின் மேலோட்டமாக பார்த்தால், மண்டபத்துக்குள் செல்லும் திசையில், கல்துாணால் ஆன நுழைவாயிலைக் காணலாம்.
அந்த நுழைவாயிலில் உள்ள கல்துாணில் நடனமாடும் மகளிர் சிலைகளும், துாணின் மேற்பகுதியில் இருபுறங்களிலும் யானையுடன் கூடிய கஜலட்சுமி உருவமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கல்துாணில் புராண கதைகளைக் கூறும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
நுழைவாயிலைக் கடந்து சென்றால், 3 அடி அகலம், 20 அடி நீளத்துக்கு பூமிக்கு அடியில் வடக்கு நோக்கிச் செல்லும் விதமாக, கல் படிக்கட்டுகள் அமைத்து, உள்ளே செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது
அதன் வழியாக உள்ளே இறங்கிச் சென்று பார்த்தால், 20 அடி அகலம் உடைய, 16 கால் கல்மண்டபம் கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. கல்மண்டபத்தை சுற்றி வருவதற்கு வசதியாக, 4 அடி அகலத்துக்கு உள் நடைபாதையும், அதன் நடுவே நடவாவி கிணறும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சுவாமிகள், இந்த, 16 கால் கல்மண்டபத்தில் உள்ள நடவாவி கிணற்றில் இறங்கி நீராடிச் செல்வது, விசேஷமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து, மறுநாள், செய்யாறு அருகே அய்யங்கார்குளம் கிராமத்தில் உள்ள சஞ்சீவராயர் கோவிலில் இருந்து ராமபிரான், சீதா பிராட்டி, லட்சுமணர் ஆகியோருடன் சஞ்சீவராயர் கிணற்றில் இறங்கி நீராடிச் செல்வதும் முக்கிய நிகழ்வாக உள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம், செய்யாறு செல்லும் சாலையில், அய்யங்கார்குளம் கிராமத்தில் இறங்கி, இந்த, 16 கால் கல்மண்டபப் பகுதிக்குச் செல்லலாம்.