வடலூர் சிவன் கோயில்
முகவரி
வடலூர் சிவன் கோயில், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607 302.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
வடலூர் என்றாலே வள்ளலார் தான், அங்கு கோயில் என்றாலே சபை தான். இங்கு ஒரு சிவன் கோயிலும் உள்ளது. வடலூர் என்பது சென்னை – கும்பகோணம் நெடுஞ்சாலையும், கடலூர்-சேலம் நெடுஞ்சாலையும் சந்திக்கும் பெரும் சந்திப்பு. இங்குசில நூற்றாண்டுகளின் முன்னர் ஒரு கோட்டையும் இருந்துள்ளது. இந்த கோட்டை தற்போது காணப்படவில்லை அதன் எச்சங்கள் மட்டும் காணக்கிடைக்கின்றன. இது சத்தியஞான சபையின் கிழக்கு பகுதியில் இருந்த ஓர் பகுதி.தற்போது கோட்டைக்கரை எனப்படுகிறது. கும்பகோணம் பகுதியில் இருந்து வரும் சாலை நாற்சந்தியில் சேருமிடத்திற்கு முன்னால் இடதுபுறம் பரமேஸ்வரி திருமணமண்டபம் உள்ளது அதன் எதிர்புறம் சிறிய சந்து ஒன்றின் வழி சென்று வலது புறம் திரும்பினால் சிவன் கோயிலை அடையலாம். இக்கோயில் வடக்கு பார்த்த திருக்கோயில்.. ஆம் இது ஒரு கனகதுர்க்கா கோயில், கனகதுர்க்கா வடக்கு நோக்கியபடி இருக்க அடுத்த சன்னதியில் மிகபெரிய லிங்க வடிவில் சிவன் கிழக்கு நோக்கியுள்ளார். லிங்க பாணம் ஆளுயரத்தில் இருக்க, ஆவுடையார் பெரிய வண்டி சக்கரம் அளவில் இருக்க மலைக்க வைக்கிறது அதன் கம்பீரம். இங்குள்ள இறைவனுக்கு பெயர் ஏதுமில்லை சிவன் சன்னதி என்றே குறிப்பிடப்படுகிறார். அடுத்தடுத்து கனகதுர்கா சன்னதியும் சிவன் சன்னதியும் ஒட்டியபடி இருப்பதால் சிவனை நேர்நின்று வணங்க இயலாது. நாம் கோமுக பகுதியில் நின்றே வணங்க வேண்டும். இந்த கோமுகத்தின் நேர் எதிரில் நந்தி சிலை உள்ளது இதற்கு பிரதோஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இறைவனின் சன்னதி வாயிலில் சண்டேசர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் பெரிய சிவன் கோயிலாக இருந்து சிதிலமடைந்த கோயிலின் மீதம் இந்த சிவலிங்கமும், கனகதுர்க்கையும் என்றே நாம் ஊகிக்க வேண்டியுள்ளது. அருகருகே வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டு, பின்னர் நகர்த்தினால் தெய்வகுற்றம் என நினைத்து அப்படியே கோயில் எழுப்பப்பட்டிருக்கலாம். வடக்கு நோக்கிய கனகதுர்க்கையின் கருவறை வாயிலில் விநாயகரும் முருகனும் இருக்க, கருவறை சுற்றில் கிழக்கு நோக்கிய சூரியன் தென்புறம் பெரிய தட்சணாமூர்த்தி, மேற்கில் நீண்ட வரிசையில் நால்வர், அகத்தியர், பார்வதி, தியானத்தில் அமர்ந்த கோல தியானேஸ்வரர், சப்த கன்னியர் ஆகியோர் சிமென்ட் சுதை வடிவில் உள்ளனர். ஆஞ்சநேயர் சன்னதி ஒன்றும் உள்ளது. ஆகம விதிப்படி அமைக்கப்படாத கோயில் என்றாலும் அப்பகுதி மக்களின் அன்புக்கு பாத்திரமான கோயில். இதனை சரஸ்வதி என்ற வயதான பெண்மணி பூஜை செய்கிறார். நாம் சென்றது காலை ஏழு மணி என்றாலும், அனைத்து மூர்த்தங்களும் நீராட்டப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்விக்கப்பட்டு இருந்தன. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோட்டைக்கரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
குறிஞ்சிப்பாடி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி