வைத்தியநாதர் கோயில் (ஜோதிர்லிங்கம்), ஜார்க்கண்ட்
முகவரி
வைத்தியநாதர் கோயில் (ஜோதிர்லிங்கம்), தேவ்கர் மாவட்டம், ஜார்க்கண்ட் 814112
இறைவன்
இறைவன்: வைத்தியநாதர் இறைவி: தையல்நாயகி
அறிமுகம்
வைத்தியநாதர் கோயில், தேவ்கர் அல்லது பைத்தியநாத் கோவில் என்பது இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சந்தல் பர்கனா பிரிவுக்குட்பட்ட தேவ்கர் மாவட்டத்தில் உள்ள தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். இது சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இராவணன் இத்தலத்தில் சிவனை வணங்கி வரங்கள் பெற்றான் என்பது ஐதீகம். இராவணன் தனது பத்து தலையையும் சிவனுக்காக ஒன்றன் பின் ஒன்றாக வெட்ட முன்வந்தான். அவனுடைய பக்தியைக் கண்ட சிவபெருமான் இராவணன் காயம்பட்ட போது வைத்தியராக வந்து காப்பாற்றினார். அவர் மருத்துவராக தோன்றியதால் அவர் இந்த கோவிலில் வைத்யா என்றும் அழைக்கப்படுகிறார். புனிதமான தலமாகக் கருதப்படும் இவ்விடத்துக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட யாத்திரீகர்கள் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விடம் பாபா தாம் அல்லது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுவதுண்டு இந்த ஜோதி லிங்கத்தைச் சுற்றி 21 கோயில்கள் உள்ளன. இக்கோயிலில், பார்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்கள் உட்படப் பல கடவுளருக்கான கோயில்கள் உள்ளன. ஆனி மாதத்தில் பல நூறாயிரம் யாத்திரீகர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். இவர்கள் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் வரை கால்நடையாக இக் கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இத்தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தாக் பாம் என அழைக்கப்படும் இவர்கள் இப் பயணத்தின்போது ஒரு இடத்தில் கூட நிற்பதில்லையாம்.
புராண முக்கியத்துவம்
முன்னொரு யுகத்தில் வீரமகேந்திரபுரி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சூரபத்மன் என்ற அசுரன் அரசாண்டு வந்தான். அவன் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் செய்து 1008 அண்டங்களையும் 108 சதுர்யுகமாக அரசாள வரம் பெற்றான். அதோடு சாகாவரமும் பெற்றான். அவனது தம்பிகள் தாராசுரன், சிங்கமுகாசுரன் ஆகியோரும் சிவபெருமானிடம் பல வரங்களும் பெற்றிருந்தனர். சூரபத்மன் தேவலோகத்தையும் வென்று இந்திரன் மகன் ஜெயந்தன் முதலான தேவர்களையும் சிறைப்பிடித்து வந்தான். தேவர்களையும், அவர்களுக்கு உதவும் முனிவர் மற்றும் ரிஷிகளையும், மனிதர்கள் பலரையும் சிறையிலடைத்து கொடுமைகள் பல செய்து வந்தான். சிறைப்படாத தேவர்களும் முனிவர்களும் பிரம்மாவையும், திருமாலையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சூரபத்மனை வதம் செய்து எல்லா அண்டங்களையும் காக்க வேண்டும் என வேண்டினர். சிவபெருமான் சூரபத்மனை அழிக்கத் திருவுளம் கொண்டு முருகப்பெருமானை தம் நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாக்கினார். முருகன் வளர்ந்து பெரியவராகி தேவர்களைக் காக்க தேவசேனாதிபதியாகச் சென்று சூரபத்மனுடன் போர் செய்து தேவர்களை மீட்டு வந்தார். இந்தக் கடுமையான தேவாசுரப் போரின் போது இருபக்கங்களிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் படுகாயம் அடைந்தனர். போரில் காயம்பட்டுத் துன்பம் அடைந்தவர்களைக் காப்பாற்ற சிவபெருமான் வைத்தியராக, பார்வதி தேவியுடன் வந்து வீரர்களுக்கு வைத்தியம் செய்தார். தேவையான மருந்துகளை ஒரு மலை போல் குவித்து, அதன் மீது அமர்ந்து அம்மையும் அப்பனும் அடிபட்ட வீரர்களுக்கு உதவி செய்தனர். போரின்முடிவில் தேவர்களும், முனிவர்களும் விடுதலை பெற்றமைக்கு முருகப் பெருமானைப் பெரிதும் போற்றி வணங்கினர். இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் சிவபெருமானே என முருகப்பெருமானும், தேவர்களும் முனிவர்களும், மனிதர்களும் மருந்து மலை மேல் அமர்ந்திருந்த அம்மை அப்பனை தரிசித்து நன்றி கூறி வழிபட்டனர். யாவருக்கும் வேண்டிய வரம் தந்தார் சிவபெருமான். அப்போது தேவர்களும், முனிவர்களும், பக்தர்களும் அம்மை அப்பரை இங்கேயே இப்படியே என்றும் எழுந்தருளி உலகை ரட்சிக்க வேண்டும் என வரம் கேட்டார்கள். அதன்படியே அம்மையும் அப்பனும் ஜோதிவடிவமாக ஒரு சிவலிங்கத்தில் ஐக்கியமாகினர். இன்றும் அந்த மலைமீது இருந்து அம்மையப்பர் அருள்பாலித்து வருகின்றனர். இந்த சிவலிங்கமே இங்கே ஜோதிர்லிங்கமாக விளங்குகிறது. சிவபெருமான் வைத்தியராக வந்து வீரர்களுக்கு வைத்தியம் செய்தமையினால் வைத்திய நாதர் என்ற பெயர் பெற்றார். தலத்திற்கு வைத்திய நாதம் என்ற பெயரும் உண்டாகியது. பரளி என்ற கிராமம் அருகே இருந்தமையினால் பரளி வைத்திய நாதம் எனப் பெயர் விளங்குகிறது. சுருக்கமாக பரளி என்றும் கூறுவர். பரளி வைத்திய நாதம் தவிர பீகா பீ ரில் ஒரு வைத்திய நாதம் கூறப்படுகிறது. பீகா பீ ர் தலை நகரம் பாட்னாவிலிருந்து ஜஸித் என்னும் ஊர்வழியாக கிழக்கே சென்றால் 20. கி.மீ.ல் இத்தலம் உள்ளதாகக் கூறுகின்றனர். இராவணன் கைலாயம் சென்று சிவபெருமானை வேண்டி ஒரு லிங்கம் பெற்று இலங்கை போகும் போது இங்கேயே அந்த லிங்கத்தை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாம். அங்கே இராவணன் வழிபாடு செய்தான். கோயில் ஒரு மேட்டின் மீதுள்ளது. இங்கே கவுரி, திரிபுரசுந்தரி, காயத்திரி, விநாயகர், முருகன், காளி, பைரவர், ராமர் முதலியவர்கள் உள்ளனர். இக்கோயிலைச் சுற்றிலும் 25 கோயில்கள் உள்ளன. இங்கே சிவகங்கை என்னும் தீர்த்தக்குளம் இராவணனால் உண்டாக்கப்பட்டதும், சந்திரகூபம் என்ற தீர்த்தமும் உள்ளன. மேலும் கங்கை யமுனைத் தீர்த்தமும் கொண்டுவந்து வைத்திய நாதேசுவரருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மாசி மாதம் பிரம்மோற்சவம் இங்கே நடைபெறுகிறது. பங்குனி உத்திரமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோயில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், கதவுகள் காணப்படுகின்றன. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை சிவபெருமான் உட்கொள்ள, அதனால் உண்டான வெப்பத்தைத் தணிக்க தேவர்கள் கங்கை நீரை அவர் மீது வார்த்தனர். அது சிராவண மாதம் என்பதால், அதன் நினைவில் இந்த மேளா நடைபெறுகிறது. இதை ஒட்டி விரதமிருக்கும் பக்தர்கள், புலால் உண்பதைத் தவிர்த்து, தலை முதல் கால் வரை ஆரஞ்சு நிற உடை அணிந்து, சுல்தான்கஞ்ச் உத்திரவாகினி கங்கையில் புனித நீராடி, கங்கைக் காவடி எடுத்து, போல் பம் என உச்சரித்தவாறு பாபா தாம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். இன்று கங்கை நீராலும், ராவணனால் ஏற்படுத்தப்பட்ட சந்திரகூப் எனும் கிணற்று நீராலும் மட்டுமே ஜோதிர்லிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பம் (ப+அ+ம) என்ற சொல் மும்மூர்த்திகளைக் குறிக்கும். சிராவண மேளா மேற்கொள்ள, தங்களைப் படைத்த பிரம்மாவுக்கும், யாத்திரை போகும் வழியில் பாதுகாக்கும்ஹரிக்கும், துன்பத்தைக் மாய்க்கும் ஹரனுக்கும் நன்றி கூறுவதாக இச்சொல் அமைகிறது. சிவபெருமானை லங்கைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில், சாம கானம் இசைத்து கடுந்தவம் புரிந்த ராவணன், தன் ஒவ்வொரு தலையாகக் கொய்து அர்ப்பணித்தான். ராவணனின் தவத்தை மெச்சி, அவனுக்கு ஆத்ம லிங்கத்தை அருளி, பூமியில் வேறெங்கும் வைக்காமல் ஊருக்குக் கொண்டு செல்லுமாறு கூறியருளினார் பெருமான். ராவணனின் கை ஓங்குவதைக் கண்ட தேவர்கள் ஒரு சதி செய்தனர். அதன்படி, வருணன் மூலம் ராவணனுக்கு வயிற்று உபாதை வரச் செய்தனர். இதனால்ஹர்லாஜூரி என்ற இடத்துக்கு ராவணன் வந்தபோது, விஷ்ணுஓர் அந்தணச் சிறுவன் வடிவில் அங்கே வந்தார். அவனிடம், இந்த லிங்கத்தை கீழே வைக்காமல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, உடல் சுத்தி செய்ய எண்ணி நீர் நிலையைத் தேட, எதுவும் தென்படாததால், அம்பு எய்து ஒரு குளத்தை உருவாக்கினான். (தற்போது இது சிவ்கங்கா ஏரியாகத் திகழ்கிறது.) உடலைத் தூய்மைப்படுத்தி, ராவணன் சற்று தாமதமாகத் திரும்ப, அங்கே சிறுவனைக் காணவில்லை. அப்போது ஒரு காட்டுவாசி இடையன், அச்சிறுவன் தென்திசை நோக்கிச் சென்றதாகக் கூறினான். அதன்படி ராவணனும் செல்ல, ஒரு மயான பூமிக்கு அருகில் ஜோதிர்லிங்கம் தரையில் அமிழ்ந்திலிருந்து கண்டு துணுக்குற்றான். அதை பலவந்தமாகப் பெயர்தெடுக்க முயன்றும் அவனால் இயலவில்லை. இதில், லிங்கத்தின் மேல்பாகம் சற்றே சிதிலமடைந்தது. வேறு வழியின்றி அருகில் ஒரு குளத்தைத் தோற்றுவித்து (தற்போதுள்ள சந்திர கூபம் கிணறு) அபிஷேகம் செய்து வழிபட்டான். பின்பு இலங்கை திரும்பியவன், தினமும் இங்கே வந்து, லிங்கத்தை நீராட்டித் தொழுதான். பின்னாளில் அந்த ஜோதிர்லிங்கத்தை பைஜு என்ற வேடன் கண்டெடுத்து, பூஜித்து நற்கதி அடைந்தான். இதனால், சந்தால் பர்கானா ஆதிவாசி மக்கள் ஈசனை பைஜுநாத் என்று அழைத்தனர்.
நம்பிக்கைகள்
வைத்தியநாதம், வைத்தியநாதர் தரிசனம் செய்வதால் ஜோதிர்லிங்கம் தரிசனம் செய்த பலன் கிடைக்கும். மேலும் இங்கே மருந்தையே மலைபோல் குவித்து, அக்குன்றின் மீது அம்மையும், வைத்திய நாதரும் ஜோதிர்லிங்கமாக அமர்ந்து இருப்பதால், உயிர்களின் தீராத உடற்பிணியையும், தீராத சகலநோய்களையும் தீர்த்து வைப்பார்கள். ஓம் நமசிவாய என்ற மந்திரம் உடற்பிணியை மட்டுமல்ல பிறவிப்பிணியையும் போக்கி மோட்சத்தையும் கொடுக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். எனவே நமக்கு நோயற்ற நல்வாழ்வை இறைவன் அருளுவார். அன்னை பசியற்ற வாழ்வை வழங்குவார். முருகன் வெற்றியை நல்குவார். கணேசர் சகல நன்மையும் அருளுவார். 64 ஜோதிர்லிங்கத் தலங்கள் இருப்பதாக நம்பப்பட்டாலும் அவற்றுள் 12 தலங்கள் மிகவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களும் சிவபெருமானின் வெவ்வேறு திருவடிவங்களாக அங்குள்ள முதன்மைத் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இங்குள்ள பிரதான கோவிலான சிவன் கோவிலும் தேவி பார்வதி கோவிலும் சிவப்புக் கயிறுகள் கொண்டு இணைத்துக் கட்டப்பட்டுள்ளன.
திருவிழாக்கள்
சிவராத்திரி, நவராத்திரி, ஹோலிப் பண்டிகை, தீபாவளி, கார்த்திகை முதலிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சிராவண மாதம் முழுவதும் கோயில் விழாக்கோலம் பூணுகிறது. தவிர, ஜனவரி பஞ்சமி மேளா, மார்ச் மகா சிவராத்திரி, பவுர்ணமி முக்கிய விழாக்கள். ஆதிசங்கரர் தன் துவாதச ஜோதிர்லிங்கங்களைப் போற்றும் சுலோகத்தில், இவரைப் போற்றியுள்ளார்.
காலம்
2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
ஜார்க்கண்ட் அரசாங்கம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஜச்சித்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஜச்சித்
அருகிலுள்ள விமான நிலையம்
தியோகார்