Sunday Jan 19, 2025

வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணன் கோயில், திருநெல்வேலி

முகவரி :

வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணன் கோயில்,

வீரகேரளம்புதூர்,

திருநெல்வேலி மாவட்டம் – 627861.

இறைவன்:

நவநீத கிருஷ்ணன்

அறிமுகம்:

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வீ.கே.புதூர் என்னும் வீரகேரளம்புதூர் கிராமத்தில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான நவநீத கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அருளும் இறைவனை ‘தமிழகத்தின் குருவாயூரப்பன்’ என்று போற்றுகிறார்கள்.

திருநெல்வேலி – தென்காசி சாலையில் உள்ள ஆலங்குளத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசி – பாவூர்சத்திரம் – சுரண்டை வழியாக 21 கிலோமீட்டர் தூரத்திலும், தென்காசி – ஆய்க்குடி – சாம்பவர்வடகரை – சுரண்டை வழியாக 18 கிலோமீட்டர் தூரத்திலும், சங்கரன்கோவில் – வீரசிகாமணி – சுரண்டை வழியாக 30 கிலோமீட்டர் தொலைவிலும், சுரண்டையில் இருந்து 5 கிலோமீட்டரிலும் வீரகேரளம்புதூர் என்னும் வீ.கே.புதூர் இருக்கிறது.

புராண முக்கியத்துவம் :

‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. கண்ணன் துவாரகைக்கு வெளியே இருந்தபோதெல்லாம், துவாரகையை காத்தவர் கருடன். “வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியில் விளங்குவாய்” என்று கருடனுக்கு திருமால் வரமளித்துள்ளார். கருட தரிசனம் உள்ளத்தில் உற்சாகம், ஊக்கத்தை உண்டாக்கும். ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனம். எதிரிகளை முறியடிக்கும் நேர்மறை அதிர்வலைகளை கருட தரிசனம் அருளும். கருடனைக் கண்டாலே காரிய வெற்றி கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்த வீரகேரளம்புதூரை, வைணவத்தை தழுவிய மன்னன் ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அவர் கருடனின் பெருமைகளை அறிந்து அனுதினமும் அவரை வணங்கிய பிறகே தன்னுடைய பணிகளைத் தொடங்குவார். திருமாலின் வாகனமும், அணுக்கத் தொண்டரும், நித்ய சூரியுமான கருடனை, காலை உணவுக்குமுன் தரிசிப்பதை அந்த மன்னன் வழக்கமாக வைத்திருந்தார். வீரவைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள். கருடனைக் கண்டதும் ‘மங்களானி பவந்து’ என்று மனதுக்குள் சொல்லி தரிசனம் செய்த பிறகே உணவருந்துவார்கள். மன்னனும் அதே போல செய்து வந்தார். இதனால் அவர் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக அமைந்தன.

ஒரு நாள் வழக்கம் போல கருட தரிசனத்துக்காகக் காத்திருந்தார் மன்னன். அவருடன் பணியாளர்களும் காத்திருந்தனர். வெகுநேரமாகியும் வானில் கருடன் தென்படவில்லை. அரசரும் ‘கருட தரிசனம் இன்றி, இந்த நாள் கடந்து விடுமோ’ என்று தவித்தார். நேரம் கடந்து கொண்டிருந்தது. பசி மயக்கத்தில் சோர்ந்து போயினர் பணியாளர்கள். பசியைப் பொறுக்க இயலாத அரண்மனைப் பணியாளர்கள், ஒரு தந்திரம் செய்தனர். உடனே செயற்கையாகக் கருடன் போன்ற ஒரு பொம்மைப் பறவையைத் தத்ரூபமாகத் தயார் செய்தனர். அதனை ஒரு மரத்தின் உச்சியில் கட்டிவைத்தனர். பின்னர் அரசரிடம் வந்து, “அரசே! அதோ பாருங்கள், மரத்தின் உச்சியில் கருடன் ஒன்று இருக்கிறது” என்று தாங்கள் செய்த கருடப் பறவையைக் காட்டினர். அரசன் மகிழ்ச்சி பொங்க, பக்திப்பரவசத்துடன் “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று மனதில் கூறிக்கொண்டே பேரானந்தம் கொண்டார்.

அடுத்த கணம் யாரும் எதிர்பாராத விதமாக, மரத்தில் கட்டிவைத்திருந்த பொம்மைக் கருடன் உயிர்பெற்று விண்ணில் பறந்து சென்று மறைந்தது. அரசரோ கருட தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்தார். பணியாளர்களோ பயத்திலும், வியப்பிலும் அரசரிடம் சென்று உண்மையைக் கூறிவிட்டனர். அரண்மனைப் பணியாளர்களின் செயலுக்காக மன்னன் கோபப்படவில்லை. தன்னுடைய பக்திக்காக கருட பொம்மைக்கு உயிரூட்டிய திருமாலின் கருணையை நினைத்து உள்ளம் உருகினார். ஒரு சில நாளில் மன்னனுக்கு திடீரென்று உடல்நலம் குன்றியது. அவர் படுத்தபடுக்கையானார். மூன்றாம் நாள் திருநாடு (வைகுண்டம்) அடைந்தார்.  இதையறிந்த இவ்வூர் மக்கள், “தன் பக்தனான அரசரை, திருமால் வைகுண்டம் அழைத்துச் சென்றுவிட்டார்” என்று கூறி சிலிர்த்தனர். இந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவானதுதான் வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணன் கோவில்.

நம்பிக்கைகள்:

திருமணம் தடை அகல, புத்திர பாக்கியம் கிடைக்க, மாங்கல்ய தோஷம் நீங்க, நெஞ்சக நோய் தீர, எதிரிகளை வெற்றிபெற, அதிகாரப் பதவி கிடைக்க, இங்கு வந்து நவநீத கிருஷ்ணனை வழிபட்டுச் சென்றால் விரைவில் பலன் கிடைக்கும் என்கிறார்கள். 41 நாள் விரதம் இருந்து இத்தல இறைவனை வழிபட வேண்டும் என்பதும், தமிழ் மாதக் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு தரிசித்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

பாண்டிய மன்னர்களால் மதுரைக்குத் தெற்கே எழுப்பப்பட்ட ஒரே வைணவக் கோவில் இது என்று கூறப்படுகிறது. மன்னர்களின் ஆட்சி காலத்தில் தென்காசிக்கு அடுத்து, பெரிய ஊராக வீரகேரளம்புதூர் விளங்கியுள்ளது. இவ்வூரில் தாமிரபரணியின் ஊட்டாறுகளான ‘சித்ரா நதி’யும் (சிற்றாறு), ‘அனுமன் நதி’யும் ஒன்று சேருமிடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் இங்குள்ள சித்ரா நதிக்கரையில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி இருந்ததாகவும், நவநீத கிருஷ்ணன் கோவில் கட்டுவதற்காக, சித்ரா நதி தெற்கு நோக்கித் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விநாயகர் சிலை தற்போது கிருஷ்ணன் கோவிலுக்குள் இருக்கிறது.

திருமாலின் மார்பில் நிரந்தரமாக வசிக்கும் மகாலட்சுமியின் அருட்பார்வையால், இவ்வூரே செழிப்பாக உள்ளது. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளரவைக்கும் சக்தியுண்டு. நல்ல தெய்வீக சக்திகள் நிறைந்த சூழ்நிலையில் நிச்சயமாக கருடன் வாசம் செய்வார். “பறவைகளுள் நான் கருடன்” என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறியுள்ளார். வானில் கருடன் வட்டமிட்டபிறகே கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இத்தகைய தெய்வீக அதிர்வலைகள் நிரம்பிய வீரகேரளம்புதூரில், எழில்மிகுந்த சித்ரா நதிக்கரையில் நவநீதகிருஷ்ண சுவாமி ஆலயம் அமைந்திருப்பது சிறப்புக்குரியது.

இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவநீத கிருஷ்ணன் சிலை, இந்த ஊருக்கு அருகே உள்ள கீழப்பாவூரில் செதுக்கப்பட்டதாகவும், மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தில் வடிக்கப்பட்டதாகவும் இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றன. குருவாயூரில் உள்ளது போன்றே, இந்த ஆலய நவநீத கிருஷ்ணனின் தோற்றம் இருக்கிறது. கையில் வெண்ணெயுடன் அருள்பாலிக்கிறார், இத்தல நவநீதகிருஷ்ணன். ஆலயத்தின் உட்பிராகாரத்தில் தசாவதார மூர்த்திகளும் விக்கிரங்களாக நின்ற நிலையில் ஒரே இடத்தில் எழுந்தருளியுள்ளனர். பன்னிரு ஆழ்வார்களும் இங்குள்ளனர். மூலக்கருடன், பொருத்துக்கல், தங்கக் கொடி மரம், நவக்கிரகங்களும் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கியுள்ள இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புகளைக் கொண்டது.

திருவிழாக்கள்:

       இந்த ஆலயத்தில் முன்பு 11 நாள் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு பங்குனி உத்திரம் உற்சவம் சிறப்பாக நடக்கிறது. பங்குனி மாத கார்த்திகை நட்சத்திரம் அன்று கொடியேற்றி 10 நாள் திருவிழா வெகு உற்சாகமாக நடைபெறும். ஆடி சுவாதி, வளர்பிறை பஞ்சமி, கோகுலாஷ்டமி, விஜய தசமி பரிவேட்டை, ரோகிணி நட்சத்திரம் ஆகிய நாட்களில் இங்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. தினமும் ஆறுகால பூஜை நடைபெறும்

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வீரகேரளம்புதூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தென்காசி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை மற்றும் திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top